மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 மா 2022

கிச்சன் கீர்த்தனா: சம்மர் ஸ்பெஷல் - யார் யார் எந்தெந்த ஜூஸ் குடிக்கலாம்?

கிச்சன் கீர்த்தனா: சம்மர் ஸ்பெஷல் - யார் யார் எந்தெந்த ஜூஸ் குடிக்கலாம்?

தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஜூஸ் குடிப்பது அவசியமாகிவிடும். இன்றைய டைட் ஷெட்யூல் வாழ்க்கை முறைக்கு உடலுக்கும் உள்ளத்துக்கும் உடனடி எனர்ஜி தரக்கூடியது பானங்களே என்றாலும் எந்த ஜூஸால் என்ன பலன் கிடைக்கும் என்பது தெரியாமலேயே நாம் பல பழச்சாறுகளை குடித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்தக் கோடையைக் குளிர்ச்சியாக்க... ஆரோக்கியத்தை மேம்படுத்த யார், யார் எந்தெந்த ஜூஸ் குடிக்கலாம்?

ஆப்பிள் ஜூஸ்

ஆப்பிள் ஜூஸைத் தொடர்ந்து குடித்துவர, தோல் சம்பந்தமான நோய்கள் தீரும். அதோடு முடி உதிர்தல், பொடுகு தொந்தரவு போன்றவற்றுக்கு நிரந்தர தீர்வு தரும். இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன. இதில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் இருக்கிறது. எனவே நீரிழிவாளர்கள் இதைச் சாப்பிடுவது நல்லது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், இதயத்துக்கு வலுவினை தரக்கூடியது. கொழுப்புச் சத்தையும் குறைக்கும். ஆப்பிள் உடல் எடையைக் குறைக்கவும், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மட்டுமின்றி புற்றுநோய் உட்பட பல நோய்களைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. புற்றுநோயாளிகள், குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், பெண்கள், எடை குறைக்க நினைப்போர் ஆப்பிள் ஜூஸை குடிக்கலாம். இதய நோயாளிகள் அளவுடன் சாப்பிடலாம்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு சிறந்த பானம். எனவே, நம்மைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அல்சரை குணப்படுத்தும். இந்த பானத்தில் வைட்டமின் பி, சி மற்றும் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் இருப்பதால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நரம்பு மண்டலத்தை அமைதியாக்கி சீராகச் செயல்பட வைக்கிறது. எலும்பு தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள், அல்சர் நோயாளிகள், 40 வயது கடந்தவர்கள், உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் பிரச்சினை இருப்பவர்கள், நரம்பு தொடர்பான பிரச்சினை இருப்பவர்களுக்கு ஏற்றது.

அன்னாசி ஜூஸ்

அன்னாசியில் வைட்டமின் பி மற்றும் சி இருப்பதால் செரிமான மண்டலம் சீராக இயங்க உதவும். ரத்தக் குறைபாடு, தொண்டைப்புண், இருமல் போன்றவற்றையும் குணமாக்கும். ஆனால், கர்ப்பிணிகள் அன்னாசி ஜூஸைத் தவிர்ப்பது நல்லது. கெட்டக் கொழுப்பை குறைக்கும். தொண்டையில் தொற்று, இருமல், தொப்பை இருப்பவர்கள் சாப்பிட பலன்கள் கிடைக்கும்.

பப்பாளிப்பழ ஜூஸ்

பப்பாளிப்பழம் உடல் நலனுக்கு உகந்தது. பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், தாமிரம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்சத்துகள் போன்ற ஏராளமான சத்துகள் உள்ளன. பழங்களில் மிக மிகக் குறைவான கலோரி பப்பாளியில்தான் உள்ளது. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்துக்கொண்டால் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம். பப்பாளி ஜூஸ் அருந்திவந்தால், உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். குறிப்பாக, கொலஸ்ட்ராலின் அளவு குறையும். கண் பிரச்னையிருப்போர், பார்வைக் குறைபாடு, வறண்ட சருமத்தினர், உடல் பருமானவர், ரத்த சோகை பாதிப்புள்ளவர்கள் சாப்பிட ஏற்றது.

