மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 ஜன 2022

55 தமிழக மீனவர்கள் விடுதலை!

55 தமிழக மீனவர்கள் விடுதலை!

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில் கடந்தாண்டு டிசம்பர் 18ஆம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து 6 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவர்களை எல்லை தாண்டி சென்று மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. இவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மீனவர்களை விடுதலைச் செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதற்குள்ளாக, இலங்கை கடற்படை மீண்டும் டிசம்பர் 20ஆம் தேதி மேலும் 12 மீனவர்களை கைது செய்தது. அடுத்தடுத்த நாட்களில் மொத்தமாக 55 மீனவர்கள் கைது செய்யப்பட்டது மீனவர்கள் மட்டுமில்லாமல், அரசியல் தலைவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

மீனவர்களின் விடுதலை தொடர்பாக இலங்கை அரசுடன் கலந்தாலோசித்து தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இரண்டு முறை கடிதங்கள் எழுதினார்.

பொங்கல் பண்டிக்கைக்கு மீனவர்கள் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. மாறாக, மீனவர்களின் சிறைக்காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில் தமிழக மீனவர்களின் 105 படகுகளை பிப்ரவரி 7ஆம் தேதி முதல் ஏலம் விடப்போவதாகவும் இலங்கை அரசு அறிவித்தது. இது தமிழக மீனவர்களை மேலும் கோபமடைய செய்தது.

இந்த நிலையில் மீனவர்கள் வழக்கு இன்று இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 55 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்வதாக அறிவித்தனர். இதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 55 பேரும் கொழும்புவில் உள்ள மெருஹானா முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஓரிரு நாட்களில் மீனவர்கள் தமிழ்நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு கடனுதவி அளிப்பது தொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர், இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டபோது, மனிதாபிமான அடிப்படையில் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் தற்போது மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து, இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 25 ஜன 2022