மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 ஜன 2022

ஈரோடு ஜவுளி சந்தையில் கட்சிக்கரை வேட்டிகள் - சின்னம் பதித்த சேலைகள்!

ஈரோடு ஜவுளி சந்தையில் கட்சிக்கரை வேட்டிகள் - சின்னம் பதித்த சேலைகள்!

ஈரோடு ஜவுளி சந்தையில் அரசியல் கட்சிக்கரை போட்ட வேட்டிகள், சின்னங்கள் பதித்த சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. தற்போது கொரோனா காரணமாக ஜவுளி உட்பட அனைத்து வியாபாரங்களும் மந்தம் அடைந்து உள்ள நிலையில் தேர்தல் காரணமாக விற்பனை அதிகரிக்குமா என்று வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

எந்த வகை தேர்தல் என்றாலும் நகர்ப்புறமோ, கிராமப்புறமோ திருவிழா கோலம் பூண்டு விடும். கட்சிக்கொடிகளின் தோரணங்கள், சுவர் விளம்பரங்கள், ஒலிபெருக்கி விளம்பரங்கள், வெற்றி கோஷங்கள், உறுதிமொழிகள், துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் என்று அனைத்து வீதிகளும் பரபரப்பாக காணப்படும். ஆனால் தற்போதைய தேர்தல் விதிமுறைகளால் தேர்தல் வந்தால் கொடி மரங்கள் அகற்றுவது, கட்சி தலைவர்களின் சிலைகளை மறைப்பது, படங்களை அழிப்பது, கல்வெட்டுகளை மறைப்பது என்று வித்தியாசமாக தேர்தல் திருவிழா தொடங்குகிறது.

முன்பு தேர்தல் என்றால் சுவர் எழுத்து வரையும் ஓவியர்கள், கொடிகள் தயாரிப்பவர்கள், வாகனங்களில் சென்று மைக்கில் பேசி பிரச்சாரம் செய்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால், இப்போது அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. ஆனால், இன்றும் அன்றும் மாறாமல் இருப்பது அந்தந்த கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தேர்தல் நேரத்தில் விரும்பி அணியும் கட்சி கரை போட்ட வேட்டிகள்.

சமீப காலமாக அரசியலில் பெண்களின் பங்கும் அதிகரித்து இருப்பதால் கட்சி சின்னங்களுடன் கூடிய சேலைகள் அணிந்து செல்வதும் அதிகரித்துள்ளது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள் தொடங்கியிருப்பதால் ஈரோடு ஜவுளி சந்தையில் கட்சிக்கரைகள் போட்ட வேட்டிகள், சின்னங்கள் பதித்த சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

“உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் அதிக அளவில் போட்டியிடுவார்கள். எனவே அவர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு இந்தக் கட்சிக்கரை போட்ட வேட்டிகள், சேலைகள் வாங்கித்தருவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம், கொரோனா காரணமாக ஜவுளி உட்பட அனைத்து வியாபாரங்களும் மந்தம் அடைந்து உள்ள நிலையில் தேர்தல் காரணமாக விற்பனை அதிகரிக்குமா?” என்று வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திருப்பூர்

இந்த நிலையில் திருப்பூர் பகுதியில் கட்சிகளின் கொடிகள், சின்னம், துண்டு, தொப்பி, பேட்ஜ்கள் உள்ளிட்ட பொருட்களின் தயாரிப்பு முழு வீச்சில் தொடங்கியுள்ளது. திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் இந்த பணிகளைத் தொடங்கியுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கட்சியினர் ஆர்டர்கள் கொடுக்க திருப்பூருக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள நிறுவன உரிமையாளர் ஒருவர், “தேர்தல் அறிவிப்பு வெளியாகி சில நாட்களே ஆன நிலையில் ஆர்டர்களின் வரத்து தற்போது வரத் தொடங்கியுள்ளது. அடுத்து வரும் நாட்களில் ஆர்டர்கள் அதிக அளவில் வரும் என எதிர்பாா்க்கப்படுகிறது. இருப்பினும் தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில், மூலப் பொருட்களின் விலை உயர்வால் வேறு வழியின்றி பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திலும் உள்ளோம்.

தற்போது நூல், பஞ்சு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் பின்னலாடை தொழில் நலிவடைய தொடங்கியுள்ளது. அதன் எதிரொலியாக கட்சிகளின் கொடி உள்ளிட்ட பொருட்களின் தயாரிப்பு தொழிலும் பின்னடைவை சந்தித்து வருகிறது. வேறு வழியின்றி நாங்களும் மேற்கண்ட பொருட்களுக்கு 10 சதவிகிதம் விலையை உயர்த்தியுள்ளோம்.

எங்கள் நிலையை புரிந்து கொண்டு கட்சியினரும், வாடிக்கையாளர்களும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறோம். மிகக்குறுகிய காலத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், ஆர்டர்களின் வருகையும் வழக்கத்தை விட குறைவாகவே இருக்கும் என நினைக்கிறோம். இருப்பினும் தயாரிப்பு பணிகளை முழு நம்பிக்கையுடன் தொடங்கியுள்ளோம்” என்றார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் சூடுபிடித்துள்ள நிலையில், அதற்கு தொழில் நகரான திருப்பூரும் சளைத்ததல்ல என்னும் வகையில் இங்கு கட்சிகளின் கொடி உள்ளிட்டவை தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

-ராஜ்

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

திங்கள் 31 ஜன 2022