மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 பிப் 2022

சிறப்புக் கட்டுரை: பணம் என்றால் என்ன? பகுதி 6

சிறப்புக் கட்டுரை: பணம் என்றால் என்ன?  பகுதி 6

பாஸ்கர் செல்வராஜ்

சாதிய சமூகமாக நாம் தொடர்வதற்கும் நமது உழைப்பை இவை சுரண்டுவதற்கும் தொடர்பிருக்கிறதா? அதை எப்படித் தடுப்பது?இவர்களின் பொருளாதார ஆதிக்கத்தை எப்படி வீழ்த்துவது? அதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா? இதற்கான விடையைக் கண்டடைவதற்கு அவர்கள் நமது உழைப்பைத் திருடுவதற்கு எந்த பொறிமுறையை (Mechanism) பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அந்த பொறிமுறையின் மையம் பணம். அதன் தோற்றம் வளர்ச்சி, இந்தியாவில் அதன் தாக்கம் குறித்த உண்மை நிலவரங்கள் இனி...

ஒரு சமூகத்தில் உழைப்பு பிரிவினை தோன்றிய பிறகு ஆரம்பத்தில் பிற சமூகத்துடனும் பின்பு தங்களுக்குள்ளும் மக்கள் பண்டமாற்று முறையில் பொருட்களைப் பரிவர்த்தனை செய்து கொள்கிறார்கள். அத்தகைய முறையில் இரு பொருட்கள் சமப்படுத்தப்படுகிறது (1 பானை = 4 படி நெல்). அந்த இரு பொருட்களில் தனிச்செயல்திறன்மிக்க உழைப்பில் உருவான பொருள் (பானை) உயர்வான இடத்தையும், ஒப்பீட்டளவில் அதிக மதிப்பையும், இணையாக வைக்கப்படும் சாதாரண உழைப்பில் உருவான (நெல்) பொருளின் மதிப்பை அளக்கும் அளவுகோலாகவும் மாறுகிறது.

பெருகும் பொருட்களும் பரிவர்த்தனை சிக்கலும்...

இந்தத் தனிச்சிறப்பான உழைப்பில் உருவான பொருளுக்கான தேவை அதிகரிக்கும்போது இதன் உற்பத்தியைப் பெருக்க இதைச் செய்ய தெரிந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோருகிறது. இப்படி அதிகரிக்கும்போது இந்த உழைப்பும் எல்லோராலும் செய்யக்கூடிய சாதாரண உழைப்பின் இடத்தை அடைந்து பொருளின் மதிப்பு குறைகிறது. உற்பத்தி பெருகி பொருளின் எண்ணிக்கை அதிகரித்து அளவுரீதியாக இந்த மதிப்பு பெருகினாலும் (முன்பு 25 பானை = 100 படி நெல்; பின்பு 100 பானை = 100 படி நெல்) அது முன்பு பெற்றிருந்த தனிச்சிறப்பான பண்பை இழந்து மற்ற பொருட்களுக்கு இணையான இடத்தைப் பெறுகிறது. இப்போது சந்தையில் மற்றொரு தனிச்சிறப்பான உழைப்பில் உருவாகும் பொருளும் அதற்கான உழைப்பும் இந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது. இப்படி உழைப்புப் பிரிவினை தோன்றிய சமூகத்தில் ஏற்படும் உழைப்பின் வளர்ச்சி அந்த சமூகத்தில் புதிய பல பொருட்களின் உருவாக்கத்துக்கு வித்திடுகிறது.

வெறும் பானை, நெல் மட்டுமல்லாமல் ஆடை, கூடை, முறம், பாய், அம்மி, குடைக்கல், கலப்பை எனப் பொருட்கள் பெரும் எண்ணிக்கையில் அதிகரிக்கும்போது பத்து கூடைக்கு ஒரு கலப்பை, ஒரு குடைக்கல்லுக்கு ஐம்பது படி நெல் என ஒவ்வொரு பொருளுக்கும் எதிராக மற்ற பொருளின் மதிப்பை நிர்ணயித்துப் பரிமாறிக்கொள்வதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. பதிலாக ஒரு பொருளைக் கொண்டு எல்லா பொருட்களின் மதிப்பையும் தெரிவிக்கும் முறை உருவாகிறது. இரும்பாலான எடைக்கல்லைக் கொண்டு எல்லா பொருட்களின் எடையை அளப்பதுபோல ஒரு பொருளின் மதிப்பைக் கொண்டு எல்லா பொருட்களின் மதிப்பையும் அளவிடுவதில் உள்ள பிரச்சினை, அதிக அடர்த்தி கொண்ட இரும்பாலான எடைக்கல்லைப்போல பொருட்களின் மதிப்பு நிலையானது அல்ல; மாறக்கூடியது. அதே நேரம் தனக்கு வேண்டிய எல்லா பொருட்களையும் ஒருவர் தானே உற்பத்தி செய்துகொள்ளவும் முடியாது; தன்னிடம் உள்ள பொருளைக் கொடுத்து வேறொரு பொருளைப் பரிமாறிக் கொள்ளாமலும் இருக்க முடியாது.

