மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 மா 2022

சிறப்புக் கட்டுரை: சிவராத்திரி அலைகள்...

சிறப்புக் கட்டுரை: சிவராத்திரி அலைகள்...

ஸ்ரீராம் சர்மா

பர்வத மலை!

தனக்குவமையில்லாத் திருவண்ணாமலைக்கு அருகில், அதனிலும் உயரம் கொண்டு அமைந்த ஆதி மலை; தியானத்துக்கு ஏற்ற மோன மலை; சைவ சித்தாந்த மாமலை.

குரு நமச்சிவாய சித்தர், குகை நமச்சிவாய சித்தர் போன்ற எண்ணற்ற மகான்கள் அபூர்வ மூலிகைகள் பல கண்டு, உண்டு, இளமை கொண்டு இன்னமும் வாழ்வதாக நம்பப்படும் புண்ணிய மலை.

மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் மன்னன் நன்னன் என்பான் வந்து வழிபட்டதாக வரலாறு கொண்ட மலை.

அந்த மலையில் தியானம் கொள்ள ஏறும் எண்ணமே மானுடக் கொடுப்பினைதான் என்பார்கள் சைவக் குரிசிலோர்கள்.

இன்று அந்த மலைப் பாதை கொஞ்சம் சொகுசாகி விட்டது. ஆனால், அன்று அந்த கரடு முரடான பர்வத மலையின் உச்சியை அடைவது என்பது வாழ்நாள் சவாலாகவே அமைந்திருந்தது.

மலையேறும் வழியில் மனம் சலித்துத் திரும்பியவர்கள் பலர். பக்திப் பிடிவாதத்தோடு உச்சி கண்டு பலனடைந்தவர்கள் பற்பலர்.

காஞ்சி கடலாடியில் புற்றுகள் நிறைந்த கட்டாந்தரையில் துவங்கும் அந்த மலையடிவாரப் பாதை, போகப் போக செங்குத்தாக நிமிரும்.

குமரி நெட்டு, தண்டவாளப் பாதை எனப் பலப் பலப் பாதைகளைக் கடந்து உச்சியை நெருங்க நெருங்க நுரையீரல்கள் பிராண வாயுவுக்கு ஏங்கித் தத்தளிக்கும். ஊன்றி ஏறிப் போகும் கடுமலைப் பயணத்தில் பெருகும் வியர்வையோடு உயிரும் வழிகிறதோவென மனம் மயங்கும்.

சொட்டுத் தண்ணீரும் காணக் கிடைக்காத அந்த மலை ஓரிடத்தில் நெட்டுக்குத்தாகவே நின்று காட்டும். ஆங்கிலத் திரைப்படத்தின் சண்டைக் காட்சி போல, ஆங்காங்கே வரிசையாக கடப்பாரைகள் செருகி வைக்கப்பட்டிருக்க, அதைப் பற்றியபடியேதான் மேற்கொண்டு ஏற வேண்டும். தவறியும் கீழே பார்த்தால் தலை கிறுகிறுத்துப் போகும்.

போதும் திரும்பிவிடலாம் என்று நிமிடத்துக்கு ஒருமுறை மனம் சலிக்கும். வைராக்கியமாக உந்தி ஏறி உச்சியடைந்துவிட்டால், ஆனந்தம்! பேரானந்தம்!!

மேகங்கள் நமக்கும் கீழே உருண்டு செல்லும். சில சமயம் நம் மேலும் கூட மோதிக் கடக்கும். மூலிகைக் காற்று வீசுமிடம். சித்தர்கள் வசிப்பதாக நம்பப்படுமிடம். பரிசுத்தம். நிசப்தம். பரவசம். அனுபவித்தால் மட்டுமே அது விளங்கும்.

அருள்மிகு மல்லிகார்ஜுனரும் – ப்ரம்மராம்பிகையும் அருளும் அந்த மலை மேல் ஒரு குகை உண்டு. அங்கே, சடாமுடியோடு ஓர் “மௌன குரு” வாழ்ந்திருந்தார்.

மேனியெங்கும் திருநீறு பூசி எந்த நேரமும் கனிந்த புன்னகையோடே காட்சி தருவார். இன்று அவர் அங்கு இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் அவர் சித்தி அடைந்துவிட்டார்.

90களில் பர்வத மலையேறிச் சென்று ஈசனையும் உச்சிக் குகையில் குருநாதரையும் தரிசித்து வருவது எனக்கு வழக்கம்.

