பிலிப்பைன்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணையை ஏற்றுமதி செய்யும் இந்தியா!


இந்தியாவின் சக்தி வாய்ந்த பிரமோஸ் ஏவுகணையை பிலிப்பைன்ஸ் வாங்க 374 மில்லியன் டாலர் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய பிரமோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள், ஒளியைவிட மூன்று மடங்கு அதிக வேகத்தில் செல்லக் கூடியது. கிட்டத்தட்ட 450 கி.மீ தூரத்தில் இருக்கும் இலக்கை நோக்கி தாக்கும் வலிமை கொண்டது. மேலும், இந்த ஏவுகணையைக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தரையில் இருந்தும் இயக்க முடியும்.
இத்தனை சிறப்பு வாய்ந்த ஏவுகணையை பிலிப்பைன்ஸ் வாங்க 374 மில்லியன் டாலர் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்தியாவின் முதல் பாதுகாப்பு உபகரண ஒப்பந்தமாகும்.
கடந்த ஆண்டு, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட், ராஜ்யசபாவில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி அதிகரிப்பு குறித்து தெரிவித்திருந்தார். அதில், “இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 2016-17இல் ரூ.1,521 கோடியிலிருந்து 2020-21இல் ரூ.8.43 கோடியாக அதிகரித்துள்ளது. 2018-19இல் இந்த ஏற்றுமதி ரூ.10,745 கோடியாக இருந்தது. 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதிக்கு ஐந்து பில்லியன் டாலர்களாக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
கனிமவளம் கொட்டிக்கிடக்கும் தென் சீனக்கடல் பகுதியைச் சீனா உரிமை கோருகிறது. ஆனால், பிலிப்பைன்ஸ், வியட்நாம், புரூனே, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், சீனாவைச் சமாளிக்க இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையை பிலிப்பைன்ஸ் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
-ராஜ்