மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 பிப் 2022

சிறப்புக் கட்டுரை: பார்ப்பனியப் பொருளாதார முறையும் பணப்பயன்பாடும்... பகுதி - 8

சிறப்புக் கட்டுரை: பார்ப்பனியப் பொருளாதார முறையும் பணப்பயன்பாடும்... பகுதி - 8

பாஸ்கர் செல்வராஜ்

கடைக்குச் செல்லும்போது ஒரு பொருளைப் பார்க்கிறோம். அதைக் கையில் எடுத்து இது எந்த வகையில் பயனுள்ளது, தரமானது, பயன்படுத்த ஏதுவானது என அலசும் நமது கண்கள், அடுத்து இது எவ்வளவு விலை என வினவும். முதல் பகுதி பயன்பாடு சார்ந்த பயன்மதிப்பு; இரண்டாவது பகுதி பரிவர்த்தனை மதிப்பு சார்ந்தது. இதையே காட்டுக்கு எடுத்துச் சென்று ஒரு பழங்குடியிடம் காட்டும்போது அது தேவையா, பயனுள்ளதா என்று பார்க்கும் அவரின் கண்கள், அடுத்து அதை எவ்வளவு பணம் கொடுத்து பெறமுடியும் என்று பார்க்காது. அது அவர் அறியாதது; அவருக்குப் பழக்கமில்லாதது.

பணமும் முதலாளித்துவ உற்பத்தி முறையும்...

பழங்குடிகளாக நமக்குத் தேவையான உணவு, உடை உள்ளிட்ட பொருட்களை நாமே உற்பத்தி செய்துகொள்வதில் தொடங்கி நிலபிரபுத்துவக் காலத்தில் பகுதி அளவு, சொந்த தேவைக்கும் சந்தையில் விற்று பரிவர்த்தனையின் மூலம் மற்ற பொருட்களைப் பெறுவதுமான பொருள் உற்பத்திக்கு மாறுகிறது. பின்பு முதலாளித்துவக் காலத்தில் முழுமையாக பொருட்களின் உற்பத்தி என்பது சந்தைப்படுத்தவும் நமக்குத் தேவையான பொருட்களை சந்தையில், கடையில் சென்று பெறுவதாகவும் மாறுகிறது. விவசாயப் பொருட்களின் உற்பத்தி முதன்மையாக இருந்த நிலபிரபுத்துவக் காலத்தில் அந்த உற்பத்திக்கான நிலத்தை நிலப் பிரபுக்கள் கைப்பற்றிக் கொள்கிறார்கள். முதலாளித்துவ உற்பத்தி காலத்தில் உற்பத்திக்கான மூலதனம், தொழிற்கூடம், உள்ளிட்ட கருவிகளை முதலாளிகள் கைப்பற்றிக் கொள்கிறார்கள். நிலத்திலும், தொழிற்சாலைகளிலும் நாம் கூலிகளாக மாற்றப்படுகிறோம். நமது உடலையும் திறனையும் வளர்த்துக்கொண்டு அவர்களிடம் சென்று வேலை செய்து பிழைக்கிறோம்.

