மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 31 ஜன 2022

கிச்சன் கீர்த்தனா: சோயா பீன்ஸ் குழம்பு

கிச்சன் கீர்த்தனா: சோயா பீன்ஸ் குழம்பு

சில நாட்களில் திடீர் விருந்தினர்களின் வருகையின்போது என்ன சமையல் செய்வது என்று திண்டாடுவோம். அந்த நாள் அசைவம் சாப்பிட முடியாத நாளாக அமைந்துவிட்டால் மேலும் சிரமமாகிவிடும். அப்படிப்பட்ட நேரத்தில் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு அதன் சுவையை நினைவூட்டும் அருமையான சைவ சமையல் இந்த சோயா பீன்ஸ் குழம்பு. இது சாதத்துக்கு மட்டுமல்ல... இட்லி, தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

என்ன தேவை?

சோயா பீன்ஸ் (உரித்தது) - கால் கிலோ

உருளைக்கிழங்கு - ஒன்று

தக்காளி - ஒன்று

வெங்காயம் - ஒன்று

தேங்காய் (துருவியது) - 2 டீஸ்பூன்

குழம்பு மசாலாப்பொடி - 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - சிறிதளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

கடுகு - சிறிதளவு

உளுத்தம்பருப்பு - சிறிதளவு

எப்படிச் செய்வது?

தேங்காயுடன், குழம்பு மசாலாப் பொடி, நறுக்கிய தக்காளி சேர்த்து, நைஸாக அரைத்துவைத்துக் கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து, சோயா பீன்ஸைப் போட்டு, மூன்று விசில்வரும் வரை வேகவைக்கவும். வெந்த சோயா பீன்ஸை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். கடுகு வெடித்ததும், நறுக்கிய வெங்காயத்தையும் கறிவேப்பிலையையும் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் நன்கு வதங்கி வாசனை வரும்போது, தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கைப் போட்டு வதக்கவும்.

இவை வதங்கி வரும்போது, மஞ்சள் தூள், உப்பைச் சேர்த்து வதக்கவும். உருளைக்கிழங்கு கண்ணாடியாக மின்னும் நேரத்தில், அரைத்த தேங்காய் - மசாலா விழுதைச் சேர்த்து, ஒரு புரட்டு புரட்டி, வேகவைத்த சோயா பீன்ஸை அதில் இருக்கும் நீரோடு ஊற்றவும். கரண்டியை விட்டு கிளறிப் பார்க்கும்போது குழம்பு எவ்வளவு நீர்க்க இருக்கிறது என்பது தெரிந்துவிடும். அப்போது குக்கரை மூடி, வெயிட் போட்டு, இரண்டு விசில் வரும் வரை அடுப்பில் வைத்து இறக்கவும். குக்கரைத் திறக்கும்போது குழம்பு தேவையான அளவு, ‘கிரேவி’யாக இருக்கிறதா, இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றலாமா என்று பார்த்து, உங்கள் தேவைக்கேற்ப, தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். கடைசியில், நறுக்கிய கொத்தமல்லித்தழையைச் சேர்க்கவும்.

குறிப்பு

உருளைக்கிழங்குக்குப் பதிலாக, சின்னச் சின்ன காலிஃப்ளவர் மொட்டுகளையும் சேர்த்துச் சமைக்கலாம்.

சண்டே ஸ்பெஷல் - சைனஸ் தொந்தரவு - உணவின் மூலம் விடுபடலாமா?

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

திங்கள் 31 ஜன 2022