தேயிலை மகசூல் அதிகரிப்பு: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட மக்களின் பிரதான தொழிலாக பச்சை தேயிலை விவசாயமே உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான நிலப்பரப்பில் தேயிலை பயிரிட்டு, விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். வழக்கமாக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கோத்தகிரி பகுதியில் உறைபனி பொழிவு காணப்படும்.
இதன் காரணமாக கொழுந்துகள் கருகி பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்படும். பனிப்பொழிவில் இருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க விவசாயிகள் தேயிலை செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சியும், சருகுகளை செடிகளின் மேல் பரப்பியும் பாதுகாப்பது வழக்கம். மேலும் ஒரு சில விவசாயிகள் பனிக்காலத்தில் தேயிலை செடிகளுக்கு கவாத்து செய்வதும் உண்டு.
இந்த ஆண்டில் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமிருந்தாலும் கோத்தகிரி பகுதியில் பனிக்காலத்தில் உறைபனியின் தாக்கம் காணப்படவில்லை. மேலும் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக போதுமான மழை பெய்தது. மழையின் காரணமாக நிலத்தில் ஈரப்பதம் இருந்ததால், விவசாயிகள் தங்கள் தேயிலை தோட்டங்களில் உரமிட்டு நன்கு பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல சூரிய வெளிச்சத்துடன் இதமான காலநிலை நிலவி வருகிறது. இதனால் தேயிலை செடிகளில் அரும்புகள் துளிர்விட்டு, பச்சை தேயிலை மகசூல் வெகுவாக அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து பேசியுள்ள உற்பத்தியாளர்கள் “பச்சை தேயிலை கொள்முதல் விலை குறைவாக உள்ளது. இந்த காலகட்டத்தில் பச்சை தேயிலை மகசூலும் அதிகரித்துள்ளது. இதனால் லாபம் கிடைக்காவிட்டாலும், நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
-ராஜ்*