மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 ஜன 2022

சிறப்பு நேர்காணல்: கலையும் காலமும்... பகுதி 4

சிறப்பு நேர்காணல்: கலையும் காலமும்... பகுதி 4

ஆர்எம்.பழனியப்பன்

1957ஆம் ஆண்டு தேவகோட்டையில் பிறந்தவர் ஆர்எம்.பழனியப்பன். சென்னை அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவர். 1991ஆம் வருடம் அமெரிக்காவின் டாமரின்ட் பல்கலைக்கழகத்தில் Advanced Lithography பயின்றவர். 1996ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் Artist in Residency ஆக இருந்தவர்.

சிறப்புமிக்க கலை படைப்பாளி - ஓவியர் ஆர்எம்.பழனியப்பன் அவர்களுடன் எடுக்கப்பட்ட சிறப்பு நேர்காணலின் தொடர்ச்சியை இனி காணலாம்.

உன் படைப்பில் கையொப்பம் இல்லாமலேயே அது உன்னுடையது என்று எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும். இப்படி சில ஓவியர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்... இது சரியா?

கட்டாயம் சரிதான். ஒரு சிறு துளி ரத்தத்திலும் நகத்துண்டிலும்கூட நமது Genetic Imprint இருக்கிறது. அதேபோல்தான் கலையும். நீயே எல்லாவற்றையும் உள்வாங்கி, நன்கு செரித்து, பதப்படுத்தி ஒரு படைப்பை உருவாக்கினால் அதில் கட்டாயம் உன்னுடைய படைப்பின் Genetic Imprint இருக்கும்.

நீங்கள் பொறுப்பேற்று வேலை செய்தது பற்றி...

நான் லலித்கலா அகாடமியில் 1982 முதல் 1987 வரை பதிப்போவியப் பணிமனையில் பொறுப்பாளராக வேலை பார்த்தேன். 1987 முதல் 2007 வரை சென்னை மற்றும் லக்னோவில் மண்டலச் செயலாளராகப் பொறுப்பேற்று வேலை பார்த்தேன். இதற்கிடையில் 2017இல் கூடுதல் பணி நிமித்தமாக நடுவண் அரசின் கீழ் இயங்கும் தஞ்சையில் உள்ள தென்மண்டல கலாச்சார மையத்தின் தலைமை பொறுப்பை ஏற்றிருந்தேன். எல்லாவற்றும் இடையிலும் இடைவிடாமல் நான் கோட்டோவியங்களை வரைந்துகொண்டுதான் இருந்தேன். எனது படைப்பு நேரங்களை இரவு நேரங்களிலேயே ஒதுக்கிக்கொண்டேன்.

உங்கள் படைப்புகளை மிக பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறீர்கள். அதே நேரத்தில் உங்களுக்கு கலை படைப்பைவிட கலை செய்யும் அனுபவமே முக்கியம் என்று வலியுறுத்துகிறீர்களே...

ஆமாம். இது ஒரு முரண்பாடுதான். சற்றுமுன் வரை Work Process மீதுதான் கவனம் செலுத்தினேன். எனது பதிப்போவியங்களில்கூட பதிப்போவியத் தட்டைக்கொண்டு இரண்டு அல்லது அதிகபட்சம் நான்கு பதிப்போவியங்களை மட்டுமே செய்துள்ளேன். பல பிரதிகள் எடுக்க சந்தர்ப்பங்கள் இருந்தும் அவை எடுக்கப்படவில்லை. காலத்தின் சூழ்நிலையினால் எனது பல பதிப்போவியத் தகடுகள் பாதிப்படைந்து சிதைந்திருப்பதினால் அதைச் சரிசெய்து சில புதிய பிரதிகள் எடுக்க முயற்சி செய்துகொண்டு வருகிறேன். எனது அனுபவங்கள் அந்தத் தகட்டின் மூலமாகச் செய்திருந்ததால் இப்போது அந்தப் பதிப்போவியத் தகடுகளை புனரமைப்பது எனக்கு முக்கியமாகப்படுகிறது. அதன் பிரதிகளும் அதன்மீது நான் செய்யும் பின் செயல்களும், மறுபடியும் ஒரு புது படைப்பைத்தான் உண்டு பண்ணும். கலையை மற்றும் அதன் பிரதிபலிப்பைப் பாதுகாத்தல் என்பது அனைவருக்குமே முக்கியமானது.

உங்களுடைய படைப்புகளை கால வரிசைப்படுத்தி சொல்ல முடியுமா?

நான் செய்யும் ஒவ்வொரு படைப்பும், அதற்கு முன்பு நான் செய்த படைப்புடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பிருக்கும். நான் கல்லூரியில் படித்த காலங்களில் படித்த முதல் மூன்று, நான்கு வருடங்கள் இயற்கை வனப்புகளையும் (Landscape) மற்றும் மனித உருவங்களையும் கலைக்கல்வியின் அடிப்படையில் செய்துள்ளேன். நான்காம் வருடம் முதல் பல ஆக்கபூர்வமான சிந்தையின் அடிப்படையில் எனது படைப்புகளைச் செய்ய ஆரம்பித்தேன்.

