மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 ஜன 2022

பயன்பாடற்று கிடக்கும் சுகாதார வளாகம்: அரசுக்கு மக்களின் கோரிக்கை!

பயன்பாடற்று கிடக்கும் சுகாதார வளாகம்: அரசுக்கு மக்களின் கோரிக்கை!

குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவ்வப்போது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வரும் நிலையில் ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகத்தை அரசு உடனடியாக கவனம் செலுத்தி, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெங்கடதாம்பட்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் ஒன்று வெங்கடதாம்பட்டி. இங்கு சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு 2004ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் ஒன்றை அமைத்தது.

இந்த வளாகத்தில் கழிப்பறைகள், குளியலறைகள் என மொத்தம் 14 அறைகள் இருக்கின்றன. மேலும், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மின் மோட்டார் மூலம் நீர்த்தேக்கத் தொட்டிக்கு நீர் அனுப்பப்பட்டு, ஒரு வருடம் மக்கள் பயன்பாட்டிலிருந்து வந்திருக்கிறது. பிறகு மோட்டார் பழுதடைந்து விட்டது.

இந்த மோட்டார் பழுதை காரணமாக வைத்து, ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக பலமுறை ஊராட்சி அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு 2011ஆம் ஆண்டு ஊரக கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.99 லட்சம் மதிப்பீட்டில் அரசாங்கம் இந்தக் கட்டடத்தை புனரமைத்தது. ஆனால், சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்ட ஐந்து மாதங்களிலேயே மீண்டும் மோட்டார் பழுதடைந்து விட்டது.

அதையடுத்து, மக்கள் மீண்டும் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கின்றனர். ஆனால், மக்களின் கோரிக்கைக்கு அரசு இயந்திரம் செவி சாய்க்கவில்லை. 2011 முதல் சுமார் 10 ஆண்டுகளாக எந்த ஒரு நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், அந்த கட்டடமானது பாழடைந்தும், முட்புதர்களால் சூழ்ந்தும் காடு போன்று காட்சியளிக்கிறது.

இதுகுறித்து பேசியுள்ள வெங்கடதாம்பட்டியைச் சேர்ந்தவர்கள், “ஆரம்பகாலத்தில் மக்கள்தொகை குறைந்த அளவே காணப்பட்டது. கட்டடத்தில் மின்சார விளக்கும் இல்லை. சீரான தண்ணீர் வசதியும் இல்லை. இருப்பினும் மக்கள் இந்தக் கட்டடத்தைப் பயன்படுத்தி வந்தனர். ஒருமுறை நாங்களே மோட்டாரை ரிப்பேர் செய்தோம். ஆனால், அடிக்கடி பழுதடைந்ததால் மக்கள் தயங்கினர். அனைவரும் தினக்கூலிகளே. ஒரு வருடத்துக்குப் பிறகு மோட்டார் பழுதடைந்தது. அதோடு சரி, நாங்கள் பலமுறை ஊராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்துவிட்டோம். ஆனால், இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது எங்கள் கிராமத்தில் மக்கள்தொகை அதிகமாக விட்டது. கிராமத்தில் போதிய அளவில் கழிவறைகள் இல்லாததால், பெரும்பாலான மக்கள் இயற்கை உபாதை கழிக்க திறந்தவெளியைத் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதனால், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவ்வப்போது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வருகின்றனர். அதனால், அரசாங்கம் இந்த கட்டடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் வசதியாக இருக்கும்” என்றனர்.

“ஊத்தங்கரையிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் பிரதான சாலையில், ‘திறந்தவெளியில் மலம் கழிக்காதீர்!' என்ற விழிப்புணர்வு பலகையுடன் வரவேற்கும் வெங்கடதாம்பட்டியின் சுகாதார கட்டமைப்பு முகம் சுளிக்கும் அளவுக்கு இருப்பது வேதனை விஷயம். அதனால் அரசு உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஆதங்கப்படுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

-ராஜ்

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

திங்கள் 31 ஜன 2022