வாடகை: அறநிலையத் துறை அதிரடி!

அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் இடத்தில் கடை நடத்திவரும் உரிமையாளர்கள், ஆறு ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இழுத்தடித்ததால் அதிகாரிகள் கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மேலசத்திரம் விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், பத்துக்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. இந்தக் கடைகளுக்கு, மாத வாடகையாக ரூ.1,300 வசூலிக்கப்பட்டு வந்திருக்கிறது.
இந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்திருக்கின்றனர். பலமுறை அறநிலையத் துறை சார்பில் வாடகை பாக்கி செலுத்தக் கோரி அறிவுறுத்தியும் கடை உரிமையாளர்கள் அலட்சியமாக இருந்து வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி பத்து கடைகளின் உரிமையாளர்களுக்கும் வருகிற 15ஆம் தேதிக்குள் தலா ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் வீதம், ரூ.13 லட்சம் வாடகை பாக்கியை செலுத்தவில்லை என்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அறநிலையத் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் வாடகை பாக்கியைக் கட்டாமல் உரிமையாளர்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று (மார்ச் 17) இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வியாபாரம் செய்து கொண்டிருந்த கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-ராஜ்