சமூக வளர்ச்சி சார்ந்த அளவை முறைகள்

இந்த நிர்பந்தம் இருவரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஓர் அளவையை ஏற்படுத்திக் கொள்வதை நோக்கி நகர்த்துகிறது; இருவருக்கும் பொதுவான நியாயமான முறையை ஏற்படுத்திக் கொள்ள கோருகிறது. இந்த முறையை அந்த சமூகத்தில் உள்ள அனைவரும் ஏற்றுகொள்ளும்போது அது அந்த சமூகத்தின் பொதுவான அளவை முறை ஆகிறது. ஆகவேதான் அளவை முறைகள் என்பது வெறும் அறிவியல் சார்ந்ததாக மட்டுமல்லாமல் அது சமூகம் சார்ந்ததாகவும் இருக்கிறது. பொருளின் எடையை அளக்கவும் அதன் மதிப்பை அளக்கவும் ஒவ்வொரு சமூகமும் அதன் பொருளாதார சமூக வளர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு முறையைப் பயன்படுத்தி வந்ததை காண முடிகிறது.

தொண்ணூறுகள் வரையிலும் நமது கிராமங்களில் கத்திரிக்காய், வெண்டைக்காய் போன்றவற்றை அளக்க ஒருவகை மரத்தாலான பிரம்பின் ஒரு முனையில் ஒரு கூடையையும் நடுவில் நிறுத்தல் அளவையைக் குறிக்கும் சில கோடுகளையும் கொண்ட `தூக்கு’ என்ற ஒன்றையும் நெல், கம்பு, கடலை உள்ளிட்ட பொருட்களை அளக்க படி, மூட்டை, களம் போன்ற அளவிடும் முறையையும் பயன்படுத்தி வந்தது இங்கே நினைவுகூரத்தக்கது. பார்ப்பனிய கிராமப் பொருளாதாரம் உடைபட்ட பிறகு இவை பயன்பாட்டில் இருந்து மறைந்து எடைக்கற்களைக் கொண்டு எடையை அளக்கும் முறை நிலை பெற்றிருக்கிறது.

ஒவ்வொரு பொருளுக்கும் எதிராக மற்ற பொருளின் மதிப்பை அளப்பதில் ஏற்படும் நடைமுறை சிக்கலைத் தீர்க்க, எல்லா பொருட்களின் மதிப்பையும் பொதுவான ஒரு பொருளின் மதிப்பைக் கொண்டு அளவிட

1. அந்த பொருள் மற்ற பொருட்களைவிட அதிக மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்.

2. அப்படியான அந்த பொருளின் மதிப்பு குறைந்தபட்ச நிலைத்தன்மையையும் ஒப்பீட்டளவில் மாறாத்தன்மையையும் கொண்டிருக்க வேண்டும்.

ஒரு கிலோ எடைக்கல் இந்த வாரம் 1000 கிராம் ஆகவும் அடுத்த வாரம் 950 கிராம் ஆகவும் விரைவாக மாறினால் அதைக்கொண்டு மற்ற பொருட்களின் எடையை அளப்பதோ அல்லது வாராவாரம் சென்று மாறும் அதன் எடையைச் சரி செய்வதோ சாத்தியமில்லை அல்லவா!

எதைக்கொண்டு பொருளின் மதிப்பை அளப்பது?

