மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 மா 2022

43 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைக்கப்பட்ட பி.எஃப் வட்டி: காரணம் என்ன?

43 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைக்கப்பட்ட பி.எஃப் வட்டி: காரணம் என்ன?

நடப்பு நிதி ஆண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.50 சதவிகிதத்தில் இருந்து 8.10 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது. உ.பி உட்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் ஒன்றிய அரசு இந்த நடவடிக்கை எடுத்திருப்பதற்கான காரணம் என்ன?

பி.எஃப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.50 சதவிகிதமாக இருந்து வந்தது. வங்கிகளின் வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தைக் குறைப்பதற்காக ஒன்றிய அரசாங்கம் தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வட்டி விகிதத்தை 8.50 சதவிகிதத்தில் இருந்து 8.10 சதவிகிதமாகக் குறைக்கவும் செய்தது.

அந்த நேரத்தில் தமிழகம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருந்ததால், மக்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்று நினைத்து வட்டி குறைப்பு அறிவிப்பை உடனே வாபஸ் பெற்றது. அடுத்தடுத்து, பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால், வட்டிக் குறைப்பு நடவடிக்கையை முடிந்தளவு ஒத்திப் போட்டு வந்தது.

இந்த நிலையில், தற்போது உ.பி உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பி.எஃப் வட்டி விகிதத்தைக் குறைத்திருக்கிறது ஒன்றிய அரசாங்கம். வருங்கால வைப்பு நிதிக்கு 8.10% வட்டி என்பது 43 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவாகும். 1977-78-ம் ஆண்டில் பி.எஃப் வட்டி விகிதம் 8 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் இந்த முடிவினால் இந்தியா முழுக்க உள்ள ஆறு கோடி பி.எஃப் சந்தாதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். “வேறு வழியில்லாமல்தான் இந்த நடவடிக்கையை நாங்கள் எடுத்திருக்கிறோம். பி.எஃப்பில் இருக்கும் மொத்தத் தொகை 13% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், வட்டி விகிதம் 8 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது” என்ற காரணத்தைக் கூறியிருக்கிறார் ஒன்றிய அரசு அதிகாரி ஒருவர்.

எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டில் முதலீடு செய்திருந்த ரூ.12,785 கோடி முதலீட்டை சமீபத்தில் விற்றது பி.எஃப் அமைப்பு. இதன் மூலம் கிடைத்த ரூ.5,529 கோடியை நடப்பு நிதி ஆண்டுக்கான வட்டியைத் (8.1%) தர பயன்படுத்திக் கொள்ள இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 14 மா 2022