மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 பிப் 2022

கொரோனா கால விமானப் பயணங்கள் ஏற்படுத்தும் உளவியல் பிரச்சினைகள்!

கொரோனா கால விமானப் பயணங்கள் ஏற்படுத்தும் உளவியல் பிரச்சினைகள்!

க.சுபாஷிணி

விமானப் பயணங்கள் இப்போது பயணிகளுக்கு மிகுந்த கெடுபிடித்தனத்துடன் உள்ளன. கொரோனாவுக்கு முன்னர் பயணம் செய்கிறோம் என்றால் டிக்கெட் வாங்கினோமா... விசா இருக்கிறதா என்பது மட்டுமே நமது கவனத்தில் இருக்கும். ஆனால், கொரோனா தொற்று தொடங்கி, விமானப் பயணங்கள் உலகளாவிய அளவில் நிறுத்தப்பட்டு, மீண்டும் விமானப் பயணங்கள் தொடங்கிய பிறகு தூரப் பயணங்கள் மிகவும் சிக்கல் நிறைந்தவையாக மாறிவிட்டன என்பதைத் தொடர்ச்சியான அலுவலகப் பணிகளுக்காகவும் எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும் விமானப் பயணங்கள் மேற்கொள்ளும் நான் உணர்கிறேன்.

இன்றைய காலத்தில் ஏறக்குறைய எல்லா நாடுகளும் நடைமுறையில் வைத்திருப்பது கொரோனா சோதனையில் நெகட்டிவ் முடிவு வர வேண்டும் என்பதே. ஒவ்வொரு பயணத்துக்கும் சோதனை செய்து, அதில் கொரோனா நெகட்டிவ் என சோதனை முடிவு வந்தால் மட்டுமே பயணம் செய்யவே முடியும் என்பது முக்கிய கட்டுப்பாடாக இருக்கிறது. ஒரு தூர பயணத்துக்காக நாம் செய்யும் முன்னேற்பாடுகள் அனைத்தும் ஏதாவது ஒருவகையில் தடைப்பட்டு விடுமோ என்ற அச்ச உணர்வை இது அதிகமாகவே உருவாக்குகிறது. ஒருவகையான உளவியல் அச்சமாகவே ஒரு பயணியாக இதை நான் உணர்கிறேன்.

கோவிட்-19 தொற்று தொடங்கிய 2020ஆம் ஆண்டு முதல் என்னைப் போல அடிக்கடி அலுவலக வேலைக்காக விமானப் பயணங்கள் மேற்கொண்ட பலர் எந்த விமானப் பயணங்களும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே பெரும்பாலும் பணி செய்யக்கூடிய சூழல் ஏற்பட்டுவிட்டது. சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் வீட்டில் பணிக்காக ஓர் அறை ஒதுக்க முடிந்தால், அதற்காகச் சில சலுகைகளையும் செய்து தர தொடங்கியிருக்கிறார்கள். உதாரணமாக, வருமானவரி கணக்குக் காட்டும்போது வீட்டில் இருந்து பணி செய்கிறோம் என்று பதியும்போது ஒரு குறிப்பிட்ட தொகை வருமானவரி பிடிப்பிலிருந்து ஊழியர்களுக்குக் கிடைக்கும் வகையில் இந்தச் சலுகை அமைகிறது. எனினும் தாயகத்தைவிட்டு வெளிநாடுகளில் வாழும் என்னைப் போன்ற பலருக்கும் பயணங்களை விட்டு முழுமையாக விலகி இருக்க வாய்ப்பு இல்லை என்பதே நிதர்சனம். எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது சொந்த மண்ணுக்கு வருவதற்கு என்னைப் போன்ற பலரும் பயணம் மேற்கொள்கிறோம்.

அயல்நாடுகளில் வசிக்கின்ற, என்னைப் போல பணியில் இருப்பவர்கள் விடுமுறைக்காகத் திட்டமிடும்போது முன்கூட்டியே அலுவலகத்தில் சொல்லி விடுமுறையைப் பெற வேண்டியது அவசியமாகிறது அதற்குப் பின்னர் விமானப் பயணச்சீட்டைப் பதிவு செய்ய வேண்டும். இவை அத்தனையையும் ஏற்பாடு செய்துவிட்டு, பயணம் தொடங்கும் நாளில் சோதனை முடிவுகள் எதிர்பார்த்தபடி இல்லை என்றால் இத்தனை ஏற்பாடுகளும் வீண் என்ற நிலை வந்து விடுகிறது.

