மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 பிப் 2022

நூல் விலை மீண்டும் ஏற்றம்: ஜவுளி தொழில் முடங்கும் அபாயம்!

நூல் விலை மீண்டும் ஏற்றம்: ஜவுளி தொழில் முடங்கும் அபாயம்!

பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் மீண்டும் 5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை நூல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரூரில் ஜவுளி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கரூர் நகர ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கரூர் நகரில் உள்ள ஜவுளி நிறுவனங்கள் சுமார் ரூ.8,000 கோடி அளவுக்கு வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை உற்பத்தி செய்து அதில் ரூ.4,000 கோடி அளவுக்கு ஏற்றுமதியும் செய்து வருகின்றன. இதனால் கரூர் நகரம் மத்திய அரசினுடைய சிறப்பான ஏற்றுமதி நகரம் என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் கரூர் ஜவுளி நிறுவனங்களின் வர்த்தகம் ரூ.25,000 கோடியை எட்ட வேண்டும் என்ற இலக்கோடு பல முயற்சிகளை ஜவுளித் துறை சார்ந்த அனைத்து அமைப்புகளும் மத்திய, மாநில அரசுகளோடு இணைந்து செய்து வருகிறது.

ரூ.25,000 கோடி இலக்கை எட்டுவதற்கு சாதகமான சூழ்நிலையாக உலக நாடுகளின் தற்போதைய சீனாவுக்கு எதிரான பொருளாதாரக் கொள்கைகள் இருக்கின்றன. சீன நாட்டிலிருந்து ஜவுளி பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கும் பல வாடிக்கையாளர்கள் தற்போது இந்திய ஜவுளி நிறுவனங்களோடு வர்த்தகத்தை அதிகப்படுத்தவும் ஒப்பந்தங்கள் செய்யவும் ஆர்வம்காட்டி வருகிறார்கள்.

ஜவுளித் தொழிலை வளர்ப்பதற்கு மிகப்பெரும் தடையாக நூல் விலை ஏற்றம் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நூல் விலை ஏற்றப்படுவது, ஜவுளி உற்பத்தியாளர்கள் விலை ஏற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று அரசுகளுக்கு வேண்டுகோள் விடுவதும் வாடிக்கையாக இருந்தாலும், நூல் விலை குறையவும் இல்லை, மத்திய அரசு நூல் விலையை குறைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு மிகவும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது.

குறைந்தது மூன்று மாதங்களுக்கு நூல் விலை ஒரே அளவில் இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை நூல் உற்பத்தியாளர்களுக்கும் மத்திய அரசுக்கும் பலமுறை நேரிலும், கடிதம் மூலமும் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இரண்டு முறை நூல் விலை ஏற்றம் கண்டும், தற்போது பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி மீண்டும் 5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை நூல் விலை அதிகரிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் விலை ஏற்றம் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஜவுளி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் மிகப்பெரிய அச்சத்தைக் கொடுத்திருக்கிறது.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பஞ்சு மீதான இறக்குமதி வரி நீக்கப்பட்டால் உள்நாட்டில் பஞ்சு விலை குறைந்து அதன் மூலம் நூல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதேபோல உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பஞ்சு நமக்கு மூலப்பொருளாக இருந்தும், மத்திய அரசின் நிலைப்பாட்டின் காரணமாக இந்திய ஜவுளி நிறுவனங்களுக்கு போட்டியாக திகழும் சீனா, பங்களாதேஷ், வியட்நாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதன் மூலம் உள்நாட்டில் பஞ்சு தட்டுப்பாடு ஏற்பட்டு, தொடர்ச்சியாக நூல் விலை ஏற்றம் காண்கிறது.

மூலப் பொருட்களை ஏற்றுமதி செய்வது மட்டுமல்லாமல், பஞ்சு நூலாக தயாரிக்கப்பட்ட பிறகு நூலாக ஏற்றுமதி செய்வதற்கு அனுமதிப்பதன் மூலம் நூல் மில்கள் நூலை தயாரித்து உள்நாட்டில் விற்பனை செய்யாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, அதன் மூலம் நூல் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை ஏற்றம் காண்கிறது.

இதே நிலை தொடர்ந்து நீடித்தால், பஞ்சு நூலை அதிக அளவில் பயன்படுத்தி வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை உற்பத்தி செய்யும் கரூர் ஜவுளி நிறுவனங்கள் அவர்களுடைய வர்த்தக ஒப்பந்தங்களை இழப்பது மட்டுமல்லாமல் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதும் இயலாத செயல் ஆகிவிடும். ஒப்பந்தங்களை தக்கவைக்காமல் புதிய ஒப்பந்தங்களைப் பெறாமல், உற்பத்தியைக் குறைப்பது அல்லது உற்பத்தியை நிறுத்துவது தவிர ஜவுளி நிறுவனங்களுக்கு வேறு வழி இல்லை. அவ்வாறு உற்பத்தியை குறைத்தாலும், நிறுத்தினாலும் ஜவுளி தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் முக்கியமாக கிராமப்புறப் பெண்கள் வேலைவாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்படும்.

எனவே ஜவுளி தொழிலைக் காப்பாற்ற, ஜவுளி துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு மத்திய அரசு உடனடியாக பஞ்சு இறக்குமதி மீதான வரியை நீக்க வேண்டும், பஞ்சு ஏற்றுமதி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு நிரந்தரமாகவோ அல்லது மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாகவோ தடை விதிக்க வேண்டும் என்பது ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

-ராஜ்

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

வெள்ளி 4 பிப் 2022