குப்பை லாரியை சிறை பிடித்த பொதுமக்கள்!

public

ஈரோடு ஜீவா நகரில் மாநகராட்சி குப்பை லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள், லாரிகள் மூலம் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர் அங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் மூலம் நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

ஈரோடு ரங்கம்பாளையம் ஜீவா நகரில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையத்துக்கு 32, 34, 35ஆவது வார்டுகளில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதற்கிடையில் குடியிருப்பு பகுதிகள் அருகில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் செயல்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சக்தி நகர், பெரியார் நகர், சூரம்பட்டிவலசு உள்ளிட்ட வெளிபகுதிகளில் இருந்தும் அதிக அளவில் ஜீவா நகரில் உள்ள நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையத்துக்கு லாரிகள் மூலம் குப்பைகள் கொண்டுவரப்படுவதால் அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி அந்தப் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி குப்பை லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தினையும் முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த குமார் தலைமையில் போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “வெளியிடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுவதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஈ, கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சாப்பிடும்போது அதிக அளவில் ஈக்கள் வந்து உணவில் அமர்வதால் பல்வேறு விதமான நோய்கள் பரவி வருகிறது.

எனவே எங்கள் பகுதியில் செயல்பட்டுவரும் குப்பை கிடங்கினை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். அதுவரை வெளியிடங்களில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து இங்கு கொட்ட கூடாது” என்று கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள், “குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனி வெளியிடங்களில் இருந்து குப்பைகள் கொண்டு வந்து இங்கு கொட்டாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *