உடல் பருமன்: மாணவி தற்கொலை!


யூடியூப்பை பார்த்து துப்பாக்கி, வெடிகுண்டு தயாரிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளன. அறிவியல் வளர்ச்சியைத் தவறாகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றத்துக்கு துணைபுரிந்தால் யூடியூப்பும் குற்றவாளிதான் என்று சமீபத்தில் வழக்கொன்றில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்திருந்தது. யூடியூப்பை பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்து பலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த நிலையில், திருச்சியில் பள்ளி மாணவி ஒருவர் உடல் பருமனாக இருந்ததால் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கண்டோன்மென்ட் அலெக்சான்ட்ரியா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் திருச்சி எஸ்பிஐ வங்கியில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் புருஷோத்தமன். இந்தத் தம்பதி கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது 13 வயது மகள் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
மாணவி கடந்த சில மாதங்களாக உடல் பருமனைக் குறைப்பதற்காகத் தொடர்ந்து பல்வேறு சிகிச்சை முறைகளை எடுத்து வந்தார். உணவு கட்டுப்பாட்டுடன் பல்வேறு முயற்சிகள் செய்தும், உடல் எடையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்ற மாணவி, காலை வரை கதவைத் திறக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவரது அம்மா, ஜன்னல் வழியாக பார்த்தபோது அதிர்ச்சியானார். மகள் மின்விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டதைப் பார்த்து அலறிய ஷர்மிளாவின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
பின்னர், இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கண்டோன்மென்ட் உதவி ஆணையர் அஜய் தங்கம், உதவி ஆய்வாளர் அகிலா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்பு மாணவி பயன்படுத்திய செல்போனை போலீஸார் ஆராய்ந்தபோது, தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக, மாணவி தற்கொலை செய்துகொள்வது எப்படி என்பது குறித்து யூடியூப்பில் வீடியோ பார்த்துள்ளார் என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-வினிதா