மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 மா 2022

விவசாயி தற்கொலை: நிதி நிறுவனத்துக்கு எதிராக வலுக்கும் குரல்!

விவசாயி தற்கொலை:  நிதி நிறுவனத்துக்கு எதிராக வலுக்கும் குரல்!

தனியார் நிதி நிறுவனம் அவமதித்ததால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு சுரேஷ், பாஸ்கரன், சின்னதுரை ஆகிய மூன்று மகன்கள் உள்ளார்கள். மூவரும் விவசாயிகள்.

விவசாயத்துக்காகச் செஞ்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 6.30 லட்சம் ரூபாய் கடன் பெற்று 2 டிராக்டர்கள் வாங்கினர். அண்ணன் தம்பிகள் மூன்று பேரும் டிராக்டரை ஓட்டி கடனை அடைத்து வந்தனர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 30,000 ரூபாய் என்ற விதத்தில் தவணையைக் கட்டி வந்துள்ளனர்

ஒரு டிராக்டருக்கான முழு கடனையும் அவர்கள் திருப்பி செலுத்தி விட்டதாகவும் மற்றொரு டிராக்டருக்கு கடன் தொகை ரூபாய் 2 லட்சம் பாக்கி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கொரோனா காலத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டு தற்சமயம் இரண்டு தவணைகள் வரை தொகை கட்டாமல் நிலுவையிலிருந்துள்ளது.

இதனால் தவணை தொகையை உடனே கட்டுமாறு நிதி நிறுவன ஊழியர்கள் அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் பணம் கட்ட முடியாததால் நேற்று தேவனூர் கிராமத்திற்கு வந்த நிதி நிறுவன ஊழியர்கள் அண்ணன் தம்பிகள் மூன்று பேரையும் ஆபாசமாகத் திட்டியதுடன், ஒரு டிராக்டரையும் பறிமுதல் செய்துகொண்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த மூவரில் ஒருவரான சின்னதுரை தனது நிலத்தில் உள்ள ஒரு மரத்தில் சேலையால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக வளத்தி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தும், போலீசார் நீண்ட நேரமாக சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதோடு சின்னதுரையின் மரணத்தால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நியாயம் கேட்டு அவரது உடலுடன் நேற்று மாலை 5 மணி அளவில் தேவனூர் கூட்டு சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

நேற்று இரவு 8 மணி வரை போராட்டம் தொடர்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த சூழலில் சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து சின்னதுரையின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களின் மீது 294b, 341, 306 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் விவசாய சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சிகள் சின்னதுரையின் மரணத்துக்குக் காரணமான நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், "குறிப்பிட்ட காலத்தில் கடன் தொகையைக் கட்டி விடுவதாக சின்னதுரை தரப்பில் கூறியும் அதை ஏற்க மறுத்த நிதி நிறுவன அதிகாரிகள் குண்டர்களை வைத்து டிராக்டரை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் சின்னதுரை தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செய்தி விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி கட்டாயப்படுத்தி விவசாயிகளை மிரட்டும் நிறுவனத்தின் மீதும் அதன் மேலாளர், டிராக்டர் பறிமுதல் செய்த குண்டர்கள் மீதும் உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்வதுடன் வேறு எங்கும் இது போன்ற நிகழ்வுகள் நிகழாமல் இருக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிராக்டரை உடனடியாக சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். மீதமுள்ள கடன் தொகை முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயி குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அதுபோன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “டிராக்டருகான கடனைச் செலுத்தாத சூழலில் ஸ்ரீராம் நிறுவனம் சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளாமல் குண்டர்களை அனுப்பி மிரட்டியதும் டிராக்டரை பறிமுதல் செய்து சென்றதும் மன்னிக்க முடியாத குற்றமாகும். இதன் காரணமாக நிதி நிறுவன அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். உயிரிழந்த சின்னதுரையின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

இனியும் இத்தகைய அத்துமீறல்கள் நடக்காதவாறு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

ஞாயிறு 6 மா 2022