டியூஷன் எடுக்கும் ஆசிரியர்களுக்கு நீதிமன்றம் வைத்த செக்!

டியூஷன் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சையைச் சேர்ந்த ஆசிரியை ராதா என்பவர், தனது இடமாறுதல் கோரிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று(மார்ச் 1) நீதிபதி சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்கவும் அரசு சந்தேகத்திற்கிடமின்றி போதுமான அளவு தொகையை ஒதுக்குகிறது. ஆனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு அந்த அளவிற்கான தரமான கல்வியை ஆசிரியர்கள் வழங்குகிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அரசுப்பள்ளியில் பணியமர்த்தப்படும் ஆசிரியர்களின் தரத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் தரம் தனியார் பள்ளி மாணவர்களின் அளவிற்கு இல்லை. ஆகவே அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணி, பொறுப்புகள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும். மெத்தனத்திற்கான காரணத்தை கண்டறிந்து, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களும் அறிவுத்திறன் மற்றும் நன்னடத்தை பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஆசிரியர் பணி புனிதமான பணி. ஆசிரியர்கள் சமூகத்தில் சிறப்பான அந்தஸ்தை பெறுகின்றனர். ஆகவே பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல நடத்தையுடன் அவர்கள் இருப்பது அவசியமானது. ஆசிரியர்களின் அறிவாற்றல் மூலமாக தேசத்தின் முன்னேற்றத்திற்கு தங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டும். தேசத்தின் முதுகெலும்பான இளைஞர்களை சரியான முறையில் வழி நடத்த தவறுவதும், நமது அரசியலமைப்பு பணியை முறையாக செய்யாததை போன்றதே. மாணவர்களை வடிவமைப்பதில் பெற்றோரை காட்டிலும் ஆசிரியர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
துரதிஷ்டவசமாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர் தனியாக டியூஷன் எடுப்பதிலும், பகுதி நேர வேலைகள் செய்வதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற நடவடிக்கைகள் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். இது அரசு விதிகளிலும் உள்ளது. ஆகவே இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தற்போது டியூஷன் வகுப்புகளை எடுப்பது ஆசிரியர்களுக்கு மற்றொரு தொழில் போல அமைந்துவிட்டது. பிற அரசுத்துறை அலுவலர்களை ஒப்பிடும்போது ஆசிரியர்களுக்கான வேலை நாள் மற்றும் நேரம் குறைவானது. இதன் காரணமாகவே ஆசிரியர்கள் டியூஷன் எடுப்பது போன்றவற்றை பகுதிநேர வேலையாக செய்து வருகின்றனர். இது ஆசிரியர் சமூகத்தில் புற்றுநோய் போல பரவி, பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் பேராசையை அதிகரிப்பதாக உள்ளது. இவை தொடர அனுமதித்தால் ஆசிரியர்களின் பணியில் மேம்பாடு, மற்றும் பணி பக்தியை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. கல்விமுறை மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த விவகாரம் கூடுதல் கவனத்தோடு உற்று நோக்கப்பட வேண்டும்.
உரிமைகளும், கடமைகளும் பொதுவானவை. ஒரு ஆசிரியர் தனக்கான உரிமையை கோரும்போது, அவருக்கான கடமையை முறையாகச் செய்வது அவசியம். ஆனால் தற்போது கடமைகளும், பணிகளும் கண்டு கொள்ளப்படுவதில்லை. இந்த மனநிலை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல” என்று நீதிபதி தெரிவித்தார்.
இதுதொடர்பாக நீதிபதி சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில், தமிழக முதன்மை செயலாளர் மாவட்டம்தோறும் சிறப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும். இந்த குழு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூஷன் எடுப்பது குறித்தான ஆவணங்களை சேகரித்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது புகார் அளிக்க தொலைபேசி எண் உருவாக்கி அனைத்து கல்வித் துறை அலுவலகங்கள், அரசு பள்ளிகளில் அனைவரும் பார்க்கும் விதமாக விளம்பரப்படுத்த வேண்டும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணித்தரம், கற்பிக்கும் விதம், கல்வித்தரம் போன்றவை குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் மதிப்பீடு செய்து, திருத்தங்கள் மற்றும் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் ஆசிரியர்களின் நடத்தை குறித்து கண்காணிக்கப்பட வேண்டும். நடத்தை விதி மீறல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-வினிதா