மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 25 ஜன 2022

துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடல்!

துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடல்!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் உள்ள துப்பாக்கி சுடும் மையம் நிரந்தரமாக மூடப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை திருச்சி சாலையில் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரத்தில் தமிழ்நாடு காவல் துறைக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இங்கு காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் 30 ஆம் தேதியன்று வழக்கம்போல் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது வீரர் ஒருவரின் துப்பாக்கியிலிருந்து பறந்து சென்ற ஒரு குண்டு, இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் பாய்ந்தது. இதனால் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அன்றே துப்பாக்கி சுடும் பயிற்சி மையமும் மூடப்பட்டது. நான்கு நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை அறந்தாங்கியைச் சேர்ந்த கவிவர்மன் என்ற சுரேஷ் கண்ணா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழக காவல்துறை மொத்தமாக நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் குறைந்தபட்சம் ஒரு துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் இருக்கும். அந்த தளங்களில் துப்பாக்கி சுடும் பயிற்சியை தொடங்குவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அந்த பயிற்சித் தளத்தின் பொறுப்பதிகாரியின் கடமை.

இப்பயிற்சியை தொடங்குவதற்கு முன்பாக அதுதொடர்பான எச்சரிக்கையை வழங்க வேண்டும். தமிழக காவல்துறையும், சிஐஎஸ்எஃப் வீரர்களும் இந்த பயிற்சி தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். விதிப்படி பயிற்சி காவலர்கள் அதிக திறன் வாய்ந்த துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்தக் கூடாது. ஆனால் அது பெயரளவிலேயே உள்ளது. கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி 11 வயது சிறுவர் மீது, தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்தது. நான்கு நாட்களுக்கு பிறகு அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு தளத்தில் இருந்து இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சிறுவன் மீது தவறுதலாக குண்டு பாய்ந்து, அவர் உயிரிழந்துள்ளார். அதுபோல சக்தி வாய்ந்த துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தும் பயனில்லை. ஆகவே, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து, தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் மரணத்தை விசாரிக்கவும், சிறுவனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்கவும் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றவும், புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூடவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று(ஜனவரி 25) நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "கடந்த டிசம்பர் 30ஆம் தேதியே நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது. இனிவரும் காலங்களிலும் அத்தளம் பயன்படுத்தபடமாட்டாது” என்று உறுதியளிக்கப்பட்டது.

இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

-வினிதா

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

செவ்வாய் 25 ஜன 2022