ஆகவே, கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை பயணம் நடைபெறுமா, இருக்காதா என்பது 50 விழுக்காடு மட்டுமே சாத்தியம் என்ற அளவில்தான் நம்மால் உறுதி செய்ய முடிகிறது. இது பயணத்தைத் திட்டமிடும் பலருக்கு ஒருவகையான உளவியல் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஒருவகையான சாத்தியமற்ற போக்கு என்ற வகையில் பயண ஏற்பாடுகள் அனைத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

இத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன என்பது மட்டுமல்ல. ஒவ்வொரு விமான நிறுவனமும் தனித்தனியாக அவர்களுக்கென்று ஒரு சோதனைப் பட்டியலை வைத்திருக்கிறார்கள்; ஒவ்வொரு நாடுகளும் தமக்குரிய ஒரு சோதனைப் பட்டியலை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாடுகளும் அயல்நாடுகளில் இருந்து தங்கள் நாடுகளுக்கு வருபவர்கள் முன்னதாகவே ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார்கள். முன்பெல்லாம் ஒரு நீண்ட பயணத்தின்போது இடையில் நாம் ட்ரான்சிட் வழியாக மாறும்போது கெடுபிடிகளை நான் அனுபவித்ததில்லை. நான் தொடர்ச்சியாக ஐரோப்பிய, ஆப்பிரிக்க ஆசிய நாடுகளுக்கு அலுவலகப் பணிகளுக்காக நூற்றுக்கணக்கான முறை பயணம் செய்திருக்கிறேன். அச்சமயங்களில் ட்ரான்சிட் பயணம் பிரச்சினையை எனக்கு ஏற்படுத்தியதில்லை. நினைவுக்கு வருவது ஒரே ஒரு பிரச்சினை மட்டுமே. அதாவது முதலில் நாம் பயணிக்கின்ற விமானம் தாமதப்பட்டு அடுத்து நமக்குத் தொடர்பில் வரப்போகின்ற விமானம் நாம் செல்வதற்கு முன்பே புறப்பட்டுவிட்டால் மாற்று விமானத்தைப் பெற வேண்டிய ஒரு பிரச்சினை என்பது மட்டும்தான் இருக்கும். மற்றபடி வேறு எந்த சிக்கலையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் ட்ரான்சிட் என வரும்போது அங்கு எவ்வகை பிரச்சினை இருக்கும் என்பதை நினைத்துப்பார்த்தாலே அச்சம் ஏற்பட்டு விடுகிறது. நாம் வைத்திருக்கும் கடவுச்சீட்டுக்கு ஏற்ற வகையில் நாம் கடந்து வரும் நாடுகளில் விசா தேவைப்படுமா என்பதை ஒரு முக்கியப் பிரச்சினையாக நாடுகள் முன்வைக்கின்றன. ட்ரான்சிட் பயணிகள் இறுதியில் வந்து சேரும் நாட்டைத் தவிர, இடையில் அவர்கள் கடந்து வரும் நாடுகளில் இறங்கி செல்லப் போவதில்லை. இதுதான் வழக்கில் இருக்கும் நடைமுறை. இதைக் கருத்தில்கொண்டால் ட்ரான்சிட் நாடுகளில் விசாவுக்குத் தேவையில்லை. ஆனாலும் சில நாடுகள் இத்தகைய கெடுபிடிகளை இப்போது அறிமுகப்படுத்தி இருக்கின்றன.

