தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

public

தஞ்சை பள்ளி மாணவி மரணத்துக்கு பலரும் பல்வேறு வித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் மாணவி மரணத்துக்கு கட்டாய மதமாற்றம்தான் காரணம், அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், மாணவி விவகாரம் தொடர்பாக தஞ்சை பள்ளியின் நிர்வாக சபையான தூய இதய மரியன்னை சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தூய இதய மரியன்னை சபைத்தலைவர் பாத்திமா பவுலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சை மாவட்டம், திருகாட்டுப்பள்ளி அருகே, மிக்கேல்பட்டியில் உள்ள எமது பள்ளி மாணவி ஒருவரின் மரணம், எம் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இழப்பால் வருந்தும், பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், சக மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும், பள்ளி நிர்வாகத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அம்மாணவியின் இழப்பு எங்கள் பள்ளிக்கும் நிர்வாகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். உயிரிழந்த மாணவி எட்டாம் வகுப்பிலிருந்து எங்கள் விடுதியில் தங்கிப் படித்து வந்தார். விடுமுறைகளில் கூட, வீட்டிற்குச் செல்லாமல், எங்களோடு தங்குவதையே விரும்புவார். அவ்விதத்தில் எங்கள் அனைவருக்கும் பிள்ளையாகவே அவர் வளர்ந்தார். அதனால் தான் பத்தாம் வகுப்பில் 489/500 மதிப்பெண்கள் பெற்றார். அவளது இறப்பை ஒட்டிப் பல்வேறு வதந்திகள் தற்போது பரவுகின்றன.

எங்கள் தூய இதய மரியன்னை சபை கடந்த 180 ஆண்டுகளாய்க் கல்விப்பணியில் ஈடுபட்டுள்ளது. இப்பள்ளி 160 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. மாணவிகளின் நலன் கருதியே அப்பள்ளியில் 90 ஆண்டுகளாய் விடுதியும் செயல்படுகிறது. தமிழ் மண்ணில் பெண்கல்வியிலும் பெண் விடுதலையிலும், எங்கள் சபையினுடைய பங்களிப்பு முதன்மையானது. பட்டி தொட்டியெல்லாம் தமிழ்வழிப் பள்ளிகளை நாங்கள் நடத்தி வருகின்றோம். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு, இந்தியச் சமூகம் கல்வி மறுத்த காலத்தில், எங்கள் பள்ளிகளே, பொதுக்கல்விக்கான விடியலாய் அமைந்தது. அதனை நாங்கள் அர்ப்பணத்துடன் செய்கின்றோம்.

பெண் குழந்தைகளின் மகிழ்ச்சி, எதிர்காலம், அவர்களின் ஒளிமயமான வாழ்வு இவையே எங்கள் கல்வி நிறுவனங்களின் இலக்காகும். எங்களிடம் பயிலும் குழந்தைகள் பல மதங்களையும், சமூகத்தையும் சார்ந்தவர்கள். அச்சூழலில், அனைவருக்குமான சமயச்சார்பற்ற கல்வியை எங்கள் சபை அளித்து வருகிறது. எவரது மத நம்பிக்கையிலும் நாங்கள் குறுக்கிடுவதில்லை. அனைவரது நம்பிக்கையையும் பெரிதாக மதிக்கிறோம். இதுவே எங்கள் பொது வாழ்வின் அடிப்படையாக உள்ளது.

கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று இறந்து போன எங்கள் மாணவி, தன்னுடைய இறுதி வாக்குமூலத்தில், விடுதிக் காப்பாளர் மீது குற்றம் சுமத்தியதாக அறிகின்றோம். காவல் துறை மற்றும் கல்வித்துறையின் முறையான விசாரணைக்கு நாங்கள் துணையாக உள்ளோம். அது தொடர்பான சட்ட விசாரணைகளுக்கு, எப்போதும் நிர்வாகம் துணை நிற்கும். கிறித்தவச் சமூகம் சட்டத்தை மதித்து வாழும் ஒரு சமூகமாகும்.

அதே வேளையில், இத்துயரச் சம்பவத்தை தங்கள் அரசியலுக்காக, ஒருசில பிரிவினர் கையில் எடுப்பதும், திசை திருப்புவதும், பொய்களை விதைப்பதும், ஊடகங்களில் எம்மை அவதூறு செய்வதும், எங்கள் பணிக்குக் களங்கம் கற்பிப்பதும் பல வழிகளில் தொடர்கிறது. இதுகுறித்து நாங்கள் பெரிதும் வருந்துகிறோம். பல்லாண்டுகளாய், பல இலட்சம் மாணவிகளுக்குக் கல்வி வழங்கி வரும் எம் நிறுவனங்களில் இதுபோன்ற குற்றச்சாட்டு இதுவரை எழுந்ததில்லை. ஒவ்வொரு குழந்தையின் ஆளுமையை, சுதந்திரத்தை, அவர்களின் தனித்தன்மையை, நாங்கள் பெரிதும் மதிக்கின்றோம். மதமாற்ற நடவடிக்கை என்ற குற்றச்சாட்டிற்கு எவ்விதத்திலும் எம் நிறுவனங்களில் எந்த அடிப்படையும் இல்லை. எங்கள் பள்ளியில், கல்லூரிகளில் பயின்ற பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்களே இதற்குச் சாட்சியாவர். எம் குழந்தைகளின் மதங்களைக் கடந்த மனித மாண்பின் அடிப்படையிலும், இந்திய அரசியல் சாசனத்தின் விழுமியங்கள் அடிப்படையிலுமே எம் கல்விக் கூடங்கள் செயல்படுகின்றன. அச்சூழலில், இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி, எங்கள் நிறுவனங்களைக் குற்றப்படுத்துவதும், எமது சமூக அர்ப்பணத்தைக் கொச்சைப்படுத்துவதும் மிகவும் வருந்தத்தக்கது.

உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாமென ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *