அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்த மதுரை ஆட்சியர்!


சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் சைக்கிளில் தன்னுடைய அலுவலகத்திற்கு சென்றார்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தில் ஒருநாள் அரசு அதிகாரிகள் பொது போக்குவரத்து மூலமாகவோ அல்லது நடந்தோ அல்லது சைக்கிள், மின் சைக்கிள் வாகனங்களின் மூலமாகவோ அலுவலகம் வர வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி, அரசு அலுவலர்கள் வாரத்தில் ஒருநாள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.
அந்த வரிசையில், கடந்த வாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் உத்தரவொன்றை பிறப்பித்திருந்தார். அதில், வாரம்தோறும் புதன்கிழமையன்று பேருந்துகள் அல்லது சைக்கிளை பயன்படுத்தியோ அல்லது நடந்தோ அரசு அதிகாரிகள் அலுவலகத்திற்கு வர வேண்டும். அதுபோன்று அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களும் முடிந்தவரை பொது போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், தான் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் புதன்கிழமையான இன்று(மார்ச் 9) மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், தான் தங்கியிருக்கும் முகாம் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் சென்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக புதன்கிழமைகளில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் பசுமையானமுறையில் பயணம் மேற்கொள்ள வேண்டும். அதாவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பயணங்களை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முன்னுதாரணமாக இன்று நான் அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்தேன். அனைவரும் சுற்றுச்சூழலையும், இயற்கையையும், பூமித் தாயையும் பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
-வினிதா