மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 மா 2022

மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை: கெட்ட போரிடும் உலகை வேரோடு சாய்க்க...

மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை: கெட்ட போரிடும் உலகை வேரோடு சாய்க்க...

நா. மணி

கல்லூரியில் முத்தமிழ் விழாவில் ‘முருக விஜயம்’ என்றொரு நாடகம் போட்டோம். கல்வியில் வணிகமயம் பற்றிய நாடகம் அது. முருகனாக கதாபாத்திரம் ஏற்று நடத்திய மாணவியின் பங்களிப்பு மிகுந்த பாராட்டைப் பெற்றது. நாடகம் முடிந்து சில மாதங்கள் கழித்து, தான் விரும்பியவருடன் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார் அந்த மாணவி. அவர் தான் வீட்டுக்கு மூத்த பெண். அவருக்கு அடுத்து ஒரு பெண் மற்றும் ஓர் ஆண். இவர் வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதை அவருடைய தந்தையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த இளைய மகளைப் பள்ளியை விட்டு நிறுத்தி, திருமணம் செய்து கொடுத்து விட்டார். புலம்பெயர்ந்த தொழிலாளியாக ஈரோடு வந்தவர் அவர். பின்னர் சுய தொழில் செய்து நன்கு முன்னேற்றம் அடைந்தார். தான் சேர்த்த சொத்துகளை விற்றுவிட்டு சொந்த ஊருக்கே சென்று விட்டார். இந்த நிகழ்வு, இன்றும் எங்களுக்குப் பெரும் துயரமாக இருக்கிறது. இரண்டாம் ஆண்டு படிக்கும்போது திருமணம் செய்து கொண்ட அவர் படிப்பையும் தொடர முடியவில்லை. கல்லூரிப் படிப்பு முடித்து இவர் திருமணம் செய்து கொண்டிருந்தால், அவரது படிப்பும் முடிந்திருக்கும். தங்கையும் குழந்தை திருமணத்தில் இருந்து தப்பி இருக்கலாம். முருகன் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது.

இந்த வாரம் முதுகலை முதலாண்டு படிக்கும் பெண்ணின் திருமணத்துக்குச் சென்றிருந்தோம். படிப்பிலும் பண்பிலும் வகுப்பில் முதல் மாணவி அவர்தான். திருமண அழைப்பிதழைக் கொண்டு வந்து நீட்டியதும் மனம் ‘பக்’ என்றது. திருமணத்தன்று இரவு அவரது பெற்றோரோடு பேசிக் கொண்டு இருந்தோம். மிகச் சிறந்த மாணவி படிப்பை விட்டு நிறுத்தி விடாதீர்கள் என்றோம். மகளுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை கனவுகள் இருப்பதாகவும் அதை நிறைவேற்றுவோம் என்று கூறினர். திருமணம் முடிந்ததும் மகப்பேறு நிலையை அடைந்துவிட்டால் என்ன செய்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் கேட்கவில்லை. படிப்பதிலும் பண்பிலும் சிறந்து விளங்கும் பெண்ணுக்கு ஏன் இப்போது திருமணம் என்ற கேள்விக்கு அவர் பெற்றோர் மூன்று காரணங்களை முன் வைத்தனர்.

1. இப்போது வயது 21. இதைவிட்டால் அடுத்து 27இல்தான் குரு பலன்.

2. 21 வயது ஆகிவிட்டது. இப்போது திருமணம் செய்துவிட்டால் ஒரு பாதுகாப்பான மனநிலையை நாங்கள் எட்டி விடுவோம்.

3. நல்ல சம்பந்தம். விட்டுவிட மனமில்லை. தொடர்ந்து படிக்க உத்தரவாதம் அளித்து உள்ளார்கள்.

இதே மனநிலையில், இதே காரணங்களைச் சொல்லி திருமணம் செய்விக்கப்பட்ட ஒரு பெண்ணை நான் அறிவேன். இளநிலை பட்ட வகுப்பில் பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் பெறுவார் என்று அவரது ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மூன்றாம் ஆண்டு இறுதி பருவத் தேர்வு நெருங்கும் நேரத்தில் திருமணம் நடத்திக்கொடுத்தனர். நல்ல மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெற்றார். தங்கப் பதக்க கனவு பறிபோனது. முதுகலை படிப்பில் சேர்ந்தார். தொடர முடியவில்லை. இப்போது கையில் இரண்டு குழந்தைகள்.

பெண் குழந்தைகளைக் கல்லூரிக்கு அனுப்பி வைப்பதே திருமணத்துக்கு முந்தைய இடைக்கால ஏற்பாடாக பல குடும்பங்களில் இருக்கிறது. ஆசை ஆசையாக சாதனைப் பெண்களாக வலம் வந்தவர்களின் சாதனைகளும் கனவுகளும் கணவனும் அறியாத மறைவிடத்துக்குச் சென்று விடுகிறது.

