மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 மா 2022

செயற்கை குட்டைகள்: பயிர்களைக் காப்பாற்றும் விவசாயிகள்!

செயற்கை குட்டைகள்: பயிர்களைக் காப்பாற்றும் விவசாயிகள்!

ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில் மழை இல்லாததால் நீர்நிலைகள் வறண்டன. கோடையை சமாளிக்க விவசாயிகள் செயற்கை குட்டைகள் அமைத்து பயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர்.

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் விவசாயம் பிரதானமாக உள்ளது. மலைச்சரிவில் விவசாயிகள் அடுக்கடுக்காக படிக்கட்டு போல் நிலங்களை தயார் செய்து சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காய்கறி பயிர்களுக்கு ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. இதன் மூலம் தண்ணீர் சிக்கனமாகப் பயன்படுத்தப்படுவதுடன், மண்சரிவு ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. மலைப்பகுதி என்பதால் மழையை நம்பி பல பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக கால்வாய், ஆழ்துளை கிணறு, சிறிய தடுப்பணைகள் மூலம் நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் முதல் மூன்று மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் கால்வாய்கள், ஓடைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.

சில இடங்களில் தண்ணீர் இல்லாததால் பயிரிடாமல் நிலங்கள் விடப்பட்டு உள்ளன. ஊட்டி அருகே தேனாடுகம்பை, எம்.பாலாடா, கப்பத்தொரை, அணிக்கொரை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கோடையைச் சமாளிக்க விளைநிலங்களில் செயற்கை குட்டைகள் அமைத்து தாங்கள் சாகுபடி செய்து உள்ள பயிர்களைக் காப்பாற்றி வருகிறார்கள்.

நிலத்தின் தாழ்வான பகுதியில் குழிதோண்டி கரை ஏற்படுத்தப்படுகிறது. பின்னர் தண்ணீர் வீணாகாமல் இருக்க சுற்றிலும் தார்ப்பாய் விரித்து ஊற்று நீர் தேக்கி வைக்கப்படுகிறது. தொடர்ந்து மோட்டார் மூலம் மேல் பகுதியில் உள்ள செயற்கை குட்டைக்கு அனுப்பி, அங்கிருந்து குழாய்கள் மூலம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

இருப்பினும் மழை இல்லாததால் செயற்கை குட்டைகளிலும் தண்ணீர் குறைந்த அளவே உள்ளது. இதனால் புதிதாக குட்டைகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள விவசாயிகள், “விளைநிலங்களில் செயற்கை குட்டைகள் மூலம் தண்ணீரை சேகரித்து விவசாயம் செய்து வருகிறோம். 15 அடி ஆழம், 30 அடி அகலத்தில் வட்டமாக அமைத்து தண்ணீரை தேக்கி வைக்கிறோம்.

இதனால் கோடைக்காலங்களில் காய்கறி பயிர்களை வளர்த்து பராமரிக்க முடியும். குளிர்காலத்துக்கு பின்னர் மழை பெய்யும் என்று எதிர்பார்த்தும் இதுவரை பெய்யவில்லை. மழை பெய்தால்தான் கோடைக்காலத்தில் விவசாயம் செழிப்பாக இருக்கும்” என்றனர்.

-ராஜ்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

ஞாயிறு 13 மா 2022