பொருட்கள் அதன் பயன்பாட்டினைப் பொறுத்து பரிவர்த்தனை மதிப்பைப் பெறுவது; அந்த மதிப்பைப் பணத்தின் மூலமாகத் தெரிவிப்பது; பணம் பரிவர்த்தனை மதிப்பின் உருவமாக மாறுவது; பொருட்களைப் பணத்தின் ஊடாக பரிமாறிக்கொள்வது; சொந்தப் பயன்பாட்டுக்கு அல்லாமல் பெரும்பாலும் பரிவர்த்தனைக்காகவே பொருட்களை உற்பத்தி செய்வது; இதன் உற்பத்தியில் பங்கேற்று பெறும் பணத்தைக் கொடுத்து மக்கள் பொருட்களைப் பெறுவது; இப்படிப் பெறும் பொருட்களைப் பயன்படுத்தி மக்கள் வாழ்வது என முழுமையாக மாறுவது முதலாளித்துவ உற்பத்தி முறையாகிறது. இப்படி முழுமையாக மாறிய நாடுகளை முதலாளித்துவ நாடுகள் என்கிறோம். இதில் பணத்தின் உருவாக்கம் என்பது இந்தப் பரிவர்த்தனை வளர்ச்சியின் அடையாளம். நமது முற்கால மன்னர்கள் முதல் பிற்கால மன்னர்கள் வரை தங்க, வெள்ளி, செம்பு காசுகளை வெளியிட்டு இருக்கிறார்கள். இது வெற்று பெருமைக்காக மட்டும் இருந்திருக்காது. அன்றைய பரிவர்த்தனை தேவையின் பொருட்டுதான் வெளியிட்டு இருக்க வேண்டும்.

நிலபிரபுத்துவத்தில் வேர்விட்டு வளரும் முதலாளித்துவம்!

ஐரோப்பாவில் கிரேக்க, ரோமானிய பேரரசுகளும் இப்படியான நாணயங்களை வெளியிட்டு இருக்கின்றன. அவர்கள் நம்முடன் வர்த்தக உறவும் வைத்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்படி என்றால் நம்மிடமும் பரிவர்த்தனை, பணம் என அவர்களிடம் வளர்ந்து வந்ததைப் போன்றே முதலாளித்துவக் கூறுகள் வளர்ந்து வந்தது என முடிவுக்கு வரமுடியுமா என்ற கேள்விக்கு அந்த உலோக காசுகளின் பயன்பாடு வளர்ந்து பரிவர்த்தனை ஊடகம், வரி, வாடகை, மக்களின் வருமானம், கடன் ஆகியவற்றில் எந்த அளவுக்கு பரவலாகப் பங்களித்தது என்பதைக் கொண்டே விடைகாண முடியும். ஐந்தாம் நூற்றாண்டு வரை இருந்த ஐரோப்பிய ரோமப் பேரரசில் மேற்சொன்னவற்றுக்கு இந்த காசுகள் (in money) பகுதி அளவிலும் தானியங்கள் உள்ளிட்ட பொருட்கள் (in kind) பகுதி அளவிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் பிறகான காலங்களில் படிப்படியாக இந்த உலோகக் காசுகள் மற்றவற்றை பதிலீடு செய்து முழுமையாக உலோகப் பணமே பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது.

இதன் பொருள் உற்பத்தி அங்கே பெரும்பகுதி சந்தைக்கானதாகவும் பரிவர்த்தனை பணத்தின் மூலம் நடைபெறுவதாகவும் மாறி வந்திருக்கிறது. சுற்றிச்சுழன்ற உலோகக் காசுகள் பரிவர்த்தனையை வேகப்படுத்தி நிலத்தின் அடிப்படையிலான விவசாய பொருள் உற்பத்தியை முதன்மையாக கொண்ட நிலபிரபுத்துவ உற்பத்தியில் இருந்து சரக்குகளை உற்பத்தி செய்யும் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மாறி வந்திருக்கிறது என்று அர்த்தம். முன்பு பொதுச்சொத்தான காட்டை அடிப்படையாகக் கொண்ட வேட்டை சமூக தாய்வழி குடும்ப அமைப்பில் இருந்து நிலபிரபுத்துவ காலத்தில் தனிச்சொத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாய சமூக தந்தைவழி குடும்ப அமைப்புக்கு மாறும் இவர்கள் இப்போது கைத்தொழில் வளர்ச்சியினூடான சரக்குகளை உற்பத்தி செய்யும் முதலாளித்துவ காலத்தில் பழைய தந்தைவழி குலம், கொத்து, இனம் போன்ற அடையாளங்களை உதறுகிறார்கள். பணத்தின் மூலமாகப் பொருட்கள் வேகமாகச் சுற்றிச்சுழலும் முதலாளித்துவ உற்பத்தியின் தேவைக்கு ஏற்ப வேலை, தொழில், வர்த்தக தேவைக்கு மக்களையும் பல்வேறு இடங்களுக்கு நகர்த்துவது (Mobility) அதிகரிக்கிறது.