இத்தனை பிரச்சினைகளைத் தாண்டி இறுதியாக நாம் வந்து சேருகின்ற நாடுகளில் அங்கே எத்தகைய நடைமுறைகள் இருக்கின்றன என்பது மற்றொரு கேள்வி. உதாரணமாகச் சென்னையிலிருந்து நான் ஜெர்மனிக்குத் திரும்பி வரும்போது வந்து இறங்கியவுடன் கொரோனா சோதனை செய்ய வேண்டும் என்ற கெடுபிடிகளை அனுபவித்ததில்லை. பயணம் செல்வதற்கு முன் ஜெர்மனி நாட்டுக்கான குடி நுழைவு வலைப்பக்கத்தில் உள்ள பாரத்தில் நாம் நமது வருகையைப் பதிவு செய்தாக வேண்டும். ஜெர்மனியின் விமான நிலையத்தில் வந்து இறங்கிய பின் பயணிகள் நேரடியாக கடவுச்சீட்டுச் சோதனை முடித்த பிறகு வெளியே வந்துவிட முடியும். ஆனால், இந்தியாவுக்குள் வரும்போது ஒவ்வொரு முறையும் புதிய புதிய நடைமுறைகளை அனுபவிக்க வேண்டியுள்ளது. அதில் மிக முக்கியமாக இந்திய குடி நுழைவு வலைப்பக்கத்தில் கட்டாயமாக நாம் பதிவு செய்திருக்க வேண்டும். அதுமட்டுமன்றி கொரோனா சோதனை முடிவுகளை அந்த வலைப்பக்கத்தில் நாம் ஒரு குறிப்பிட்ட அளவில் வலையேற்றம் செய்திருக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் இந்தியாவில் வந்திறங்கும் முதல் விமான நிலையத்தில் கொரோனா சோதனையை செய்து கொள்வதற்கான முன்பதிவு செய்த பதிவு அறிக்கையையும் வலையேற்றம் செய்ய வேண்டும். சில வேளைகளில் ஈ-பாஸ் எனப்படும் பாரத்தையும் பூர்த்தி செய்து தரவிறக்கிக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் கொடுத்தால்தான் இந்தியாவுக்குள் வருவதற்கான அனுமதி என்பதை சட்டப்படி உறுதி செய்திருக்கிறார்கள்.

இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், நமக்கு கொரோனா சோதனை அறிக்கை வந்த பிறகுதான் இதை நாம் பதிவு செய்ய முடியும். ஆக, பல வேளைகளில் நாம் விமான நிலையங்களில் இருந்து கொண்டுதான் இந்தப் பதிவுகளைச் செய்யும் நிலை ஏற்படுகிறது. அந்தச் சூழலில் நமக்குக் கிடைக்கின்ற இணையத் தொடர்பு எப்படி இருக்கிறது என்பது மற்றொரு பிரச்சினை. இவற்றையெல்லாம் கடந்து பதிவுகளைச் செய்து கோப்புகளையெல்லாம் வலையேற்றம் செய்துவிட்டாலும் நாம் வந்து இறங்கிய விமான நிலையத்தில் அங்குள்ள கெடுபிடிகள் எப்படி அமையும் என்பது பெரிய கேள்வி.

எனது அண்மை பயணம் ஒருவகையில் பல்வேறு வகையான உளவியல் அச்சங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு பயணமாகவே எனக்கு அமைந்தது. ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் இருந்து நான் சென்னைக்கு வர வேண்டும். முன்பெல்லாம் பிராங்ஃபர்ட் நகரில் இருந்து லுப்தான்சா, ஏர் இந்தியா இரண்டு விமானச் சேவைகளும் நேரடியாக சென்னைக்கு வரும் வகையில் சேவை வழங்கின. இப்போது அது தடை செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு வருகிற பெரும்பாலான விமானங்கள் புதுடெல்லி அல்லது பெங்களூரு வரும் வகையில் அமைகின்றன. ஆகவே இந்த முறை அப்படி ஓர் அலைச்சல் வேண்டாமே என நினைத்து ஸ்டுட்கார்ட் நகரில் இருந்து பயணம் செய்வோம் என முடிவெடுத்தேன். ஒரு வாரத்துக்கு முன்பாக மட்டுமே பயண டிக்கெட்டைப் பதிவு செய்ய தேடியதால் எனக்கு ஒரு வழிப் பயணமாக ஸ்டுட்கார்ட்டிலிருந்து இஸ்தான்புல் வந்து, இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து துபாய் சார்ஜா விமான நிலையம் வந்து, அங்கிருந்து சென்னை வருவதாக ஆன்லைன் பதிவு செய்திருந்தேன்.

பொதுவாகவே பயணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன் ஆன்லைன் செக்கின் செய்துவிட முடியும். ஆனால், இந்த முறை அதற்கு விமான நிறுவனம் வாய்ப்பு வழங்கவில்லை. முதல் விமானத்துக்கான ஆன்லைன் செய்யலாம். அடுத்த இரண்டு பயணங்களுக்கும் அந்தந்த விமான நிலையம் சென்று பெற்றுக் கொள்ளவும் என்று இணையப்பக்கம் கூறிவிட்டது.

