கிச்சன் கீர்த்தனா: ஆனியன் கேஷ்யூ பீஸ் புலாவ்


இந்தியாவில் கோவாவும் தமிழ்நாடும் முந்திரிக்குப் பெயர்பெற்றவை. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் அதிக விளைச்சல் கிடைக்கிறது. முந்திரியைப் பயன்படுத்தி என்னென்ன செய்ய முடியும்? பிஸ்கட், கேண்டி, கேக், லட்டு, கீர், பக்கோடா, கிரேவி, மசாலா என ஏராளமான வகைகளுடன் இந்த சுவையான ஆனியன் கேஷ்யூ பீஸ் புலாவ் செய்தும் அசத்தலாம்.
என்ன தேவை?
பாஸ்மதி அரிசி - 2 கப்
வெங்காயம் (மெல்லியதாக நறுக்கியது) - ஒன்றரை கப்
பச்சைப் பட்டாணி - அரை கப்
முந்திரி - அரை கப்
சீரகம் - 2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 2
கிராம்பு - 4
பெரிய ஏலக்காய் - 2
பட்டை - ஒரு இன்ச் துண்டு
ரீஃபைண்டு ஆயில் அல்லது நெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
அரிசியை 40 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெயைச் சூடாக்கி, முந்திரியை வறுத்து எடுத்து தனியே வைக்கவும். சீரகம், ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, பட்டை சேர்த்து 30 விநாடிகள் வறுக்கவும். பிறகு, வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் வெங்காயத்தை அலங்கரிப்பதற்காக தனியே எடுத்து வைக்கவும். பட்டாணியைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். ஊறவைத்த அரிசி, உப்பு, வறுத்த முந்திரி சேர்க்கவும் (அலங்கரிக்க சிறிதளவு முந்திரியை எடுத்துவைக்கவும்). அரிசி கலவையை ஒரு நிமிடம் வறுத்து, 3 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும். வறுத்த வெங்காயம், முந்திரி கொண்டு அலங்கரிக்கவும். ரெய்தா அல்லது கறியுடன் சூடாகப் பரிமாறவும்.