ஐரோப்பிய வர்க்க சமூகமும் அக்பரின் தேசிய முயற்சியும்

அது முந்தைய வசிக்கும் இடம், திருமணம் சார்ந்த பழைய தந்தைவழி இனக்குழு அடையாளங்களை உடைத்தெறிகிறது. ரோமப்பேரரசின் அடக்குமுறையை எதிர்த்து மத்திய கிழக்கில் உருவாகும் கிறிஸ்துவம் அதன் பிறகான இந்த பதினைந்து நூற்றாண்டுக் கால பொருளாதார வளர்ச்சியின்போது ஐரோப்பியர்களின் புதிய அடையாளம் ஆகிறது. முதலாளித்துவக் கூறுகளான சரக்கு உற்பத்தி, பணத்தின் மூலமான பரிவர்த்தனை வளர்ச்சியின்போது பரிமாற்ற ஊடகமாகவும் அந்தப் பரிமாற்ற மதிப்பின் உருவமாகவும் இருக்கும் உலோகப் பணத்தை தன்னிடம் குவிக்கும் வணிகர்களும் நிலபிரபுத்துவ ஆளும்வர்க்கமும் பணக்கார வர்க்கமாகவும் மற்றவர்கள் உழைக்கும் வர்க்கமாகவும் மாற்றம் காண்கிறார்கள்.

நிலபிரபுத்துவக் காலத்தில் தனது நிலத்தையும் முதலாளித்துவ காலத்தில் கைத்தொழில் உள்ளிட்ட பொருள் உற்பத்திக்குத் தேவையான உற்பத்தி கருவிகளையும் இழக்கும் பெரும்பான்மை மக்கள் பண்ணைக் கூலிகளாகவும் தொழிற்சாலை தொழிலாளர்களாகவும் மாறுகிறார்கள்.

பதினாறாம் நூற்றாண்டு இந்தியா முகலாயர்களின் ஆட்சிக் காலமாகவும் அதன் இறுதியில் அரியணை ஏறும் அக்பர், தென்னிந்திய பகுதிகளைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட மொத்த பகுதியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து முகலாய பேரரசை நிறுவுவதாகவும் இருக்கிறது. குப்தர்களின் காலத்தில் சாதிய சமூகமாக மாற்றமடையும் வடக்கு, அதன் பிறகான முஸ்லிம்களின் தொடர் படையெடுப்பின் காரணமாக உடைப்பைச் சந்தித்து வருகிறது. சமூகம் இனம், மொழி, சாதியாகவும் இந்து, முஸ்லிம் என மதரீதியாகவும் பிளவுண்டு கிடக்கிறது. இந்த பரந்த நிலப்பரப்பை கைப்பற்றிய அக்பருக்கு இங்கு வாழும் மக்களை ஒருங்கிணைத்து தனது ஆட்சியை நிலைப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. இந்து, முஸ்லிம் மதக் கூறுகளை இணைத்து சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக்கைப் போன்று இங்கிருக்கும் பல மதக்கூறுகளை இணைத்து புதிய மதத்தை உருவாக்கி அதன்மூலம் மக்களை இணைத்து பொதுவான ஒற்றை மதம் மற்றும் கலாச்சார ரீதியாக மக்களை ஒருங்கிணைக்க முனைகிறார்.

முகலாயர்களின் நாணயமும் அன்றைய பொருளாதாரமும்...