இங்கேயே பிரச்சினை தொடங்கிவிட்டது. நாம் செல்கின்ற நாடுகளில் விமான டிக்கெட்டுகளைப் பெற முடியுமா என்ற அச்சம் ஒருபுறம்; அங்குள்ள நடைமுறைகள் என்னவாக இருக்கும் என்ற கேள்வி ஒருபுறம். அதன் பின்னர் 69 யூரோ கட்டணம் செலுத்தி 24 மணி நேரத்தில் சோதனை முடிவு வரக்கூடிய வகையில் கொரோனா தொற்றுச் சோதனை செய்தாகிவிட்டது. ஆனால், சரியாக 24 மணி நேரம் வரை அந்த முடிவும் வரவில்லை. பயணம் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்புதான் சோதனை முடிவு கைக்கு வந்து சேர்ந்தது.

பயணம் செய்த நாளில் ஸ்டுட்கார்ட் விமான நிலையம் வந்து பயணச் சீட்டை பெற்றுக்கொள்ள வந்தால் அங்கேயே பிரச்சினை தொடங்கிவிட்டது. எனது முதல் பயணத்துக்கான டிக்கெட் கிடைத்ததே தவிர... இரண்டாவது, மூன்றாவது தொடர்புகளுக்கான விமான டிக்கெட்டுகளை அந்த நிறுவனம் தர முடியாது எனக் கூறிவிட்டது. அவர்களது விமான சேவையைத் தானே இரண்டு பயணங்களுக்கும் பதிவு செய்திருக்கிறேன். இஸ்தான்புல் நகரிலிருந்து துபாய் செல்வதற்கு அவர்களே பயணச்சீட்டை வழங்கிவிடலாமே என நீண்ட நேரம் அவரிடம் பேசி சம்மதிக்க வைத்து பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டேன். மூன்றாவது டிக்கெட்டை நான் துபாய் வந்த பிறகு அங்கு ஏர்அரேபியா விமான சேவை மையத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் எனச் சொல்லிவிட்டார்கள்.

ஸ்டுட்கார்ட் நகரில் விமான நிலையத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் இருந்தார்கள். இயல்பான நிலைக்கு ஜெர்மனி இன்னும் திரும்பவில்லை என்பதை உணர்த்தக்கூடிய வகையில் இது எனக்குத் தோன்றியது. இன்னும் எத்தனை காலம் இதே நிலை தொடருமோ என்ற விதமான ஒருவித உணர்வு மனதில் எழுந்தது.

ஆனால், இஸ்தான்புல் நகர் வந்தபோது அங்கு விமான நிலையத்தில் நான் கண்ட காட்சி எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. விமான நிலையம் முழுவதும் திருவிழா கூட்டம் போல பயணிகள் நிறைந்து காணப்பட்டது. அதிலும் குறிப்பாக அரேபிய நாடுகளுக்கான பயணிகள் மிக அதிகமாக அங்கு பயணித்துக் கொண்டிருந்தார்கள். கூட்ட நெரிசல்; உணவகங்களில் முகக்கவசம் அணியாமல் மிக இயல்பாக மக்கள் பேசிக்கொண்டும் உரையாடிக்கொண்டும் உணவு அருந்திக்கொண்டும் இருந்தார்கள். இந்தக் காட்சி மனதுக்கு ஒருவிதமான மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தியது.

துபாய் வந்து இறங்கிய உடன் எனக்கு அடுத்த விமானத்துக்கு ஏறக்குறைய 90 நிமிடங்கள் மட்டுமே இருந்தன. இங்கு என்ன விதமான பிரச்சினைகள் வரப்போகிறதோ என்ற ஐயத்துடனேயே துபாய் மண்ணில் கால் பதித்தேன். ஆனால், நான் நினைத்ததற்கு எதிர்மாறாக மிக எளிமையாகப் பயணிகள் எளிதாக எல்லா சேவைகளையும் பெற்றுக்கொள்ளும் வகையில் துபாய் விமான நிலையம் செயல்படுகிறது என்பதை நான் இருந்த அந்த குறுகிய நேரத்தில் உணர்ந்துகொண்டேன்.

துபாய் நாட்டுக்குள் வருபவர்கள் உடனுக்குடன் கோவிட் தொடர்பான சோதனை செய்துகொள்ள ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட அதிகாரிகளை விமான நிலையத்தில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வருகிற பயணிகள் வரிசையாக நின்று அவர்களுக்குக் கால தாமதமாகக் கூடாது என்பதை மனதில்கொண்டு மிக நேர்த்தியாக இதை ஏற்பாடு செய்திருக்கிறது துபாய் விமான நிலையம்.