இத்தனை இருந்தபோதும் பெண் கல்வி, உயர்கல்வி வரை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பல பல்கலைக்கழகங்களில் பெண்களின் விகிதாச்சாரம் அதிகரித்து இருக்கிறது. பெண்களின் ஆளுமைத்திறன் மேம்பட்டு இருக்கிறது. இதுவரை ஆண்களே கோலோச்சிய துறைகளிலும் புகுந்து சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். ஆணுக்கு நிகர் என்ற நிலைக்கு இன்னும் எவ்வளவோ தூரம் முன்னேற்றம் காண வேண்டும். இன்றைய நிலை கண்டு வருத்தம் இருந்தாலும் எங்கிருந்து இந்த நிலைக்கு வந்துள்ளனர் என்று பார்த்தால் மலைப்பும் மகிழ்ச்சியும் மேலிடுகிறது.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர், நான்கில் ஒருவருக்குக் குழந்தை திருமணம் நடந்தது. இப்போது ஐந்தில் ஒருவருக்குக் குழந்தை திருமணம் என்ற நிலையை எட்டி இருக்கிறோம். உலகம் முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக பத்துக் கோடி பெண் குழந்தைகளுக்குத் திருமணம் நடந்தேறி வருகிறது. கொரோனா பெரும் தொற்றால் மேலும் ஒரு கோடி பேருக்குக் குழந்தை திருமணம் நடைபெற்று இருக்கிறது. 2030ஆம் ஆண்டில் இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று குன்றா வளர்ச்சி இலக்கு ஒன்று கூறுகிறது. இதை எப்படிச் சாத்தியம் ஆக்கப் போகிறார்களோ தெரியவில்லை. குழந்தை திருமணம் என்பதை 18 வயதுக்குக் கீழே நடப்பது என்று நாம் புரிந்துகொண்டாலும் இன்னும் அதன் ஆபத்தை நம்மில் பலர் உணரவில்லை. 10 முதல் 14 வயதுக்குட்பட்ட விதவைகள் மாத்திரம் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேல் என்கிறது ஒரு புள்ளி விவரம். இதில் நான்கு வயதுக் குழந்தைகள்கூட அடக்கம். நன்கு கவனிக்கவும். இந்த ஒரு லட்சம் என்பது குழந்தை விதைகள் எண்ணிக்கை மட்டுமே.

குழந்தை திருமணங்களால் முதலில் குழந்தையின் குழந்தமை பறி போய் விடுகிறது. குழந்தையின் கல்வி ஆரோக்கியம் எல்லாம் பெரும் கேள்விக் குறி ஆகிவிடுகிறது. குழந்தை திருமணத்துக்குப் பிறகு அதன் மீது நடக்கும் உடல், மன வன்முறைகள், குடும்ப வன்முறைகள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதது. குழந்தைப் பருவத்தில் திருமணமான கையோடு அந்தக் குழந்தையின் வயிற்றில் ஒரு குழந்தை பிறந்து விட்டால் அதன் பிறகு அந்த குழந்தையின் தவிப்பைச் சொல்லவும் வேண்டுமோ! குழந்தை திருமணம் ஆன பிறகு பலர் தனிமரமாகி விடுகின்றனர். தனது நண்பர்களை இழந்து விடுகின்றனர். தன் மேல் நிகழ்த்தப்படும் எந்தவித சுரண்டலையும் அறியாத அபலையாக நாட்கள் நகரத் தொடங்குகிறது. அறிய நேரும்போது பலரது வாழ்வே முடிந்து விடுகிறது. அவர்களின் எதிர்காலம் அழிந்து அவர் சார்ந்து இருந்த குடும்பங்கள் பலவும் நிம்மதியற்ற வாழ்க்கைக்குச் சென்று விடுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் இது தடைக்கல்லாகவும் அமைந்துள்ளது.

உடன்கட்டை ஏறுவதைக் கூட 1856ஆம் ஆண்டு வெள்ளையர்கள் வந்தே தடை செய்தனர். குழந்தை திருமணத் தடை சட்டத்தைக் கூட (குழந்தை திருமணம் என்பது அப்போது 14 வயது) ஆங்கிலேயர்களே கொண்டு வந்தனர்.

பெண் கல்வி விழிப்புணர்வு. அதிலும் குறிப்பாக உயர் கல்வி வரை ஏற்பட்டிருப்பது ஆகச் சிறந்த விழிப்புணர்வு. ஆகச் சிறந்த முன்னேற்றம். ஆனால், அந்தப் பெண் கல்வி அவர்களை தங்களைச் சொந்தக் காலில் நிற்கவும் ஆளுமைத் திறனை மேம்படுத்தவும் பயன்பட வேண்டும்.

பெண் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி இருந்தால் உலகம் இவ்வளவு போர்களும் கொலைக்களமும் இருந்திருக்காது. இவ்வளவு கொடூரமான போர்க் கருவிகள் கண்டுபிடிக்க மனம் வந்திருக்காது. ஏனெனில் பெண்ணின் மனம் தாயுள்ளம் படைத்தது. பெண் கோலோச்சும் உலகமாக இருந்திருந்தால் ஊழல் லஞ்சம் இவ்வளவு இருந்திருக்காது என பல ஆய்வுகள் கூறுகின்றன. கெட்ட போரிடும் உலகை வேரோடு சாய்க்க வேண்டும் என்றாலும் உலகில் அமைதி வேண்டும் என்றாலும் அரசியல் ஆளுகையில் அழுக்காறு குறைய வேண்டும் என்றாலும் பெண்களின் பெரும் பங்கை இந்த உலகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

கட்டுரையாளர்:

நா. மணி பொருளாதாரத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர், ஈரோடு கலை அறிவியல் கல்லூரி.

.

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

செவ்வாய் 8 மா 2022