மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 பிப் 2022

மாணவி மரணம்: இரண்டாவது நாளாக பூசாரியிடம் விசாரணை!

மாணவி மரணம்: இரண்டாவது நாளாக பூசாரியிடம் விசாரணை!

திருவள்ளூரில் சாமியாரின் ஆசிரமத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, பூசாரி முனுசாமியிடம் இரண்டாவது நாளாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்துக்கோட்டையில் ஓடை பகுதியில் முனுசாமி என்னும் பூசாரி, அங்குள்ள நாகாத்தம்மன் கோயிலை மேம்படுத்திக் கட்டி, அதை ஆசிரமமாக நடத்தி வருகிறார்.

அருள்வாக்கு சொல்வது, மாந்திரிக பூஜைகள், ஆவிகள் விரட்டுவது, நள்ளிரவு பூஜைகள், மூலிகை மருந்து கொடுப்பது , அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் சிறப்புப் பூஜைகள் போன்றவற்றை பூசாரி முனுசாமி நடத்துவது வழக்கம். தன்னிடம் வரும் பெண்களுக்கு மூலிகைமருந்து கொடுப்பது, தொடர்ந்து இரவு நேர பூஜைகளில் பங்கேற்க ஆசிரமத்தில் தங்க வைத்தும் வந்துள்ளார். இதன்மூலம் பல பெண்கள் பயனடைந்ததாகக் கூறப்படும் தகவலை நம்பி, ஏராளமான பெண்கள் இவரிடம் வந்துள்ளனர்.

இந்த நிலையில், தாமரைபாக்கத்தை அடுத்த கொமக்கமேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் 20 வயது மகள் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு நாகதோஷம் இருப்பதாகவும், அதற்கு பரிகார பூஜை செய்யவும் கடந்த 13ஆம் தேதி மாணவி தனது பெரியம்மா இந்திராணி, தங்கை மகேஸ்வரி ஆகியோருடன் பூசாரி முனுசாமியிடம் வந்துள்ளார்.

நள்ளிரவில் பூஜை முடிந்தவுடன், பூசாரி முனுசாமியின் அறையில் மாணவி மற்றும் அவரது தங்கை உறங்கியுள்ளனர். பெரியம்மா இந்திராணி அங்குள்ள கோயில் மண்டபத்தில், மற்றவர்களுடன் தூங்கினார்.

இந்த நிலையில் மறுநாள் அதிகாலை மாணவி திடீரென விஷம் அருந்தி, வாந்தி எடுத்து மயக்கமடைந்தார். மாணவி பேச்சு மூச்சின்றி கிடப்பதை பார்த்த பூசாரி முனுசாமியின் மனைவி, மாணவியின் பெரியம்மா இந்திராணியை எழுப்பி விஷயத்தை கூறியுள்ளார். இதனையடுத்து, மாணவியை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 16ஆம் தேதி மாணவி உயிரிழந்துவிட்டார். மாணவி உயிரிழந்த விவகாரம் தெரிந்தவுடன் பூசாரி முனுசாமி தலைமறைவானார்.

தங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் பென்னாலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த பூசாரியை நேற்றிரவு கைது செய்தனர். இவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், மாணவியின் பெற்றோர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம், தங்களது மகள் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி, இறப்புக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்ததுடன், ஆட்சியரின் காலில் விழுந்து கதறி அழுதனர். தற்போது இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிக்கு நீதி கிடைக்கக் கோரி ட்விட்டரில் நேற்று அதுகுறித்த ஹேஷ்டேக் ட்ரெண்டான நிலையில்,

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில், “மிகுந்த வேதனைக்குள்ளாக்கிய கடும் கண்டனத்துக்கு உரிய சம்பவம் இது. குற்றம் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் அவர்களின் சமூக விரோத கட்டமைப்பின் மீது எந்த தயவு தாட்சனையின்றி காவல்துறை கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி, ஆய்வாளர் குமார் ஆகியோர் முனுசாமியிடம் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரிகார பூஜை செய்ய வந்த மாணவியிடம் முனுசாமி தவறாக நடந்து கொண்டாரா?. கோவில் வளாகத்தில் வைத்து மாணவி விஷம் அருந்தி உயிரிழக்க காரணம் என்ன? மாணவியை அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்சேர்ப்பதை விட்டுவிட்டு 20 கிலோமீட்டர் தூரமுள்ள வெங்கல் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தது ஏன்? ஆகியவை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வெள்ளி 18 பிப் 2022