ட்ரான்சிட் வழியாகச் செல்லும் என்னைப்போன்ற பயணிகளுக்கு இந்த சோதனை தேவையில்லை எனச் சொல்லி தனி வழியில் அனுப்பி விட்டார்கள். பாதுகாப்புச் சோதனை முடிந்த பிறகு நேரடியாக எனது சென்னைக்கான விமானம் செல்லவிருக்கும் பகுதிக்கு நான் எளிதாக வந்து சேர்ந்தேன். எனது விமான டிக்கெட்டுகளை அங்கே நான் எடுத்துக்கொண்டேன். அனைத்தும் ஏறக்குறைய 20 நிமிடங்களுக்குள். எவ்விதமான பிரச்சினை துபாயில் இருக்குமோ என்று அச்சப்பட்டுக்கொண்டிருந்த எனக்கு இது மிகுந்த மன மகிழ்ச்சியையும் ஆறுதலையும் ஏற்படுத்தியது.

சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே கொரோனா சோதனைக்காகப் பதிவு செய்திருந்தேன். ஆனால், நான் வந்து சேர்ந்த நாளில் வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பயணிகளுக்குக் கொரோனா சோதனை தேவையில்லை என்ற அறிவிப்பை இந்திய விமான நிலையம் வெளியிட்டிருந்ததால் நான் நீண்டநேரம் காத்திருந்து அந்த சோதனைக்காகச் சிரமப்பட வேண்டிய தேவையில்லாமல் போனது. மன உளைச்சலை ஏற்படுத்திய பல சிக்கல்கள் கொண்ட பயணமாகத் தொடங்கிய எனது நீண்ட பயணம் இறுதியில் ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்தது.

ஆக மொத்தத்தில் பயணம் என்பது சுவாரஸ்யம் நிறைந்த ஓர் அனுபவம் என்பதை கடந்து தற்சமயம் பயணம் என்பது தனி மனிதர் ஒருவருக்கு உளவியல் தாக்குதலைத் தருகின்ற ஒருவித அச்சமும், மன அழுத்தமும் கலந்த ஒரு நிகழ்வாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்த நிலை குடும்பத்தாரை விட்டுப் பிரிந்து தூர நாடுகளில் வசிக்கின்ற என்னை போன்றவர்களுக்குப் பயணங்கள் உறுதியற்ற தன்மையைக் கொண்டவை என்பது போன்ற உளவியல் பிரச்சினையை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. இது பல அசௌகரியங்களையும் ஏற்படுத்துகிறது

இரண்டு தடுப்பூசிகள் போட்டவர்கள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு RT-PCR சோதனைத் தேவையில்லை என்ற நடைமுறையை உலக நாடுகள் யோசிக்கலாம். இது பயணிகளுக்கு ஏற்படுகின்ற மன அழுத்தத்தைக் குறைக்க வழி வகுக்கும்.

ஆக மொத்தத்தில் பணத்தைச் செலவு செய்து, எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு பயணம் செய்யும் பயணிகள் மன மகிழ்ச்சியுடன் அவர்கள் பயணத்தை உணர வேண்டும் என்ற எண்ணத்தை மீண்டும் உலக நாடுகளின் அரசுகள் யோசிக்கத் தொடங்க வேண்டும். கொரோனா தரும் அச்ச உணர்வை நீண்ட காலத்துக்கு மக்களின் மனதில் நிலைத்திருக்கச் செய்வதாக இல்லாமல் இயல்புநிலைக்குத் திரும்ப வேண்டிய நடைமுறைகளைச் செயல்படுத்தத் தொடங்குவார்களா?

முனைவர் க.சுபாஷிணி - ஜெர்மனி பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் டி.எக்ஸ்.சி டெக்னோலஜி என்ற நிறுவனத்தின் ஐரோப்பியப் பகுதி கணினிக் கட்டமைப்புத் துறை தலைமை பொறியியலாளராகப் பணிபுரிகிறார். இவர் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற பன்னாட்டு அமைப்பின் தோற்றுனர் மற்றும் தலைவருமாவார். இந்தப் பன்னாட்டு அமைப்பு உலகளாவிய தமிழர் வரலாறு, மொழி, பண்பாடு தொடர்பான ஆவணங்களை மின்னாக்கம் செய்வது, அவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வது மற்றும் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாத்து, விழிப்புணர்வு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிற ஓர் அமைப்பாகும்.

.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 17 பிப் 2022