கிச்சன் கீர்த்தனா: லெமன் மஷ்ரூம் பீஸ் சேமியா புலாவ்!

எடை குறைக்க உதவும் பழங்களில் எலுமிச்சையும் ஒன்று. வைட்டமின் சி சத்தை தன்னகத்தே நிறைத்துவைத்திருக்கும் எலுமிச்சையின் நற்பலன்களை நாளும்பொழுதும் பெறும் வகையில் குழந்தைகளுக்கு ஏற்ற இந்த லெமன் மஷ்ரூம் பீஸ் சேமியா புலாவ் செய்து கொடுத்து அசத்தலாம்.
என்ன தேவை?
சேமியா - 350 கிராம்
பெரிய வெங்காயம் - 3 (நடுத்தர அளவுள்ளது)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை, ஏலக்காய் - தலா 2
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
காளான் - 200 கிராம்
பச்சை பட்டாணி - முக்கால் கப்
எலுமிச்சைச்சாறு - 4 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – அரை கப்
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
கறி மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெங்காயத்தை நீளமாக, மெலிதாக நறுக்கவும். மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். காளானைக் கழுவி மெலிதாக நறுக்கிக்கொள்ளவும். சேமியாவை வெறும் வாணலியில் வறுத்தெடுக்கவும். வறுத்த சேமியாவாக இருந்தாலும் லேசாக வறுத்துக் கொண்டால் நல்லது. பிறகு, ஒரு பாத்திரத்தில் நீரைக்கொதிக்க வைத்து உப்பு சேர்க்கவும். இதில் சேமியாவைப் போட்டு வேகவைத்து தண்ணீரை வடித்து உதிர்த்து ஆறவைக்கவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அதில் பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்துப் புரட்டவும். பின்னர், வெங்காயம், பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, காளான், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு, கறி மசாலாத்தூள், தண்ணீர் சேர்த்து, மூடிப்போட்டு 3 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு, எலுமிச்சைச்சாறு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். வேக வைத்திருக்கும் சேமியாவை இதனோடு சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லித்தழை சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.