ஒரு பொருளின் மதிப்பு எப்படிக் கூடுகிறது? ஒரு பொருளின் மதிப்பு என்பது அதில் உள்ள மனிதனின் உழைப்பு. அந்தப் பொருளை உருவாக்க செலுத்தப்படும் மனித உழைப்பின் அளவு அதிகரிக்க அதிகரிக்க அதன் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. அதேநேரம் இந்த பொருளைச் செய்யத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது உற்பத்தி முறைகள் மேம்பட்டு சராசரியாக இந்தப் பொருளை செய்ய தேவைப்படும் நேரத்தின் அளவு குறைகிறது. அதேபோல உற்பத்தியை இயந்திரமயமாக்கும்போது இந்தப் பொருள் உருவாக்கத்தில் இருக்கும் மனித உழைப்பின் அளவு இன்னும் குறைகிறது. இப்படி பொருளில் உள்ள மனித உழைப்பின் அளவு குறையும்போது அந்த பொருளின் மதிப்பும் காலப்போக்கில் குறைந்து கொண்டே போகும். (இப்படி குறைவதைத் தடுக்க அறிவுசார் சொத்துடைமை போன்றவற்றை ஏற்படுத்தி மற்றவர்கள் உற்பத்தி செய்வதைத் தடுப்பது, உற்பத்தியை ஒரு சிலரிடம் மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொள்வது போன்றவற்றை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து பின்னர் பார்க்கலாம்).

ஒரு பொருள் உருவாக்கத்தில் மனிதனின் உழைப்பு பாதி என்றால் இயற்கையின் பங்களிப்பு மீதி. ஆனால், இயற்கையின் மீது மனித உழைப்பு செலுத்தப்படாதவரை அதற்கு எந்த மதிப்பும் கிடையாது. காட்டில் இருக்கும் தேன்கூட்டில் இருக்கும் தேனை மனிதன் எடுத்து வராதவரை அதற்கு மதிப்பில்லை; அது அங்கிருக்கும் ஒரு பயனுள்ள பொருள் மட்டுமே. பூமிக்கு அடியில் இத்தனை கோடி மதிப்புள்ள கனிமங்கள் இருக்கின்றன என்று கூறிக் கொள்ளலாம். ஆனால், அந்த மதிப்பு கற்பனையானது. அது மனிதனால் வெட்டி எடுத்து வெளிக்கொண்டு வந்து சந்தைப்படுத்தி வர்த்தகம் செய்யும் போதுதான் அதன் உண்மை மதிப்பை எய்துகிறது. ஆக, பொருளின் மதிப்பைக் கூட்டுவதில் மனித உழைப்பே முதன்மை ஆகிறது. அதேபோல பல வகையான தனிச்சிறப்பான உழைப்பு பல்வேறு வகையான பொருட்களை உருவாக்குகிறது. இவற்றை மதிப்பிடும்போது எல்லாவற்றையும் சராசரி சாதாரண உழைப்புக்கு மாற்றி சாதாரண உழைப்பில் மதிப்பிட்டு இவ்வளவு எனச் சொல்கிறோம்.

1 தனிச்சிறப்பு உழைப்பு (பானை) = 4 மடங்கு சாதாரண உழைப்பு (நெல்)

1 தனிச்சிறப்பு உழைப்பு (குடைக்கல்) = 50 மடங்கு சாதாரண உழைப்பு (நெல்)

பூமிக்கடியில் கிடைக்கும் செம்பு, வெள்ளி, தங்கம் போன்றவற்றை வெளிக்கொண்டு வர நுட்பமான திறனுள்ள உழைப்பும் மிக அதிக அளவில் சாதாரண உழைப்பும் தேவைப்படுகிறது. இந்த எல்லா தனிச்சிறப்பான உழைப்பையும் சாதாரண உழைப்புக்கு மாற்றி அதனோடு உற்பத்திக்குச் செலவிட்ட மற்ற சாதாரண உழைப்பையும் கூட்டும்போது இந்தப் பொருட்கள் அதிக மதிப்பு கொண்டவையாகின்றன. இவ்வளவு உழைப்பும் ஒரு கிராம் வெள்ளியிலும், தங்கத்திலும் செறிவடைந்து இருப்பதால்தான் அவற்றின் மதிப்பு அவ்வளவு அதிகமாக இருக்கிறது. (நாட்டில் உள்ள மனிதர்களில் பெரும்பாலோர் பெரும்பாலான பொருட்களை உற்பத்தி செய்ய முடிந்தால் அல்லது தெரிந்திருந்தால் இந்த இரண்டு உழைப்புக்கும் இடையிலான இடைவெளி குறைந்து விட்டால் பொருட்களின் மதிப்பு என்னவாகும்? வேறொரு இடத்தில் பார்க்கலாம்).

தங்கத்தின் தனிச்சிறப்பும் பொருட்களின் சுழற்சியும்...

