கைரேகை இல்லாமலும் ரேஷன் பொருட்கள் வாங்கலாம்!

public

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் நேரில் வந்து தங்களது கைரேகையை பதிவு செய்து பொருள்களை வாங்கி செல்கின்றனர்.

ஆனால், கைரேகை பதிவு செய்வதில் தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. ரேஷன் கடைக்கு வயதானவர்கள் வரும்போது சில நேரங்களில் அவர்களின் கைரேகைகள் சரியாக பதிவது இல்லை. வயதானவர்களுக்கு மட்டுமில்லை, 21 வயது, 14 வயதானவர்களுக்கும் சில நேரங்களில் கைரேகை விழுவது இல்லை. அதனால், பொருட்கள் வழங்க ஊழியர்கள் மறுப்பு தெரிவித்து, திருப்பி அனுப்பி விடுகின்றனர். இந்த பிரச்சினை தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ரேஷன் கடைகளில் கைரேகை சரிபார்ப்பின்றி பொருட்களை வழங்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “நியாயவிலைக் கடைகள் வாயிலாகக் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இன்றியமையாப் பொருட்கள் வழங்கும்போது கைரேகை சரிபார்ப்பு முறை பின்பற்றப்படுகிறது. ஆதார் இணையத் தரவுத் தளம் வேலை செய்யவில்லை என்றும்,இதனால் கைரேகை சரிபார்ப்பு மேற்கொள்ள இயலவில்லை என்றும் இதனால் சில பகுதிகளில் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படாமல் குடும்ப அட்டைதாரர்கள் திருப்பி அனுப்பப்படுவது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 22 முதல் கைரேகை சரிபார்க்கும் நடைமுறையில் இடையூறுகள் நமது மாநிலத்தில் மட்டுமன்றிப் பரவலாக இதர மாநிலங்களிலும் நிகழ்ந்துள்ளன. இவை இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் உயர் அலுவலர்களின் கவனத்திற்கு உடனுக்குடன் கொண்டு செல்லப்பட்டுச் சரி செய்யப் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, இணைய இணைப்பு , தொழில்நுட்பத் தடைகளால் கைரேகை சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்பட இயலாத காலங்களில் உடனடியாக கைரேகை சரிபார்ப்பின்றி இதர வழிமுறைகளில் உரிய பதிவுகளை மேற்கொண்டு உரிய கண்காணிப்புடன் தவறாது இன்றியமையாப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் தரமாக விநியோகம் செய்யப்பட்டு உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திட வேண்டும்.

மேலும் இன்று(பிப்ரவரி 26) ரேஷன் கடைகளுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டுக் கடைகள் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அட்டைதாரர்கள் இன்றியமையாப் பொருட்களை ரேஷன் கடைகளிலிருந்து எந்தவித சிரமமுமின்றிப் பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *