மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 ஜன 2022

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

இரண்டு ஆண்டுகளாக லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்கள் தினசரி ஆரோக்கிய தகவல்களை ஜோ கோவிட் (ZOE COVID) ஆய்வுக்கு வழங்கி பெருந்தொற்றின் போக்கைப் புரிந்துகொள்ள உதவிவருகின்றனர். குறிப்பாக, ஆய்வு செயலி வாயிலாக அளிக்கப்பட்ட 480 மில்லியன் அறிக்கைகள், இந்த வைரஸ் எப்படி மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும், அதற்கேற்ப அறிகுறிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதையும் உணர்த்தியுள்ளன.

2020 துவக்கத்தில், கொரோனா வைரசின் மூல, ஆல்பா வடிவங்கள், இருமல், காய்ச்சல், வாசனை பாதிப்பு ஆகிய மூன்று முக்கிய அறிகுறிகளையும், இன்னும் 20 பிற அறிகுறிகளையும் கொண்டிருந்தது. களைப்பு, தலைவலி, மூச்சுத் திணறல், தசை வலி, வயிறு பிரச்சினை ஆகியவை இதில் அடங்கும். மேலும் சருமப் புண்கள் மற்றும் கோவிட் நாக்கு ஆகிய வழக்கத்திற்கு விரோதமான அறிகுறிகளும் அடங்கும்.

டெல்டா உருமாறித் தோன்றியதும், பரவலாகக் காணப்படும் அறிகுறிகள் மாறியதை உணர்ந்தோம். இதற்கு முன்னர் முதன்மையாக இருந்த மூச்சுத் திணறல், காய்ச்சல், வாசனை பாதிப்பு ஆகியவை பின்னுக்குத் தள்ளப்பட்டன. ஜலதோஷம் போன்ற, மூக்கில் சளி, தொண்டை பாதிப்பு, இடைவிடாத தும்மல் ஆகியவற்றோடு, தலைவலி, இருமல் ஆகியவை குறிப்பாகத் தடுப்பூசி பெற்றவர்கள் மத்தியில், அதிகம் காணப்பட்டன.

ஒமிக்ரான் உருமாற்றத்தில் இந்தப் போக்கு தொடர்வதாகத் தெரிகிறது. வழக்கமான ஜலதோஷத்தைவிடக் கூடுதல் அறிகுறிகளை இது உண்டாக்குகிறது. குறிப்பாகத் தடுப்பூசி பெற்றவர்கள் மத்தியில் இத்தகைய அறிகுறிகளையும், கூடுதலாக தலைச்சுற்றல், தசை வலி, வயிற்றுப்போக்கு, சரும பாதிப்பு போன்ற பொதுவான அறிகுறிகளையும் உண்டாக்குகிறது.

பிரிட்டனில் ஒமிக்ரான் பரவிக்கொண்டிருந்தபோது டிசம்பர் மாதத்தில் கோவிட் பாதிப்பு கொண்டவர்களின் மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்து, டெல்டா உருமாற்றம் தீவிரமாக பரவிய அக்டோபர் மாத தரவுகளுடன் ஒப்பிட்டோம். இந்த ஒப்பீடு முடிவுகளை, பிசிஆர் முடிவுகள் ஒமிக்ரான் தொற்று கொண்டதாக அல்லது அதற்கான சந்தேகம் கொண்டதாக இருப்பதாக அரசால் தெரிவிக்கப்பட்ட சிறு குழுவினரின் தரவுகளை அலசிப்பார்த்து சோதித்துக்கொண்டோம்.

டெல்டா, ஒமிக்ரான் வைரஸ்களின் ஒட்டுமொத்த அறிகுறிகளில் எந்த பெரிய வேறுபாடும் இல்லை என்றும், மூக்கில் சளி, தலைவலி, களைப்பு, தும்மல், தொண்டை பாதிப்பு ஆகிய ஐந்து அறிகுறிகள் அதிகம் இருப்பதும் எங்கள் ஆய்வில் தெரியவந்தது. ஆனால், ஒட்டுமொத்த அறிகுறிகளின் தன்மையில் சில வேறுபாடுகள் இருந்தன.

