மின்சாரம் பாய்ச்சி கொலை முயற்சி: இருவர் பலி!

திருவண்ணாமலையில் முன்விரோதம் காரணமாக, மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி செய்தபோது, மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகேயுள்ள சொரகொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரண்ராஜ். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் நில தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் சரண்ராஜை கொலை செய்ய ஏழுமலை திட்டம்போட்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு சரண்ராஜ் தனது மாட்டுக் கொட்டகையில் உள்ள இரும்புக் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயம் அங்கே வந்த ஏழுமலை மின்சார வயரை எடுத்து சரண்ராஜ் மீது மின்சாரம் பாய்ச்சிக் கொல்ல முயன்றுள்ளார். அப்போது கண் விழித்துப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சரண்ராஜ் கூச்சல் போட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரேணுகோபால் ஓடி வந்து ஏழுமலையை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது அவர் ஏழுமலை கையில் வைத்திருந்த மின்சார வயரை தவறுதலாக தொட்டுள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து ஏழுமலையும், சரண்ராஜை காப்பாற்ற வந்த ரேணு கோபாலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கலசபாக்கம் போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-வினிதா