மலையேறி வருவோரையெல்லாம் அன்போடு குகையில் தங்க வைத்து தன் கையாலேயே கஞ்சி தயாரித்து, சப்பாத்திகளைச் செய்து சாப்பிட வைத்து அனுப்புவது “மௌன குரு” வுக்குப் பழக்கம்.

மலையுச்சிக் கோயிலில் உண்டியல் கிடையாது. வருவோர்க்கு எல்லாம் சோறு பொங்கிப் போட எங்கிருந்து அவருக்குக் காசு வருகிறது, தெரியாது.

எளியதொரு நண்பனாக எல்லோரோடும் அன்போடு உரையாடுவார். ஆன்மிகத் தத்துவப் பாடல்களை எழுதிப் பேர் சொல்லும்படியாக இருந்தவன் என்பதால் என்னோடு கொஞ்சம் கூடவே உறவாடுவார்.

“மௌன குரு” ஆகையினால் அவர் பேசுவதில்லை. சொல்ல வேண்டியதை எல்லாம் தேர்ந்ததொரு நடன விற்பன்னரைப் போல தன் அபிநயங்கள் மூலமாகவே புரியவைத்துவிடுவார். சில சமயங்களில் அழகான தமிழில் எழுதிக் காட்டவும் செய்வார்.

அது முன்னந்திப் பொழுது...

பர்வத மலைத் தாயாரின் குறுகிய சந்நிதிக்குள் மந்தியெனக் குந்தியமர்ந்து வணங்கிய பின், மலையேறி வந்த களைப்பு தீர முகட்டுப் பாறையொன்றில் துவண்டு சாய்ந்திருந்தேன்.

“ஸ்ஸ்ஸ்” என்று ஒரு சத்தம். குகை வாயிலில் மௌன குரு!

துள்ளி எழுந்து சென்று அவரருகில் அமர்ந்த என்னிடம் இவ்வாறு எழுதிக் கேட்டார்.

“நாமெல்லாம் சிவனை நோக்கி தியானம் செய்கிறோம். சிவனும் காலை மடக்கி அமர்ந்து கொண்டு தியானம் செய்கிறாரே... எதை நோக்கி...?”

வெலவெலத்துப் போய் அவரையே உற்று நோக்கினேன்.

“நீயே பதிலைத் தேடிக் கண்டுபிடித்துக்கொள்...” என்பது போலச் சைகை செய்தவர், குலுங்கிச் சிரித்தபடியே எழுந்து குகைக்குள் சென்று தியான சுகத்தில் ஆழ்ந்துகொண்டார்.

மனம் பரபரக்க ஆரம்பித்தது.

மனிதர்களாகிய நம்மைவிட இறைவன் பெரியவன் என்பதால் தானே மனிதர்களாகிய நாம் சிவனை நோக்கி தியானம் - தவம் செய்கிறோம். பலனடைகிறோம்.

அப்படிப்பட்ட சிவனும் தியானம் - தவம் செய்கிறார் என்றால் எதை நோக்கி? அவரைவிட மேலானது ஒன்று இங்கே உண்டா? ஆமெனில் அது எது? அதனால் அவர் பெறும் பலன்தான் யாது?

பர்வத மலை முகட்டில் இருந்துகொண்டு பார்த்தால் வெகு தூரத்தில் திருவண்ணாமலை தெரியும்.

அந்த திசை நோக்கி எழுந்து நின்று கைகூப்பினேன். இடையே, சில நூறு மீட்டர் தொலைவில் பெருந்திண்டு மேகம் ஒன்று வழி மறித்து மெல்லக் கடந்துகொண்டிருந்தது.

அணுக முடியாத மலை என்பதால் வந்த பெயர்தானே அண்ணாமலை? ஆதி ஜோதியாக ஓங்கி நிற்பதுதானே அண்ணாமலை? படைக்கும் கடவுளான பிரம்மனும் - காக்கும் கடவுளான விஷ்ணுவும் ஈசனின் அடிமுடி காண முயன்றும் முடியாமல் போன ஸ்தலம் தானே அண்ணாமலை?

மும்மூர்த்திகளில் ஓங்கியவன் சிவனே என்பதுதானே அதன் பொருள். சைவ சித்தாந்த மறைகளின்படி சிவன்தானே உச்சிக் கடவுள். அந்த சிவனே எதையோ நோக்கி தியானம் செய்கிறான் என்றால், அவனுக்கும் பெரியது எது இங்கே? அது எங்கே?

வழிமறித்த மேகம் கடந்து போக, திருவண்ணாமலை தெரியத் தெரிய திருமந்திரப் பாடல் ஒன்று மனதில் உதித்தது.

ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம்

ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி

ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை

ஆதி படைத்தவை தாங்கி நின்றானே!

