மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 பிப் 2022

கிச்சன் கீர்த்தனா: மிளகாய்க் குழம்பு

கிச்சன் கீர்த்தனா: மிளகாய்க் குழம்பு

நம்மில் பெரும்பாலானோர் காரமான உணவையே விரும்புகிறார்கள். உணவில் சுவை குறைந்தால் கொஞ்சம் காரசாரமான ஊறுகாயைக் கேட்பார்கள். அப்படிப்பட்டவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய இந்த மிளகாய்க் குழம்பு உதவும். பழைய சோற்றுக்கு ஊறுகாய்க்கு பதில், இந்தக் குழம்பு கன ஜோராக அமையும். இந்தக் குழம்பை நல்லெண்ணெயில் சமைத்தால், அதன் சுவையும் வாசமும் தனி. மேலும், நல்லெண்ணெய் உடலுக்குக் குளிர்ச்சி தரக் கூடியது. தாளிக்க வெந்தயம் சேர்ப்பதும், உடல் வெப்பத்தைத் தணிக்கும். வெங்காயம் அதிகமாகப் போட்டு, ‘இனிப்பு மிளகாய்க் குழம்பும்’, வெங்காயம் குறைவாகப் போட்டு, ‘கார மிளகாய்க் குழம்பும்’ என இரண்டுமே செய்யலாம்.

என்ன தேவை?

பச்சை மிளகாய் - 20

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பெரிய வெங்காயம் - ஒன்று (நடுத்தரமானது)

பூண்டு - 6 அல்லது 7 பல்

புளி - பெரிய எலுமிச்சைப்பழ அளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க...

நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

உளுந்து - அரை டீஸ்பூன்

வெந்தயம் - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

மஞ்சள்தூள் - சிறிதளவு

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தை நறுக்கவும். அடுப்பில், அடி கனமான பாத்திரத்தை வைத்து, நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கவும். அதன் பிறகு கடுகு, உளுந்து, வெந்தயத்தைப் போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும், நறுக்கிவைத்த சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் பூண்டுப் பற்களையும் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் நிறம் மாறி வரும் நேரம், நறுக்கிவைத்த பச்சை மிளகாயையும் அதில் போட்டு நன்றாக வதக்கவும்.

இன்னொரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து, அதன் கரைசலை எடுத்துவைத்துக்கொள்ளவும். வெங்காயமும், பச்சை மிளகாயும் நன்கு வெந்து வதங்கி வரும் நேரத்தில், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, கரைத்துவைத்த புளிக்கரைசலையும் ஊற்றி, குழம்பைக் கொதிக்கவிடவும். குழம்பு நன்கு சேர்ந்து, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி வைக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: பனீர் கோஃப்தா குழம்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வெள்ளி 4 பிப் 2022