ஒமிக்ரான் பொதுவான அறிகுறிகள்

அக்டோபரில் முதல் பத்து அறிகுறிகளில் ஒன்றாக இருந்த வாசனை பாதிப்பு 17ஆவது இடத்திற்கு வந்துவிட்டது. ஒரு காலத்தில் கோவிட் முக்கிய அறிகுறியாக இருந்தது, இப்போது தொற்று பாதிப்பு கொண்ட ஐந்து பேரில் ஒருவரிடம் மட்டும் தான் உள்ளது. மேலும் எங்கள் தரவுகள் படி, மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு மட்டுமே காய்ச்சல் உண்டாகிறது. கடந்த காலத்தில் பார்த்ததைவிட இதுவும் குறைவானது.

முக்கியமாக, பாதிக்கும் மேலானவர்களிடம் மட்டுமே காய்ச்சல், இருமல் அல்லது வாசனை பாதிப்பு ஆகிய மூன்று பிரதான அறிகுறிகள் காணப்பட்டது, அரசின் பிசிஆர் சோதனை வழிகாட்டி நெறிமுறைகள் பொருத்தமற்றவை என்பதை உணர்த்துகின்றன.

ஒமிக்ரான் பாதிப்பு எப்படி?

இந்தப் புதிய உருமாற்றம் முந்தைய உருமாற்றங்களைவிடத் தீவிரமாகப் பரவுகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிவார்களா என்பது தெரியவில்லை என்றாலும், ஒமிக்ரான் அல்லது டெல்டா ஜலதோஷமாகத் தோன்றினாலும், இன்னமும் அது இறப்பு அல்லது நீண்ட கால பாதிப்புகளை உண்டாக்கலாம். தடுப்பூசி போடாதவர்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கலாம்.

இதுவரை இளைஞர்கள் மத்தியில் பாதிப்புகளைக் கண்டிருந்தாலும், இப்போது வயதானவர்கள் மத்தியிலும் பாதிப்பு அதிகரிக்கிறது. 75 வயதுக்கு மேலானவர்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் பாதிப்பு கவலை அளிக்கிறது என்றாலும், பிரிட்டனில் வயதானவர்கள் மத்தியில் அதிகம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது பாதிப்பையும், மருத்துவமனை சேர்க்கையையும் குறைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

ஒமிக்ரான் / ஜலதோஷம்

பிரிட்டனில் குளிர்காலம் தீவிரமாகும் நிலையில், ஜலதோஷம் மற்றும் ப்ளு காய்ச்சல் அதிகமாக இருக்கிறது. தற்போதைய கோவிட் உருமாற்றம் உண்டாக்கும் அறிகுறிகள் வழக்கமான ஜலதோஷம் போலவே இருப்பதை ஜோ கோவிட் ஆய்வு செயலி உணர்த்துகிறது. எனவே அறிகுறிகளை மட்டும் வைத்துக்கொண்டு என்ன பாதிப்பு என கண்டறிய முடியாமல் இருக்கிறது. தொற்று அதிகமாக இருக்கும்போது தொண்டை பாதிப்பு அல்லது மூக்கில் சளி, சோதனை செய்யப்படும் வரை, கோவிட் என்றே சிகிச்சை அளிக்கப்படலாம்.

இந்தச் செயலி தினசரி அறிகுறிகள் பதிவு, சோதனை முடிவுகளை மட்டுமே கொண்டிருப்பதால், கோவிட் அல்லாத ஜலதோஷத்தையும் கணக்கிட முடிகிறது. மூன்று மாதங்களுக்கு முன், புதிய சுவாசக் கோளாறு அறிகுறிகள் கொண்டவர்களில் 12 பேரில் ஒருவர்தான் கோவிட் பாதிப்பு கொண்டிருந்தனர். ஆனால் இப்போது, 50 சதவீத புதிய ஜலதோஷம் கோவிட் பாதிப்பாக இருக்கிறது.

எனவே, உங்கள் குடும்ப உறுப்பினர் நலமற்று இருந்தால் அது கோவிட் பாதிப்பாக இருக்கலாம். அதிலும் குறிப்பாகத் தும்மல் அதிகம் இருந்தால். வீட்டிலேயே இருப்பதும், உடனே சோதனை செய்வதும் அவசியம். அண்மை சோதனை முறை சிறப்பாக உள்ளது. ஆனால் இரு முறை செய்துகொண்ட பிறகு, மீண்டும் சோதித்துக்கொள்வது நல்லது.

இறுதியாக, அரசு வழிகாட்டி நெறிமுறைகளை மீறி, கோவிட் பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை மீறி, ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் இருந்தால், தனிமைப்படுத்திக்கொண்டு முககவசம் அணியுங்கள்.

-

நன்றி: தி கான்வர்சேஷன் இணைய இதழ்

தமிழில்: சைபர் சிம்மன்

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 18 ஜன 2022