மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 மா 2022

சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பு: உண்மைநிலை என்ன?

சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பு: உண்மைநிலை என்ன?

ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரால் இந்தியாவில் நேரடியாக பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்கம் அன்றாடத் தேவைகளில் மீது பாய்ந்துள்ளதால், தினசரி அத்தியாவசியத்தேவை பொருளின் விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் சூரியகாந்தி எண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.150 என விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை உயர்வின் காரணமாக ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் ரூ‌190-ஆக அதிகரித்துள்ளது. இதுபோலவே, கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவைகளின் விலையும் எகிறி இருக்கிறது.

இந்தநிலையில் விலை அதிகரிப்புக்கான உண்மைநிலை என்ன என்பது குறித்து பேசியுள்ள, தமிழகத்தின் எண்ணெய் உற்பத்திக் கேந்திரமாக விளங்கும் விருதுநகர் மாவட்டத்தில் பிரபல எண்ணெய் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ராம் பிரகாஷ், “எங்களது நிறுவனத்தில் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய மூன்றையும் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துறோம். இங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, ராஜபாளையம், கோவில்பட்டி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு சப்ளை செஞ்சிட்டு வர்றோம். இப்போ மூலப்பொருள்கள் விலை மற்றும் கொள்முதல் விலையேற்றத்தால மார்க்கெட்டுல எண்ணெய் விலை அதிகரிச்சிருக்கு.

செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் லிட்டர் 200 ரூபாய்க்கு வித்தது, இப்போ 210 ரூபாயா உயர்ந்திருக்கு. நல்லெண்ணெய் லிட்டர் 280 ரூபாய்க்கு விக்கிறோம். தேங்காய் எண்ணெய் லிட்டருக்கு 240 ரூபாயிலிருந்து 260 ரூபாய் உயர்ந்திருக்கு. இதுல நல்லெண்ணெய் தயாரிப்பதற்கான மூலப்பொருள் 75 கிலோ எள்ளு மூட்டை 8,500 ரூபாய்க்கு விற்பனையாகுது. இதுக்கு முன்னாடி 75 கிலோ எள்ளு மூட்டை அதிகபட்சம் 7,800 ரூபாய் வரைக்கும்தான் வித்திட்டு இருந்திச்சி.

அதன்படி இப்ப விக்கிற விலைக்கு கணக்கு பார்த்தா, ஒரு கிலோ எள்ளு 115 ரூபாய் விலை ஆகுது. எங்களுக்கான தேங்காய் காங்கேயத்தில் இருந்து கொள்முதல் செஞ்சிட்டு வர்றோம். கொள்முதல் விலை 95 ரூபாயிலிருந்து 105 ரூபாய் வரைக்கும் கூடிருக்கு. பாக்கெட் பண்ணி சந்தையில் விற்பனை ஆகுற எண்ணெய் தவிர, பெட் பாட்டிலையும் எண்ணெயை சந்தைக்குக் கொடுக்கிறோம்.

அந்த வகையில், பெட் பாட்டில் ஒரு ரூபாய் விலை கூடிருக்கு. இதுக்கு முன்னாடி 8 ரூபாயாக இருந்த பெட் பாட்டில், இப்போ 9 ரூபாயாயிருக்கு. எனவே மூலப்பொருள் விலை கூடினதுனால, பொருளோட மொத்த அடக்கத்தை கணக்கு பண்ணி அதுக்கு ஏத்த மாதிரி விலையை உயர்த்தி நிர்ணயித்திருக்கோம்'' என்றார்.

இதுதொடர்பாக மேலும் பேசியுள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா , “ரஷ்யா-உக்ரைன் போரால் சமையல் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது ஒருபுறம் என்றால் அரசின் சட்டங்களால் சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். எனவே சட்டங்களில் சில தளர்வுகளை அளிக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி அடிக்கடி உயர்த்தப்படுவதால் பொருட்கள் விலையும் தாறுமாறாக உயர்கிறது. இதற்கு காரணம் வியாபாரிகள்தான் என தவறான தகவல்கள் பரப்பபடுகிறது. எனவே ஜிஎஸ்டியை சரியான நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது பொருட்களை மூன்று விதமான விலைகளில் விற்பனை செய்கின்றனர். சிறிய மளிகை கடைகளுக்கு ஒரு விலை, டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களுக்கு ஒரு விலை, மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு ஒரு விலை என விற்பனை செய்கின்றனர். சூப்பர் மார்க்கெட்டுகளில் குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் சிறிய மளிகை கடை வியாபாரிகள் பாதிப்பை சந்திக்கின்றனர். எனவே ஒரே மாதிரியான விலையை அமல்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பெட்ரோல்-டீசல்,சமையல் எரிவாயு உள்ளிட்ட கச்சாப் பொருள்களின் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து தங்கம் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்த வரிசையில் தற்போது சமையல் எண்ணெய் விலையும் இணைந்திருப்பது கவலை அளிக்கக்கூடிய விஷயமாக மாறியிருக்கிறது.

-ராஜ்

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

ஞாயிறு 13 மா 2022