மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 ஜன 2022

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

கொரோனா பாதித்தவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் அவர்கள் காசநோய் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மூன்றாவது அலை பரவ தொடங்கியதிலிருந்து தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. நேற்று 2 லட்சத்து 58 ஆயிரத்து 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு வழிமுறைகள், சிகிச்சைகள் தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், ஆக்ஸிஜன் அளவு மற்றும் சுவாச விகிதங்களின் அடிப்படையில்,லேசான,மிதமான மற்றும் கடுமையான நோய் வகைகளின் கீழ் யார் வருவார்கள் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது.

மூச்சு திணறல் இல்லாதவர்கள்,லேசான பாதிப்பு உள்ளவர்கள் என கருதப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிக காய்ச்சல், 5 நாட்களுக்கு மேல் தொடரும் இருமல், சுவாசிப்பதில் சிரமம் உள்ள கொரோனா நோயாளிகள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஆக்சிஜன் அளவு 90-93 சதவிகிதம் குறைந்து, மூச்சுத் திணறல் உள்ளவர்களை மிதமான பாதிப்பு உடையவர்களாகக் கருத வேண்டும். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும். அத்தகைய நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களின் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.

குறைவான சுவாச விகிதம், கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் உடல் ஆக்சிஜன் அளவு 90க்கு கீழ் குறைந்தால் அதைக் கடுமையான கொரோனா பாதிப்பாகக் கருத வேண்டும். அவர்களுக்கு ஐசியூ பிரிவில் கட்டாயம் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்க வேண்டும்.

அதிகளவு ஸ்டீராய்ட் மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது, இன்வேசிவ் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் மருத்துவர்கள் அதை பரிந்துரைப்பதை தவிர்க்க வேண்டும்.

இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால், நோயாளிகள் டிபி எனப்படும் காசநோய் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நிதி ஆயோக் உறுப்பினரும் (சுகாதாரம்) கோவிட் பணிக்குழுவின் தலைவருமான டாக்டர் வி.கே. பால், “ஸ்டீராய்டுகள் போன்ற மருந்துகளின் அதிகப்படியான மற்றும் தவறான பயன்பாடு குறித்து கவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசோதனையை அதிகரிக்க அறிவுரை

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஒமிக்ரான் வைரஸ் மிகவும் தீவிரமானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், ஐசிஎம்ஆர் இணைய தளத்தில் உள்ள தரவுகளின் மூலம், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. பரிசோதனைகளின் மூலமே தொற்றின் தீவிர தாக்கம் உள்ள பகுதி, புதிதாக தொற்று பரவும் பகுதிகள் கண்டறியப்பட்டு, உடனடியாக தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை, புதிய கட்டுப்பாட்டு பகுதி அறிவித்தல், பரவுதலை அடையாளம் காணுதல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த முடியும். இதன் மூலம், மாநிலங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் கொரோனா பரவலை தடுப்பதுடன், இறப்பு, மக்கள் நோயினால் பாதிக்கப்படுவதை குறைக்கலாம். தொற்று தீவிரமாக பாதிப்பதையும் தவிர்க்கலாம். எனவே, தொற்றுநோய் பரவுவதை திறம்பட கண்காணிக்கவும், உடனடியாக நடவடிக்கை தொடங்கப்படுவதையும் உறுதி செய்ய கொரோனா பரிசோதனையை மேம்படுத்துவது அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கடமையாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 19 ஜன 2022