இரும்பு, நிலக்கரிகூட பூமிக்கடியில் இருந்து தானே எடுக்கிறார்கள் ஏன் அவற்றின் மதிப்பு இவ்வளவு அதிகமாக இருப்பதில்லை என்று இங்கே கேள்வி எழலாம். இவை எல்லாம் பல நாடுகளிலும் பலராலும் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன் உற்பத்தியை இயந்திரமயமாக்கி பொருளின் அளவைப் பெருக்கும்போது அதன் மதிப்பு வீழ்ச்சியடைந்து விடுகிறது. ஆனால் தங்கம், வெள்ளியைப் பொறுத்தவரை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இயந்திரமயமாக்கி அதன் உற்பத்தியைப் பெருக்க முற்படலாம். ஆனால், இயற்கையில் அது கிடைக்கும் அளவு மிகக் குறைவாக இருப்பதால் அதன் உற்பத்தியை இரும்பு, நிலக்கரியின் அளவுக்குப் பெருக்க முடிவதில்லை. ஆதலால் தங்கத்தின் மதிப்பு மற்ற பொருட்களைப்போல அவ்வளவு வேகமாக மாற்றமடைவதோ, வீழ்ச்சியைச் சந்திப்பதோ இல்லை. அதேபோல மிக அதிக அளவிலான மதிப்பு மிகச்சிறிய வடிவிலும், எளிதில் இடம்பெயரக்கூடிய வகையிலும் (Mobile), எடுத்துச் செல்லும் வகையிலும் இருக்கிறது. இந்தச் சிறப்புத் தன்மைகளினால் முதலில் செம்பு மற்றும் வெள்ளியின் மதிப்பைக் கொண்டும் பின்பு தங்கத்தின் மதிப்பைக் கொண்டும் மற்ற பொருட்களின் மதிப்பை அளக்கும் முறை உருவாகிறது.

இப்போது ஒவ்வொரு பொருளையும் மற்ற பொருட்களுக்கு எதிராக எவ்வளவு மதிப்புடையது என மதிப்பிடுவதற்கு பதிலாக எல்லா பொருட்களையும் இவ்வளவு தங்கத்துக்கு இணையானது என மதிப்பிடும் முறை நடைமுறைக்கு வருகிறது. இப்படி எல்லா பொருட்களையும் தங்கத்துக்கு இணையாக சமப்படுத்தப்படுவதால் தங்கம் சர்வபொது சமதை (Universal Equivalent) ஆகிறது. எல்லா பொருட்களையும் தங்கத்தின் மதிப்புடன் ஒப்பிட்டு மதிப்பிடும்போது தங்கத்தை எதைக்கொண்டு மதிப்பிடுவது? தர நிறுவனத்தில் உள்ள ஒரு கிலோ எடைக்கல்லுக்கு எதிராக எல்லா எடைக்கல்லையும் வைத்து மதிப்பிடுவதைப்போலத் தங்கத்தின் மதிப்பைத் தங்கத்தைக் கொண்டுதான் மதிப்பிட முடியும். தர நிறுவனத்தில் உள்ள எடைக்கற்களின் தரம் என்பது அதன் மாசற்ற 100 விழுக்காடு இரும்பால் ஆனது என்பதுதான்.

இப்போது தங்கத்தின் தரத் தூய்மையைத் தெரிவிக்கும் 22 அல்லது 24 கேரட் தர நிர்ணய முறை உருவாகிறது. தரம் (Quality) உறுதி செய்யப்பட்ட பிறகு அது எவ்வளவு (Quantitative) என்பதை குறிக்க மில்லிகிராம், கிராம் அளவைகள் உள்ளன. 1 கிராம் = 1000 மில்லிகிராம், 1 கிலோ = 1000 கிராம் என நமக்கு நாமே எடை அளவுகளை நிர்ணயித்து அதற்கு ஒரு பெயரைக் கொடுத்து எல்லோரும் ஒப்புக்கொண்டு அளவீடாகப் பயன்படுத்துவதைப்போல 1 கிராம் தங்கம் = 1 சொலிடஸ் அல்லது பகோடா அல்லது ரூபாய் என ஒவ்வொரு நாட்டு மக்களும் ஒரு பெயரை வைத்து அதன் மதிப்பை நிர்ணயிக்கிறார்கள். பின்பு ஒவ்வொரு பொருளையும் தங்கத்தின் மதிப்புடன் ஒப்பிடும்போது இவ்வளவு என மதிப்பிட்டு அந்த மதிப்புக்கு நிகரான தங்கத்தைக் கொடுத்தும், பெற்றுக்கொண்டும் பொருட்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இந்த முறையை ஒரு சமூகத்தில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொண்டு பரிவர்த்தனை செய்து கொள்ளும்போது அது அந்த சமூகத்தில் மதிப்பை அளக்கும் பொதுவான அளவை முறை ஆகிறது.

