அணையாத கொடைக்கானல் காட்டுத் தீ!


கொடைக்கானல் மலைப்பகுதியில் இரண்டாவது நாளாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் தவித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் இரவில் குளிர் அதிகமாக இருப்பதுபோன்று, பகலில் வெயில் அதிகமாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கின்ற கோடைக் காலங்களில் அவ்வப்போது காட்டுத் தீ ஏற்படும். அதுபோன்று, கடந்த இரண்டு நாட்களாக இங்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு கொடைக்கானல் அருகே மச்சூர் வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டு பரவ ஆரம்பித்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை(மார்ச் 11) காலையில் மச்சூர் மலை பகுதியில் மயிலாடும் பாறை என்னும் இடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியது. வெயிலின் தாக்கத்தினால் செடிகள் அனைத்தும் காய்ந்த நிலையில் இருப்பதால், காட்டுத் தீ கொழுந்துவிட்டு மளமளவென எரிந்து வருகிறது. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் பரவி வரும் காட்டுத் தீயால் மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்களும் தீயில் எரிந்து சாம்பலாகின. வனப்பகுதிக்குள் வசித்து வந்த விலங்குகளும், பறவைகளும் இடம்பெயர்ந்து வருகின்றன.
#WATCH | A forest fire has broken out near Kodaikanal hills in Tamil Nadu's Dindigul district. pic.twitter.com/DlHDhbZsMX
— ANI (@ANI) March 11, 2022
தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயால் தோகைவரை, மச்சூர், பெருமாள்மலை உள்ளிட்ட பகுதிகளும், வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில், கொடைக்கானல் எம்.எம்.தெரு குடியிருப்பு பகுதியின் அருகில் உள்ள வருவாய் நிலத்திலும் திடீரென தீ ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியது. எப்படியோ ஒருவழியாக குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர்.
காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் கடுமையான வெயில் காரணமாக தீ பிடித்ததா அல்லது யாரேனும் தீ வைத்தார்களா என்றும் வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-வினிதா