பல்வேறு இனக்குழுக்களாக இருந்து பௌத்த-சமணர்களாக ஒன்றிணைந்த மக்களை மீண்டும் சாதிய இனக்குழுக்களாக பிளந்து ஆட்சி செய்த முந்தைய பார்ப்பனிய பேரரசுகளில் இருந்து வேறுபட்டு பிளவுபட்டு கிடக்கும் மக்களை ஒன்றிணைக்க முயன்ற மாறுபட்ட முயற்சி இது. மற்ற நாட்டு மன்னர்களைப் போன்று சாதிய-இன-மத குழுக்களால் ஆன சமூகத்தை மத கருத்தியலின் மூலம் நிலவுடைமையின் அடிப்படையிலான ஒற்றை தேசிய இனமாக மாற்றுவதற்கு செய்த நேர்மையான முயற்சி இது. பொருளாதாரத்திலும் ஒருங்கிணைந்த புதிய நில அளவை, வரி முறைகளை உருவாக்குகிறார். முகலாயர்களின் காலத்தில் பல்வேறு பகுதிகளிலும் உருவாக்கப்பட்ட தங்க (மொகர்), வெள்ளி (ருபியா) நாணயங்கள் முறையே 11 கிராம், 11.5 கிராம் என ஒரே எடை கொண்டதாக இருந்ததை அம்பேத்கர் தனது நூலில் பட்டியலிடுகிறார். இது ஒற்றை தேசியத்தைக் கட்டமைக்க முயன்ற முகலாயர்களின் முனைப்பைக் காட்டும் அதேவேளை மறைமுகமாக இன்னொரு சேதியையும் சொல்கிறது.

இதே காலத்தில் ஐரோப்பிய பரிவர்த்தனை என்பது ஒரு பொருளின் மதிப்பை உலோக பணத்தில் தெரிவிப்பதாகவும் பரிவர்த்தனைகள் அந்த உலோக பணத்தைக் கொண்டு நடைபெறுவதாகவும் இருந்திருக்கிறது. அதன் பரந்துபட்ட பயன்பாட்டின் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியாலான உலோக நாணயங்களைப் பல்வேறு அளவுகளில் 0.1 முதல் 35 கிராம் வரை தங்கம் மற்றும் வெள்ளியைச் சேர்த்து அந்தந்த நாட்டு அரசுகள் வெளியிட்டு இருந்திருக்கின்றன. இந்தியாவிலோ இவ்வளவு எடைகொண்ட இந்த இரு நாணய வெளியீடு, நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் இந்த உலோக பணத்தைக் கொண்டு பரிவர்த்தனை செய்து கொண்டதற்கான முகாந்திரத்தைக் கொடுக்கவில்லை. மாறாக, ஆளும் வர்க்கத்துக்குள்ளும் மற்ற நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்துக்கும்தான் பயன்பட்டு இருந்திருக்கிறது என்பதாகவே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி என்றால் பெரும்பாலான மக்கள் என்ன மாதிரியான பரிவர்த்தனை உறவுகளைக் கொண்டிருந்தார்கள் என்ற கேள்விக்கான விடையையும் அதே புத்தகத்தின் மற்றொரு பகுதியில் அம்பேத்கரே அழகாக படம்பிடித்து தருகிறார்.

அம்பேத்கர் பார்வையில் அன்றைய பார்ப்பனிய பொருளாதார முறை!