மலையிறங்கி வந்த பின்னும், காலம் கடந்தும், கேள்விகள் மனதில் ஓயாமல் அலையடித்துக் கொண்டேயிருந்தது. வாழ, வாழ தெளிவு பிறந்தது.

பஞ்ச பூதங்களையும், முக்கோடி தேவர்களையும், ஊழிக்கால உயிர்களையும் படைத்ததோடு மட்டுமின்றி மொத்தத்தையும் காத்தும் நிற்கும் சிவனுக்கும் பெரிது ஒன்று இங்கே உண்டா எனில்...

ஆம், உண்டு.

அது, சிவம்.

சிவம் என்றால், அன்பு!

காதலாகிக் கசிந்துருகும் பேரன்பு!

அன்புதான் சிவம். சிவம்தான் அன்பு!

அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்

அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்

அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே! - திருமூலர்.

சரி, அன்பே சிவம் என்பது புரிந்துவிட்டது. சிவன் அன்பெனும் சிவத்தை நோக்கியே தவம் செய்கிறான் என்றும் புரிந்துவிட்டது.

தவம் செய்யும் சிவன் யார்?

சிவம் என்பதும், சிவன் என்பதும் வேறு வேறா?

இல்லை, இரண்டும் ஒன்றே!

சிவம் என்பது அரூப நிலை.

சிவன் என்பது ஸ்தூல நிலை.

விரித்துச் சொன்னால், சிவம் என்பது அன்பு.

சிவன் என்பது அதன் தோற்றம்.

இரண்டும் ஒன்றே.

அன்புதான் மூலம் என்று ஆகிவிட்டதே... பிறகு, சிவன் என்னும் ஸ்தூல வடிவம் எதற்கு?

மஹா சிவராத்திரிக்குண்டான அர்த்தம் இங்குதான் மிளிர்கிறது.

மெல்லக் கேளுங்கள்...

நைமிசாரண்யத்து முனிவர்களுக்கு ஸூத ரிஷி அருளிய லிங்க புராணத்தில் விவரிக்கப்பட்டிருப்பதுபோல, உலகத் தோற்றத்தில் அன்பின் பேரலைகளை இந்தப் பிரபஞ்சம் முழுவதும் தன் தவப் பயனால் நிரப்பியவன் ஆதி பகவன்.

ஆதி பகவனது அன்பின் பேரலைகளால் நிரம்பிய அன்றைய உலகம் ரம்மியமானதொரு கருவறையாக இருந்தது. சுகம், சுகம், சுகம் என எங்கெணும் ரீங்கரித்தபடியே உயிர்கள் தழைத்து வாழ்ந்தன.

ஆயிரம் மனிதர்கள்.

இரண்டாயிரம் மரங்கள்.

ஆளுக்கு இரண்டு.

அதிகப்படியான கனிகள்.

அடுத்தவன் மரத்தை எட்டிப் பார்க்கத் தேவையில்லாத

அற்புதமான வாழ்க்கை.

பூமி உருள உருள மானிடர்க் கூட்டம் பெருகப் பெருக, பஞ்சமா பாதகங்கள் மெல்லப் புகுந்தன. கனிகள் திருடுபோக ஆரம்பித்தன. காலா வட்டத்தில் மரங்களே திருடுபோயின. பொல்லாத மனிதர்கள் பூமியின் சுற்றத்தைப் பொசுக்க ஆரம்பித்தார்கள். அன்பின் அலைகளை “ஐயோ”வெனக் கலைத்தார்கள்.

ஒன்றா இரண்டா மாரீசங்கள்? ஒன்றா இரண்டா குருஷேத்திரங்கள்? திசையெங்கிலும் திரௌபதை துகிலுரிப்புகள். சூர்ப்பணைகளின் நியாயங்கள் காற்றில் பறக்க விடப்பட்டன. கணக்கிலடங்காமல் போயின கண்ணகிச் சிலம்புகள்... அலெக்ஸாண்டர்கள் – கில்ஜிகள் – ஹிட்லர்கள்... த்தூத்தூவென ரணமாகித் துவண்டது பூமி.

“வெறுப்பின் அலைகள்” எங்கெணும் ஓங்கிப் பெருகின. “அன்பின் அலைகள்” மலிந்து மங்கிக்கொண்டேவந்தன.

“ஆதி” மனம் சலித்தான்.

படைத்தவன் பதைக்காமல் என்னதான் செய்வான்?

அவனால் உண்டாக்கப்பட்ட அன்பின் பேரலைகளால்தான் இந்தப் பாழுலகம் இன்னமும் சுற்றிக்கொண்டிருக்கிறது.

