மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 19 பிப் 2022

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்: நீங்களும் கலந்துகொள்ளலாம்!

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்: நீங்களும் கலந்துகொள்ளலாம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 356 வாகனங்கள் மூன்று நாட்கள் ஏலம் விடப்படுகிறது. இதில் கலந்துகொள்வது எப்படி என்பது குறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் முழு விவரமும் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நடந்த காவல்துறை மானியக் கோரிக்கை பதிலுரையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை ஏலம் விடும் முறையை எளிமையாக்கி, சம்பந்தப்பட்ட காவல் ஆணையர் அல்லது காவல் கண்காணிப்பாளருக்கு ஏலம்விடும் அதிகாரம் வழங்கப்படும்' என்று அறிவித்தார்.

அதன் முதல்கட்டமாக தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட உரிமை கோராத வாகனங்கள் மற்றும் மதுவிலக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்களையும் பொது ஏலம்விட்டு அரசு கணக்கில் சேர்த்திட மாநகர காவல் ஆணையர்களுக்கும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து காவல் நிலையங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த, குற்ற வழக்கில் தொடர்புடைய, உரிமை கோரப்படாமல் இருந்த வாகனங்களை அதிகாரிகள் பொது ஏலம் விடுகின்றனர்.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட போலீஸ் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 319 இருசக்கர வாகனங்கள், 33 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 356 வாகனங்கள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தலின்படி வருகிற பிப்ரவரி 25, 26 மற்றும் 28 ஆகிய மூன்று நாட்களில் திருவள்ளூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தின் அருகே காலை 10 மணி அளவில் ஏலம் விடப்பட உள்ளது.

வாகனங்களை ஏலம் கேட்க வருபவர்கள் முகக்கவசம் அணிந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். முன்வைப்பு கட்டணத் தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1,000, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.5,000 செலுத்த வேண்டும். அதற்கான டோக்கன் காலை 8 மணி முதல் 10 மணி வரை வழங்கப்படும்.

வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இருசக்கர வாகனத்துக்கு அரசு விற்பனை வரி 12 சதவிகிதம், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்துக்கு 18 சதவிகிதத்தை உடனடியாக செலுத்திவிட வேண்டும். வாகனத்தின் விவரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை திருவள்ளூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத் தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் உரிமையாளர்கள் உரிமையாளருக்கான பதிவுச்சான்று (ஆர்சி புக்), ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும். பொது ஏலத்தில் கலந்துகொள்ள வருபவர்கள் ஆதார் கார்டு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஓர் அடையாள அட்டை தவறாமல் கொண்டு வர வேண்டும். ஏலத்தில் கலந்து கொண்டு வாகனம் ஏலம் எடுக்காதவர்களுக்கு முன்வைப்பு கட்டண தொகை ஏலத்தின் முடிவில் திருப்பி தரப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழகம் முழுவதும் நடந்த ஏலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் 172 வாகனங்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் 135 வாகனங்கள், கரூர் மாவட்டத்தில் 207 வாகனங்கள், சேலம் மாவட்டத்தில் 103 வாகனங்கள் மற்றும் மதுரை மாவட்டத்தில் 203 வாகனங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. இதேபோல திருப்பூர் மாநகர காவல் துறையில் 117 வாகனங்களும், சேலம் மாநகர காவல்துறையில் 10 வாகனங்களும் என இதுவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத 1,222 இருசக்கர வாகனங்கள், 103 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் 26 என மொத்தம் 1,351 வாகனங்கள் ஏலம்விடப்பட்டுள்ளன. இதன்மூலம் கிடைத்த ரூ.2 கோடியே 60 லட்சம் அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

5 நிமிட வாசிப்பு

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

5 நிமிட வாசிப்பு

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

சனி 19 பிப் 2022