மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 ஜன 2022

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 21 காளைகளை அடக்கி கார்த்திக் என்பவர் முதல் பரிசு பெற்றார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், ஜனவரி 15ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதையடுத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. கோட்டை முனியசாமி வாடிவாசல் திடலில் நடந்த இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். முதலில், அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயில் காளை, அரியமலை கருப்புசாமி கோயில் காளை, வலசை கருப்புசாமி கோயில் காளை உள்ளிட்ட கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

ஆனால் இந்த காளைகளை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. தொடர்ந்து நடந்த போட்டியில் மொத்தம் ஏறத்தாழ 1000 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் என்ற எண்ணிக்கையில் 8 சுற்றுகள் நடைபெற்றன.

போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் மற்றும் காளைகளுக்கு தலா ஒரு தங்கக் காசு பரிசாக வழங்கப்பட்டது. இது தவிர வெள்ளிக்காசுகள், இருசக்கர வாகனங்கள், பீரோக்கள், சைக்கிள்கள் மோதிரம் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டன.

அதுபோன்று போட்டியின் முடிவில் 21 காளைகளை அடக்கிய கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உதயநிதி எம்எல்ஏ சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

அதுபோன்று சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டம் கைகுறிச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து காளையின் உரிமையாளருக்கு முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

அதுபோன்று 19 காளைகளை அடக்கி அலங்காநல்லூரை சேர்ந்த ராம்குமார் என்பவர் இரண்டாம் பரிசை பெற்றார். சித்தலாங்குடி கோபாலகிருஷணன் 13 காளைகளை அடக்கி மூன்றாவது பரிசு பெற்றார். இவர்கள் இருவருக்கும் இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

-பிரியா

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 18 ஜன 2022