மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 பிப் 2022

கிச்சன் கீர்த்தனா: தலசேரி தம் மீன் பிரியாணி

கிச்சன் கீர்த்தனா: தலசேரி தம் மீன் பிரியாணி

‘கடவுளின் தேசம்' என அழைக்கப்படும் கேரளம் கடற்கரையை அதிகம் கொண்டுள்ளதால் மீன்தான் கேரள மக்களின் முக்கிய உணவு. மத்தி, அயிலா, கறி மீன், நங்கு கொளுவா, கிளி மீன், யேரி, என்சீலா, நெய் மீன், சூடா போன்ற மீன் வகைகளும், சால்மன், டூனா, மெர்லின் போன்ற பெரிய வகை மீன்களும் இங்கு தாராளமாகக் கிடைக்கின்றன. மீன் உணவு தயாரிப்பதில் இயற்கை மணம்கொண்ட தேங்காய் எண்ணெய் மற்றும் மருத்துவக் குணம் நிறைந்த குடம்புளி இரண்டும் முக்கியப் பங்காற்றுகின்றன. கேரள விருந்துகளில் தவறாமல் இடம்பெறும் இந்த தலசேரி தம் மீன் பிரியாணியை நீங்களும் செய்து அசத்தலாம்.

என்ன தேவை?

நெய் மீன் - அரை கிலோ

சீரக சம்பா அரிசி - 3 கப்

இஞ்சி - பூண்டு விழுது - 50 கிராம்

பச்சை மிளகாய் - ஒன்று

வெங்காயம் - கால் கிலோ (நீள வாக்கில் மெலிதாக நறுக்கவும்)

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

தக்காளி - ஒன்று

தயிர் - கால் கப்

புதினா, கொத்தமல்லி இலைகள் - கைப்பிடி அளவு

கரம் மசாலாத்தூள் - தேவையான அளவு

எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்

கசகசா - அரை டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு - சிறிதளவு

நெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

அலங்கரிக்க

முந்திரிப்பருப்பு - 10 - 12

உலர் திராட்சை - 15 - 18

நறுக்கிய வெங்காயம் - 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

மீனை சுத்தம் செய்துகொள்ளவும். அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஒரு கலவையைத் தயார் செய்யவும். இந்தக் கலவையில் மீன் துண்டுகளை நன்கு புரட்டி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். தேவையான அளவு நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய வெங்காயத்தை அதே எண்ணெயில் வதக்கவும். பின்னர் இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இதனுடன் மல்லித்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். பிறகு கசகசா, நறுக்கிய தக்காளி மற்றும் தயிர் சேர்க்கவும். குறைந்த சூட்டில் நன்கு வதக்கவும். நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலைகள் மற்றும் கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். கிரேவி கெட்டியாகும்போது மீன் சேர்த்து லேசாகப் புரட்டி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

பிரியாணி அரிசியைக் கழுவி நன்கு வடிகட்டவும். அகலமான பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி, அலங்கரிக்கக் கொடுத்துள்ள நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வறுத்தெடுத்து வைக்கவும். பின்னர் முந்திரிப்பருப்பு, திராட்சையை நெய்யில் வறுத்து வைக்கவும். பின்னர் அதே பாத்திரத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து ஏலக்காய், கிராம்பு, பட்டை, சோம்பு, மீதமுள்ள மெலிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வடிகட்டிய அரிசி சேர்த்துக் கிளறி

5 நிமிடங்கள் வதக்கவும். சூடான நீர், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். வாணலியை இறுக்கமாக மூடி, அரிசி மென்மையாகும் வரை சமைக்கவும். இடையிடையே கிளறி வெந்தபின் இறக்கவும்.

அகலமான பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் நெய் தடவி மீன் மசாலாவைப் பரப்பவும். கரம் மசாலா ஒரு சிட்டிகை தூவிவிடவும். பின்னர் வேகவைத்த அரிசி, ஒரு சிட்டிகை கரம் மசாலா, வறுத்த வெங்காயம், திராட்சை மற்றும் முந்திரி ஆகியவற்றைப் பரப்பவும்.பின்னர் மூடியால் காற்று புகாதவாறு இறுக்கமாக மூடி அடுப்பில் வைக்கவும். 10 - 13 நிமிடங்கள் சிறு தீயில் வைக்கவும். தலசேரி தம் மீன் பிரியாணி தயார்.

தயிர்ப் பச்சடி, பப்படம் மற்றும் ஊறுகாய் ஆகியவை இந்த தலசேரி மீன் பிரியாணிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். கேரளாவில் அனைத்து வகை பிரியாணிகளுக்கும் இவற்றைத் தொட்டுக்கொள்வது வழக்கம்.

நேற்றைய ரெசிப்பி: அக்கி ரொட்டி

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

5 நிமிட வாசிப்பு

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

5 நிமிட வாசிப்பு

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

புதன் 16 பிப் 2022