அந்த அன்பின் பேரலைகள் மட்டும் ஓய்ந்துவிடுமானால் இந்த பூமியாகப்பட்டது தன் அச்சை விட்டு அகன்று சிதிலமாகிவிடுமே என்று பரபரத்தான் படைத்தவன்.

“வெறுப்பு அலைகளை” நசுக்கி “அன்பின் அலைகளை” அதன் மேல் படரவிட்டு, இந்த உலகை அமைதிப்படுத்திவிட மனம் கனிந்தான்.

மனம் கனிந்த போதிலும், அவன் படைத்த பௌதீக விதியே அவனுக்கு எதிராக நின்றது. ஆம், ஆதிக்கு உருவம் இல்லையே.

உருவம் என்று ஒன்று இல்லாமல் போனால் ஏதொன்றையும் உற்பத்தி செய்துவிட முடியாது என்பது அவன் படைத்த பௌதீக விதி.

விதியை மீற முடியாதே.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஆதி,

“சிவன்” என்னும் ஸ்தூல வடிவத்தை எடுத்தான்.

“அன்பின் அலைகளை” இடையறாமல் உற்பத்தி செய்யத் தன் ஸ்தூல உடலை எந்திரமாக்கி, விழி கிறங்கினான். மூளும் தியானத்தை ஊடகமாக்கினான்.

அன்பை நோக்கிய சிவனது பெருந்தியானமும் – தவமும் மகா குண்டலினியாய் எழுந்து, இந்தப் பேரண்டத்துக்கு மேல் நின்று, தன் “அன்பின் அலைகளை” ஓயாமல் பூமிக்கு இதுகாறும் அனுப்பிக்கொண்டே இருக்கின்றது.

ஆம், சிவனது அன்பின் அலைகள் பாற்பட்டதால்தான் இந்த பூமி ஏதோ ஒரு முனையில் இன்னமும் பிழைத்திருக்கிறது.

தான்தோன்றித்தனமும், தற்பெருமையுமாக சீறிக் கொட்டமடிக்கும் சில்லுண்டி மனிதர்களைத் தன் நடு நெற்றிக்கண் திறந்து பொசுக்கிவிட சிவனுக்கு ஒரு நொடியே அதிகம்.

ஆனால், தகப்பன் கோபப்பட்டுவிடக் கூடாது என்று தன் இரண்டு கைகளால் அவனது கால்களை இறுகப் பற்றிக்கொள்ளும் குழந்தையைப் போல, நடு நெற்றிக் கண்ணின் இரு இமைகளும் இறுக மூடிக்கொண்டு சிவனிடம் உலக உயிர்களுக்காக இறைஞ்சிக்கொண்டிருக்கின்றன போலும்.

தன் தியான மேட்டிலிருந்து வழியும் ஓயாத அன்பின் அலைகளால் இந்த உலகைக் கருணையோடு காத்துக்கொண்டிருக்கிறான் சிவன். அந்தக் கருணைக்கு நன்றி சொல்லத்தான் இந்த “மஹா சிவராத்திரி.”

“உன் சக்திக்கு மீறி செயல்பட்டு இந்த பர்வத மலை ஏறி வந்துவிட்டதாக எண்ணாதே. உன் தகுதிக்கும் மீறி அன்பு செலுத்தி இந்த மலை உன்னைத் தன் மேல் ஏற்றிக்கொண்டது என்று உணர். அதுபோல் சக உயிர்களிடத்தில் நீயும் உன் அன்பைச் செலுத்து. அதுவே சிவ வணக்கம் என்று அறி...”

பர்வத மலை சொல்லிக்கொடுத்த தத்துவம் இதுதான். மஹா சிவராத்திரி சொல்லும் தத்துவமும் அதுவே.

ஆதி பகவனுக்கோ, தனக்கான ஸ்தூல வடிவத்தைக் கொள்ள முஸ்தீபு தேவைப்பட்டது. தாய் தந்தையர் அருளால் ஸ்தூல வடிவம் நமக்கு இயல்பாகவே அமைந்துவிட்டது. தியான ஊடகத்தின் மூலம் அன்பின் அலைகளை உண்டாக்குவது நமக்கு எளிது.

வாருங்கள், மஹா சிவராத்திரியில் சிவனோடு கலப்போம்.

நைமிசாரண்யத்து முனிவர்களைப் போல காணும் மனிதர்களை எல்லாம் அன்பால் அரவணைத்து உலவிக் களிப்போம்.

அன்பே சிவ சாதகம்!

அன்பே சிவ போதகம்!!

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 1 மா 2022