குடோனுக்குள் கூலாக உலா வரும் சிறுத்தை!

கோவை பி.கே.புதூரில் கடந்த மூன்று நாட்களாக குடோனுக்குள் பதுங்கி இருக்கும் சிறுத்தையின் சிசிடிவி காட்சிகளை வனத் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கோவை குனியமுத்தூர் அருகேயுள்ள சுகுணாபுரம், மைல்கல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சிறுத்தை குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத் துறையினரும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்து வந்தனர். கடந்த டிசம்பர் மாதம் கோவையில் தனியார் கல்லூரி வளாகத்தில் நாயை கொன்ற சிறுத்தை அதன்பிறகு யார் கண்ணிலும் படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் குடோனில் சிறுத்தை பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குடோனின் மேல்புறம் முழுவதும் வலையை விரித்தும், குடோனின் முன்புறம், பின்புறம் உள்ள வாசல்களில் மாமிசம் வைக்கப்பட்ட கூண்டுகளை வைத்தும் சிறுத்தையை பிடிக்க வனத் துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.
சிறுத்தையை பிடிப்பதற்கான பணி மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் சிறுத்தை அந்த குடோனை விட்டு வெளியே வராமல் வனத் துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.
குடோனில் சிறுத்தையின் நடவடிக்கைகளை கண்காணிக்க, ட்ரோன் கேமரா பறக்க விடப்பட்டது. ஆனால், ட்ரோன் கேமரா பழைய கழிவுப் பொருட்களில் சிக்கிக் கொண்டதால், 10 அடி உயர கம்பத்தில், சிசிடிவி கேமரா பொருத்தி, கண்காணிக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வனத் துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் குடோனில் உள்ள அறைகளில் கூலாக சிறுத்தை உலா வருவது பதிவாகியுள்ளது.
கோவையில் மூன்றாவது நாளாக சிறுத்தை புலியை பிடிக்கும் பணி தீவிரம்.
— கார்த்திக் சதிஸ்குமார் (@kovaikarthee) January 19, 2022
சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வனத்துறை வெளியிட்டது. #kovai pic.twitter.com/onoA6ycUvr
சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் சிக்கல் இருப்பதால், தானாகவே அது சிக்கும்வரை காத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவசியம் ஏற்பட்டால் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி அதற்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என்று கூறிய மருத்துவ குழுவினர், சிறுத்தை ஆரோக்கியமாக உள்ளது என்று தெரிவித்தனர்.
சிறுத்தையை பிடிக்கும்வரை அப்பகுதி மக்கள் வெளியே வர வேண்டாம் என்று வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளதால் மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி உள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் நீலகிரி பகுதியில் சுற்றி திரிந்த டி 23 புலியை பிடிக்க 23 நாட்கள் ஆன நிலையில், இந்த சிறுத்தையை பிடிக்க எவ்வளவு நாள் ஆகும் என்பது தெரியவில்லை.
-வினிதா