கிருஷ்ணா தண்ணீரைத் திறக்க வேண்டாம்: காரணம் என்ன?

public

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீரை ஏப்ரல் மாதம் வரை திறக்க வேண்டாம் என்று ஆந்திர அரசுக்கு தமிழக அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். இதற்கான காரணம் குறித்தும் விளக்கமளித்துள்ளனர்.

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த ஐந்து ஏரிகளில் மொத்தம் 11.7 டிஎம்சி தண்ணீரைச் சேமித்து வைக்கலாம். வடகிழக்கு பருவமழை கடந்த இரண்டு மாதங்களாக கொட்டித்தீர்த்த்தால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் நிரம்பி உள்ளன. தற்போதைய நிலவரப்படி ஐந்து ஏரிகளிலும் மொத்தம் 10.9 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 93 சதவிகிதம் ஆகும்.

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீர் பூண்டி ஏரிக்குத் திறந்துவிட வேண்டும். தற்போது சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் நிரம்பி இருப்பதால் ஏப்ரல் மாதம் வரை பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறந்துவிட வேண்டாம் என்று ஆந்திர அரசுக்கு தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டிஎம்சி ஆகும். இதில் தற்போது 3.122 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் கிருஷ்ணா தண்ணீரை சேமிக்க பயன்படும் கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரி முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. எனவே கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டால் அதை பூண்டி, கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிகளில் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படும். இதனை கருத்தில்கொண்டு கிருஷ்ணா நதி நீர் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். கோடைக் காலத்தை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள நீர்வளத் துறை அதிகாரி ஒருவர், சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டால் தண்ணீரை ஏரிகளில் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படும். சராசரியாக தற்போது மாதம் தோறும் 1,200 முதல் 1,500 மில்லியன் கன அடி தண்ணீர் குடிநீருக்காக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏரிகளில் தண்ணீர் இருப்பை கருத்தில்கொண்டு ஏப்ரல் மாதம் வரை கிருஷ்ணா நதி நீர் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளோம். மேலும் கண்டலேறு – பூண்டி ஏரி இடையே உள்ள கிருஷ்ணா கால்வாயில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதை மார்ச் மாதத்துக்குள் சரி செய்து முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணா கால்வாயில் தொடர்ந்து சிறிதளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் இந்த பணி மெதுவாக நடந்து வருகிறது” என்று விளக்கமளித்துள்ளார்.

**-ராஜ்**

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *