சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.119 கோடி வருமானம்!


பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.119 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு வழக்கமாக மூன்று அல்லது நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். ஆனால் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு அடுத்து தைப்பூசம் வந்ததால் மொத்தமாக ஆறு நாட்கள் விடுமுறை கிடைத்தது. அதனால் ஊருக்கு செல்ல திட்டமிடாதவர்கள் கூட இத்தனை நாள் விடுமுறை கிடைத்தவுடன் ஊருக்கு கிளம்பி சென்றனர். கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டாலும், மக்கள் அதை பொருட்படுத்தாமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பவும் தங்கள் வேலை பார்க்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்தனர்.
பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்காக கடந்த 11, 12, 13 ஆகிய 3 நாட்கள், பண்டிகை முடிந்து திரும்புவதற்கு 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் என மொத்தம் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் 16,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகள் மூலம் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.119 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
-வினிதா