நீதிபதிக்கு கத்திக்குத்து: அலுவலக உதவியாளர் பணியிடை நீக்கம்!

சேலத்தில் நீதிபதி பொன் பாண்டியனை கத்தியால் குத்திய அலுவலக உதவியாளர் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வரும் பொன்பாண்டியனை நேற்று, அவரது அலுவலக உதவியாளர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தின்போது நீதிபதி சுதாரித்துக் கொண்டதால், இடது மார்பில் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதையடுத்து, அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நீதிபதியை குத்திய பிரகாஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணியிட மாறுதல் காரணமாக ஏற்பட்ட தகராறில் நீதிபதியை பிரகாஷ் குத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிபதியை குத்திய அலுவலக உதவியாளர் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுருபரன் உத்தரவிட்டார்.
-வினிதா