நான் கல்லூரியில், நான்காம் வருடம் படிக்கும் காலங்களில் Creative Work செய்ய ஆரம்பித்தவுடன் எனக்குப் புரிந்தது என்னவென்றால் எல்லா படைப்புகளுக்கும் இரண்டு விதமான சூழ்நிலைகளும், பார்வைகளும் இருக்கும். ஒன்று உளவியல் சார்ந்த வெளிப்பாடாகவும் (Psychological Expression). மற்றொன்று பௌதீகம் இயற்பியல் சார்ந்த வெளிப்பாடாகவும் (Physical Expression) இருக்கும். சில காலங்களில் நான் படைக்கும்போது வடிவத்தின் பௌதீக அம்சம் (Physical aspect of the image) மேலோங்கி இருக்கும். சில காலங்களில் உளவியல் சார்ந்த அம்சம் முக்கியமாக இருக்கும்.

1979-80... எனது கல்லூரி கடைசி வருடங்களில் இவை ஒன்றுசேர பல வரைபடங்கள், ஓவியங்கள் மற்றும் இயந்திரத்தின் இயக்கத்தின் உயிர் தன்மையை சித்திரித்தேன்.

நான் முதலில் செய்த Creative Work என்றால் ‘பறக்கும் பொருள்’ (Flying Object 1979) என்ற தலைப்பில் படைத்திருக்கிறேன். பின்பு 1980-82களில் ‘பறக்கும் மனிதன்’ (Flying Man) என்றும், 1984 முதல் 1989 வரை ஆவணங்கள் (Documents Series) என்று தலைப்பிட்டு பல தொடர் படைப்புகளை செய்துள்ளேன். அனைத்துப் படைப்பிலும், நிறைய கணிதம் தொடர்பான குறியீடுகளைப் பயன்படுத்தினேன். அந்த நேரத்தில் ‘Number Psychology’ என்ற தலைப்பிலும் எண்கள் எப்படி எண்ணங்களாக மாறுகின்றன என்பதையும், அதன் பாதிப்பு மற்றும் பிரதிபலிப்பு நமது மனத்திரையில் எவ்வாறு இயக்கப்படுகிறது என்பதைப் பற்றியும் பல ஓவியங்கள் செய்தேன்.

1980களில், மயிலாப்பூர் பகுதியில் நான் வசித்து வந்த காலங்களில் எனக்கு கோயிலுக்குச் செல்வது ஒரு பழக்கமாக இருந்தது. அந்த நேரங்களில் அது மனத்தில் ஒருவிதமான அமைதியையும், படைப்பாற்றலுக்கு உந்துதல் அளித்ததாலும் மற்றும் கச்சேரி, நாட்டிய அரங்கங்களுக்குத் தொடர்ச்சியாக சென்றுகொண்டு இருந்தமையால், மயிலாப்பூர் கோயிலுக்குச் செல்வது வழக்கம் ஆயிற்று. அங்கிருக்கும் நவகிரக சிற்பங்களின் அமைப்பின் பிரதிபலிப்பால் ‘ஒன்பது விண்கோள்களுக்குப் பயணம்’ (Journey to Nine Planets) என்ற தலைப்பில் பல தொடர் சித்திரங்கள் செய்தேன். ஒவ்வொரு கிரகத்தின் அளவும், அவற்றிடையே உள்ள தொலைவும் வெவ்வேறு. ஆனால், கோயிலில் அமைக்கப்பட்ட அந்த நவகிரக சிற்ப அமைப்பில், கிட்டத்தட்ட ஒரே அளவுடன் சம தொலைவில் இருப்பதுபோல் அமைத்து, சித்திரித்து வடிவமைத்து இருப்பார்கள். என்னுடைய இந்தப் படைப்போவியத்தில் ஒவ்வொரு கோளையும் சதுரங்கள் ஆக்கி ஒன்று சேர்த்து இணைத்திருப்பேன். அதன்மேல் பல வரைகோடுகள் இயக்கத்தை வெளிப்படுத்தச் செய்தேன்.

அதன் பின்னர் ‘அந்நிய விண்கோள்கள்’ (Alien Planets) என்ற தலைப்பில் 1987 முதல் 1989 வரை வேலை செய்தேன். இவை அனைத்தும் வண்ணச் சேர்க்கைகள் கொண்ட பதிப்போவியங்கள். எல்லாம் ‘Documents’ என்ற தலைப்பிலேயே தொடர் படைப்புகளாக வெளிவந்தன. ஒரே ஆவணத்துக்குப் படிமம் சார்ந்த அனுபவம் வெவ்வேறு விதமாக இருக்கும். எடுத்துக்காட்டாக விண்கோள்கள் பற்றி மக்கள் கற்பனை மற்றும் விஞ்ஞான ரீதியாக நிறைய கருத்துகளை முன் வைப்பார்கள். இவையெல்லாம் மனத்தில் பலவிதமான பரிமாணங்கள் கொண்ட புலனுணர்வு படிமங்களை ஏற்படுத்துகின்றன. மனம் என்று குறிப்பிடும்போது பொதுவாகச் சொல்கிறேன்... எந்த ஒரு தனிப்பட்ட நபரின் மனத்தைப் பற்றியும் சொல்லவில்லை. ஏனென்றால், என் படைப்புகளின் மூலம் மக்கள் எல்லோரிடமும் பொதுவாகப் பேச விரும்புகிறேன். ஒவ்வொருடைய மனதிலும் ஒரே விஷயம், பலவிதமான பரிமாணங்களுடன் பலவிதமாகப் பிரதிபலிக்கிறது.