தங்கம் (பணம்); மதிப்பின் அளவுகோல் மற்றும் பரிமாற்ற ஊடகம்!

இந்தப் பரிவர்த்தனை முறை முன்பு பண்டமாற்று முறையில் இருந்த இடம், நபர், நேரம் சார்ந்த தடைகளை உடைத்து மக்களுக்கு இடையில் பொருட்களைப் பரிமாறிக்கொள்ளும் வேகத்தைக் கூட்டுகிறது. பல குளம், குட்டை, ஏரி, ஆறுகளில் நீந்திக்கொண்டிருத்த எல்லா மீன்களையும் ஒரு கடலில் கொண்டுபோய் விட்டால் அவற்றின் சுற்றிச்சுழலும் பரப்பும், வேகமும் எப்படி அதிகரிக்குமோ அங்கே கடல்நீர் மீன்களின் சுற்றோட்டத்துக்கு எப்படி பொதுவான ஊடகமாக இருக்குமோ... அதேபோல இந்தப் பொருளைக் கொடுத்து தங்கம், தங்கத்தைக் கொடுத்து பொருள் (சரக்கு - தங்கம் - சரக்கு) என்ற பரிவர்த்தனை சுழற்சியின் ஊடகமாகவும் இந்தச் சுழற்சியின் வேகத்தைக் கூட்டும் சாதனமாகவும் தங்கம் மாறுகிறது. இப்படி ஒவ்வொரு பொருளின் மதிப்பும் இவ்வளவு என அளவிடும் அளவுகோலாகவும் (Measure of Value), அந்த பொருட்களின் பரிமாற்றத்திற்கான ஊடகமாகவும் (Medium of Exchange) இருக்கும் சரக்கு பணம் (Money) என்றாகிறது. இப்படி வரலாற்றில் பயன்படுத்தப்பட்ட இந்த தங்கம், வெள்ளி, செம்பு போன்றவை பணமாகின.

இப்போது பரிவர்த்தனை செய்து கொள்ளும் பொருட்களின் அளவுக்கும் மதிப்புக்கும் ஏற்ப பல்வேறு மதிப்பு கொண்டதாக உருவாக்கப்படும் தங்கக் காசுகளும், நாணயங்களும் நடைமுறைக்கு வருகிறது. சரியான நிர்ணயிக்கப்பட்ட அளவுகளில் தங்கம் உள்ளிட்ட நாணயங்களை உருவாக்குவதும், பரிமாற்றங்களின்போது தேய்மானம் உள்ளிட்ட இழப்புகளைக் கண்காணித்து நாணயத்தில் இருக்கும் உலோகத்தின் அளவைப் பேணிக்காக்கும் பொறுப்பும் அரசிடம் வருகிறது.

சரக்கு - பணம் - சரக்கு எனச் சுழலும் இந்தச் சுழற்சியில் பணம் (தங்கம்) மையமாக இருக்கிறது என்றால் இந்தப் பரிவர்த்தனையின் இருமுனையிலும் உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோரான மக்களும் இந்தப் பரிவர்த்தனையின் மையத்தில் பணத்தை வைத்திருக்கும் வணிகர்களும் இருக்கிறார்கள். இந்த சுழற்சியில் பொருட்கள் மக்களிடமும் தங்கம் (பணம்) வணிகர்களிடமும் சென்று சேர்க்கிறது. இப்போது தங்கத்தைக்கொண்டு எந்தப் பொருளை வேண்டுமானாலும் வாங்க முடியும். அதைக் கொடுத்தால் சமூகத்தில் இருக்கும் எவரும் அதைப் பெற்றுக்கொண்டு தங்களது பொருளை விற்க தயாராக இருக்கிறார்கள். தங்கத்தின் இந்தச் சிறப்புத் தகுதி சமூகத்தில் உள்ள அனைவருக்கும் அதன் மீதான ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

இந்த ஈர்ப்புதான் நாம் இன்றும் தங்கத்தை வாங்கி குவிக்க காரணமாக இருக்கிறதா?

நாளை காலை 7 மணி பதிப்பில் பார்க்கலாம்

பகுதி 1 / பகுதி 2 / பகுதி 3 / பகுதி 4 / பகுதி 5

கட்டுரையாளர் குறிப்பு

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

செவ்வாய் 22 பிப் 2022