மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 ஜன 2022

தை அமாவாசை: நீர்நிலைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

தை அமாவாசை: நீர்நிலைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

அமாவாசைத் திதி மாதா மாதம் நடந்தாலும், தைமாதத்திலும், ஆடி மாதத்திலும் வரும் அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு. தை மாதம் முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். உத்தராயண கால ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும், தட்சணாயன கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி அமாவாசையும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாட்களில் முன்னோரை வழிபட்ட பிறகுதான் தெய்வத்தையே வழிபட வேண்டும் என்பார்கள். அந்தளவுக்கு இந்த நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்தது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்புதான் வழிபாட்டு தலங்களை திறந்து வைத்திருக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் இன்று(ஜனவரி 31) தை அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளில் அதிகாலை முதலே மக்கள் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டு வருகின்றனர். இதனால், கடற்கரை, நீர்நிலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னை

சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட நிலையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மக்கள் கடற்கரையில் நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையலிட்டு பூஜை செய்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் பொதுமக்கள் கொரோனா விதிகளை பின்பற்றி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

இராமநாதபுரம்

தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் முன்புள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பின்பு ராமநாதசுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து அங்குள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடிய பின்பு சுவாமி அம்பாளை பக்தர்கள் தரிசித்தனர். இதனால், நகர் பகுதி முழுவதும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு ராமநாதபுரம் மட்டுமில்லாமல், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து வழிபட்டனர்.

குற்றலாம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே ஏராளமான மக்கள் தர்ப்பணம் செய்ய மெயின் அருவிக்கரையில் குவிந்தனர். அருவியில் புனித நீராடிய மக்கள், தங்கள் மூதாதையர்களை நினைத்து வழிபட்டு எள், தண்ணீர் தெளித்து தர்ப்பணம் செய்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அருவியில் குளித்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிக மகிழ்ச்சியாக இருப்பதாக மக்கள் கூறினர்.

பவானி

ஈரோடு மாவட்டத்தில் மூன்று ஆறுகள் சந்திக்கும் பவானி கூடுதுறையில், திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு பவானி கூடுதுறை திறக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் அனைவரும் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டு விட்டு சங்கமேஸ்வரரை வழிபட்டனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி

தை அமாவாசையான இன்று திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கருடமண்டபம் உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலேயே மக்கள் கூடி முன்னோர்களை நினைத்து பல பூஜைகள் செய்து வழிபட்டபின்பு, பூஜையில் வைக்கப்பட்ட பிண்டங்களை காவிரி ஆற்றில் கரைத்து புனித நீராடினர். தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் செல்வதால் மக்கள் காவிரியில் புனித நீராடி வருகின்றனர். அதனால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி தீயணைப்பு படையினர் தயார் நிலையில் இருந்தனர். 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் இன்று அதிகாலை 4 மணி முதலே மந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

இதையடுத்து கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோயில்,பகவதி அம்மன் கோயில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், ரயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

தை அமாவாசையையொட்டி நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

நெல்லை

தை அமாவாசையை தொடர்ந்து, பாபநாசம் பகுதியில் உள்ள தலையணை, முக்கூடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், சிவந்திபுரம், கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர், சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் உள்ள தாமிரபரணி படித் துறைகளிலும் மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

கோவை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் நொய்யல் ஆற்றுப் பகுதியில் தை அமாவாசையை முன்னிட்டு , மக்கள் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

இதுபோன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டு வருகின்றனர். ஒருசில இடங்களில் மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றினாலும், பெரும்பாலான இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல், கும்பல் கும்பலாக இருப்பதை காணமுடிகிறது. இதன்மூலம் கொரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

-வினிதா

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

திங்கள் 31 ஜன 2022