ஆங்கிலேயேர்கள் ஆட்சிக்குப் பிறகுதான் தானியங்கள் உள்ளிட்ட பொருட்களின் அடிப்படையில் இயங்கி வந்த இந்தியப் பொருளாதாரம் பணத்தில் வழியில் இயங்க ஆரம்பித்தது (Change from kind economy to cash economy). அதுவரையிலும் இங்கே பணமல்லாத மற்ற வழிகளில்தான் பெரும்பகுதி கொடுப்பனவுகள் (Payments) இருந்தது. அரசிடம் இருந்த நிரந்தரமாக சம்பளம் பெறும் வகையிலான ராணுவத்தின் அளவு மிகக்குறைவு. பெரும்பகுதி ராணுவம் ஜாகிர்தார்கள் மற்றும் பெருநிலவுடைமையாளர்களினால் அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் தானியங்கள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு பராமரிக்கப்பட்டது. பரம்பரையாக வருமானம் பெறுபவர்கள் மற்றும் காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு சம்பளமாக நிலம் மானியமாக வழங்கப்பட்டது. நிலத்தில் வேலை செய்பவர்களுக்கும் மற்ற பணியாளர்களுக்கும் குறிப்பிட்ட கால அளவுகளில் தானியங்கள் வழங்கப்பட்டன. அரசு வரியாக பெறுவதும் அது பணியாளர்களுக்குக் கொடுக்கும் சம்பளமும் தானியங்கள் உள்ளிட்ட பொருட்களினால் ஆனவை. மன்னர்கள் பணத்தின் மூலமாக வரியாக பெறுவது மிகக்குறைவானதுதான் என்கிறார் அம்பேத்கர்.

ஆக முகலாயர் காலம் வரையும் நிலமனைத்தும் வல்லாட்சியாளனுக்கு சொந்தம். மக்கள் அதில் பாடுபட்டு விளைவிக்கும் பொருட்களில் அவர்கள் உயிர் வாழ்வதற்கு போதுமானவை போக, எஞ்சிய உபரி அனைத்தும் அவனுக்கு சொந்தம். அவனது தேவை மற்றும் நிர்வாகத்துக்குப் போக எஞ்சிய பொருட்களை மற்ற நாடுகளுடன் பரிவர்த்தனை செய்துகொள்வது என்ற பார்ப்பனிய பொருளாதாரக் கட்டமைப்பில் எந்த மாற்றமுமின்றி இருந்தது இதன்மூலம் உறுதியாகிறது. இந்தக் கட்டமைப்பில் தொழில்கள் சுதந்திரமாக இயங்குவதோ அதற்கான சந்தை உருவாகி வளரும் சத்தியமோ மிகக்குறைவு. இதற்கான அர்த்தம், இந்தக் கட்டமைப்பில் பரிவர்த்தனைக்கே இடமில்லை என்பதல்ல. ஆளும்வர்க்கத்திடம் மட்டுமே புழங்கும் பணம் அதற்கான வாய்ப்பிருந்ததை தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. ஆனால், அந்த நுகரும் ஆற்றல்கொண்ட மிகச்சிறிய ஆளும்வர்க்கத் தேவைக்கான அளிப்பின் மூலமான சந்தை வளர்ச்சி என்பது மந்தமானது. அளவில் மிகவும் சிறியது. இந்தக் கட்டமைப்பு உடைபடாமல் வேகமான சமூகப் பொருளாதார மாற்றத்தை அடைவது என்பது அரிதானது. வடக்கில் குப்தர்களுக்குப் பிறகும் தெற்கில் சோழர்களுக்கும் பிறகான இத்தனை நூற்றாண்டுக் காலத்தில் நமது சமூகம் எந்த அடிப்படை மாற்றமின்றி தொடர்ந்தது அதற்கான சான்றாக இருக்கிறது. அப்படி என்றால் முகலாயர்கள் காலத்தில் ஒரே நாணயமுறை, புதிய வரிமுறையை ஏற்படுத்தி மத அடிப்படையில் ஒரு தேசிய மக்களாக மாற்ற முயற்சி செய்ய வைத்தது எது என்ற கேள்வி எழுகிறது.

இதற்கான விடையை நாளை காலை 7 மணி பதிப்பில் பார்க்கலாம்.

பகுதி 1 / பகுதி 2 / பகுதி 3 / பகுதி 4 / பகுதி 5 / பகுதி 6 / பகுதி 7

கட்டுரையாளர் குறிப்பு

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 24 பிப் 2022