திராட்சைப்பழ ஜூஸ்

மார்பகப் புற்றுநோய் செல்களை அழிப்பதால், பெண்கள் இதை அருந்தது நலம் பயக்கும். திராட்சைப்பழ ஜூஸைத் தொடர்ந்து காலையில் சர்க்கரை சேர்க்காமல் குடித்துவர, ஒற்றைத் தலைவலி குணமாகும். ஆஸ்துமாவையும் குணப்படுத்தக்கூடியது. நுரையீரலுக்கு நல்லது. மார்பகப் புற்றுநோயாளி, புற்றுநோயாளிகள் என அனைவருமே அருந்தலாம். இதயநோயாளிகள் அளவுடன் குடிக்க வேண்டும்..

மாதுளம்பழ ஜூஸ்

தினமும் ஒரு கப் மாதுளம் பழச்சாறு குடித்துவர, 15 நாட்களில் டெஸ்டோஸ்டீரான் சுரப்பின் அளவு அதிகரிக்கும். இதனால் எலும்பு, தசை தொடர்பான நோய்கள் குணமாகும். பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டால், கர்ப்பப்பை, சினைப்பைப் பிரச்னைகள் குணமாகும். சருமத்துக்கு நல்லது. பெண்கள், கர்ப்பப்பை பிரச்சினை, ரத்த சோகை பிரச்சினை உள்ளவர்கள் அருந்தலாம்.

பேரீச்சைப்பழ ஜூஸ்

பேரீச்சை ஜூஸைத் தொடர்ந்து குடித்தால், உடலில் உள்ள ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதீத ரத்தப்போக்கு பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். பற்களுக்கும் எலும்புகளுக்கும் வலு அளிக்கும். மலச்சிக்கலை தீர்க்கும். இரும்புச்சத்து நிறைந்தது. ரத்தசோகை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் அருந்தலாம்.

கேரட் ஜூஸ்

வயிற்றில் புண்கள் இருப்பவர்களுக்கு, கேரட் ஜூஸ் நல்ல மருந்து. கல்லீரலின் இயக்கத்தை சீராக்கும். சருமத்துக்கான டானிக் இது. பார்வை குறைபாடுகளை தீர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். இது, உடம்புக்கு குளிர்ச்சி தருவதால், மதிய வேளைகளில் அருந்தலாம். கோடைக்காலத்தில் உடல் சூடு தணிய கேரட் ஜூஸ் பருகலாம். சளி தொந்தரவு உள்ளவர்கள், அதிலிருந்து விடுபட்ட பின்னரே கேரட் ஜூஸைப் பருக வேண்டும். பார்வை குறைபாடுள்ளவர்கள், சீரான சருமம் கிடைக்க, முடி வளர்ச்சிக்கு, அல்சர் பிரச்சினை இருப்பவர்கள், நெஞ்செரிச்சல் தொல்லை இருப்பவர்கள் குடித்து வரலாம்.

எலுமிச்சை ஜூஸ்

எப்போதும் எலுமிச்சை ஜூஸைத்தான் பலரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதில் உள்ள வைட்டமின் பி, சி உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சருமத்தை அழகாக வைத்திருக்க உதவும். செரிமானத்தையும் அதிகரிக்கும். இந்த ஜூஸ் புற்றுநோயைக் குணப்படுத்தக் கூடிய வல்லமை கொண்டது. அசைவ உணவு சாப்பிட்ட பிறகு குடிக்கலாம். தொண்டை வலி, புண் இருப்பவர்கள், மயக்கம் வரும் பிரச்னை இருப்பவர்கள், புத்துணர்ச்சி பெற என அனைவருமே குடிக்கலாம்.

பீட்ரூட் ஜூஸ்

அல்சர் உள்ளவர்கள், தினமும் பீட்ரூட்டை ஜூஸில் தேன் சேர்த்துச் சாப்பிட்டால், அல்சர் விரைவில் குணமாகிவிடும். நாள்தோறும் பீட்ரூட் ஜூஸைப் பருகினால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறையும். ரத்த சோகை உள்ளவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் குடித்து வருவது நல்லது.

அனைத்து ஜூஸ்களுமே ஒரு வகையில் பல நன்மைகளைத் தருபவைதான் என்றாலும் ஜூஸாகக் குடிப்பதற்குப் பதில் அந்தப் பழத்தை அப்படியே சாப்பிடுவது மேலும் நல்லது என்கிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.

நேற்றைய ரெசிப்பி: காளான் மலபாரி!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

5 நிமிட வாசிப்பு

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

5 நிமிட வாசிப்பு

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

ஞாயிறு 6 மா 2022