மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

public

அரியலூரில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் முதற்கட்ட விசாரணையில் மதம்மாறச் சொல்லி வற்புறுத்தியதாக எந்த தகவலும் உறுதியாகவில்லை என்று தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா விளக்கமளித்துள்ளார்.

தஞ்சையிலுள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைபள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது. மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு விடுதி வார்டனின் தொல்லையே காரணம் என்று முதலில் தகவல்கள் வெளியான நிலையில், மாணவியை மதம் மாற்றம் செய்ய வற்புறுத்தியதாலே மாணவி தற்கொலை செய்துகொண்டதாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். மதமாற்றம் செய்ய அழுத்தம் கொடுத்ததால் அரியலூரைச் சேர்ந்த மாணவி விஷம் குடித்து மரணம் அடைந்துள்ளார். நடுநிலையான விசாரணை நடைபெற வேண்டும். உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் வலியுறுத்தியிருந்தார்.

மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு மாணவியின் தந்தை முருகானந்தம் மற்றும் பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இளங்கோ உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், மாணவியை மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால் தான் தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறி நேற்று மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் மாணவி மரணம் குறித்து தஞ்சை எஸ்.பி.ரவளிபிரியா விளக்கமளித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “எங்களின் முதற்கட்ட விசாரணையில், மதமாற்றம் தொடர்பான எந்த குற்றச்சாட்டும் வரவில்லை. முதல் முறையாக பெற்றோர்கள் கொடுத்த புகாரிலோ, நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்திலோ, காவல்துறை விசாரணையின் போதோ மதமாற்றம் என்ற புகார்கள் வரவில்லை. நேற்றுதான் இதுபோன்ற தகவல் வெளியாகி உள்ளது. ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும்போது அவரை வீடியோ எடுப்பதும், அதை ஒளிபரப்புவதும், அவர்கள் பெயர், முகவரி உள்ளிட்டவை வெளியிடுவது சட்டப்படி குற்றம். மாணவியின் அடையாளங்களை வெளியிட்டவர்கள் மீது சிறார் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் மாணவி பேசிய வீடியோ எப்போது எடுக்கப்பட்டது? எப்படி எடுக்கப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மாணவி உயிரிழந்தது தொடர்பாக ஏற்கனவே 305 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பெற்றோர்கள் தரப்பில் மனு அளித்துள்ளனர். அதுகுறித்து விசாரணை செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *