தேசிய திறனாய்வு தேர்வு தள்ளிவைப்பு!


கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 29ஆம் தேதி நடைபெறவிருந்த தேசிய திறனாய்வு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று ஒருசில தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடைபெறும். இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு, முதுநிலைபடிப்பு வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
தேசிய திறனாய்வு தேர்வு மூலம் தேர்வாகும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாதம் 1000 ரூபாயும் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் மாதம் 1,250ரூபாயும், அதன்பின்னர் முதுநிலை படிப்பு படிக்கும் போது 2000 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும்.
அதன்படி இந்தாண்டு தேசிய திறனாய்வு தேர்வு ஜனவரி 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, அந்த தேர்வு ஜனவரி 29ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
தற்போதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் தேசிய திறனாய்வு தேர்வு பிப்ரவரி 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஜனவரி 19ஆம் தேதியன்று பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில், தேர்வு தேதி மாற்றத்தின் காரணமாக வரும் ஜனவரி 25 அன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர், தலைமையாசிரியர்கள் இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நுழைவு பெயர், கடவுச் சொல்லை பயன்படுத்தி ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-வினிதா