கிச்சன் கீர்த்தனா: புதினா லஸ்ஸி

தினமும் நாம் எடுத்துக்கொள்ளும் உணவையே, கோடைக்கான சில மாற்றங்களுடன் சாப்பிடும்போது உடலுக்குக் குளிர்ச்சியும், ஆரோக்கியமும் கிடைப்பதுடன், கோடையில் தாக்கும் சில நோய்களில் இருந்தும் நம்மைக் காத்துக்கொள்ளலாம். அதற்கு இந்த புதினா லஸ்ஸி உதவும். வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு காபி, டீக்குப் பதிலாக உடலுக்குப் புத்துணர்ச்சி தரும் இந்தப் புதினா லஸ்ஸியைக் குடிக்க கொடுக்கலாம்.
என்ன தேவை?
தயிர் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய புதினா இலைகள் - 2 டேபிள்ஸ்பூன்
வறுத்த சீரகம் - அரை டீஸ்பூன்
குளிர்ந்த தண்ணீர் - அரை கப்
ஐஸ்கட்டிகள் - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
தயிரை மிக்ஸி பிளெண்டரில் போட்டு, புதினா, ஐஸ்கட்டிகள் சேர்த்து நன்கு அடிக்கவும். மேலும், இதில் தண்ணீர், உப்பு, சீரகம் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றி, 'ஜில்’ என்று பரிமாறவும்.