1987-89களில் செய்த Alien Planet படைப்புகள் வட்டமான அமைப்பில் இருக்கும். நான் பதிப்போவிய தகட்டினை இந்தப் படைப்புகளுக்காக செய்யும்போது, மிக நுணுக்கமான இத்துறையின் அறிவுகளை உட்படுத்தி ஓர் ஆபரணம் செய்வதைப் போல் அந்த தகட்டில் இருந்து வெளிவரும் வண்ணச் சேர்க்கைகளை அடிப்படையாகக் கொண்டு தகடுகளை வடிவமைத்தேன். இரண்டு வருடமான அந்தப் பயணம் எனது படைப்பாற்றலுக்கு மிக உத்வேகம் அளிப்பதாக இருந்தது. இவ்வாறாக 16 வட்ட வடிவமான Alien Planet படைப்புகளை செய்தேன். இவை ஒன்றுசேர ஒரே பதிப்போவியமாகவும் செய்து, காட்சிப்படுத்தினேன். இதற்கு மயிலாப்பூர் கோயிலில் உள்ள 63 நாயன்மார் சிற்பங்கள் உந்துதலாக இருந்தது. இந்த 63 நாயன்மார்கள் ஒரே காலத்திலேயோ, இடத்திலேயோ அல்லது அதே பின்புலத்தையோ கொண்டவர்கள் அல்லர். ஆனால், கோயில்களில் அவர்கள் எல்லோரையும் இந்த வேற்றுமைகளைப் பொருட்படுத்தாமல் அவர்களை வரிசைப்படுத்தி சிவ பக்தர்களுக்காக ஒருவிதமான ‘Walkthrough Experience’ செய்திருப்பார்கள்.

கதை சொல்லும் அனுபவம் இல்லாமல் அந்த Walkthrough Experience அனுபவத்தை என்னுடைய பார்வையாளர்களுக்கும் ஏற்படுத்த விரும்பினேன். என் படைப்பின்முன் ஒருவிதமான ‘Physical Space’ம் மற்றும் Pyschological Spaceம் இருப்பதை உணர செய்ய முயன்றேன். அதைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கும், தங்களுடைய உடல்ரீதியான அசைவும் மனரீதியான பயணங்களையும் உணர்த்துவதாக அமைத்தேன். இவை எல்லாவற்றையும் பார்வையாளர்கள் அனுபவிப்பார்கள். நான் இப்போது இவற்றைச் சொல்லும்போது சரியாக உணர முடியும்.

என் படைப்புகள் மிகவும் கருத்தியல் (Conceptual) ரீதியாக இருந்ததினால் என்னுடைய முழு உழைப்பையும் பலவிதமாக வெளிப்படுத்துவதாக இருந்தது. சிலர் செய்வதைப் போல கடைக்குச் சென்று சற்று நேரத்தில் பொருட்களை வாங்கி அதைக் கண்காட்சியில் வைத்து அதைப் பற்றி நிறைய கருத்துகள் சொல்லும் பழக்கம் எனக்கில்லை. நேரத்துக்கும் காலத்துக்கும் மதிப்பு இருக்கிறது. அவை என் படைப்பில் இருக்க வேண்டும். மெய்மைக்கு (Reality) எவ்வளவு அருகே செல்ல முடியுமோ... நான் செய்ய நினைத்தேன். என் படைப்பில் உண்மை தன்மை உள்ளது. அவை என் சிந்தனையோடு ஒட்டியவை.

1990 முதல் 1996 வரை ‘வெளியும், நில வடிவங்களும்’ மற்றும் ‘அதன் இயக்கங்களும்’ (Space, Land Architecture / Movement & Land Architecture) என்ற தொடர்ச்சியான படைப்புகள் மூலம், இயக்கங்களின் கோடுகளையும், பெளதீக வெளியில் உள்ள நேர் மற்றும் எதிர்மறையான அனுபவங்களையும், இயற்பியல் உணர்வுகளை மையமாக வைத்து பிரதிபலிக்க செய்தேன்.

1996களில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மூன்று மாதங்கள் இருந்தபோது அந்த நகரத்தின் நில வரைபடங்களையும், அந்த சிறு நகரத்தின் இயக்கங்களையும், சரித்திர வரலாறு முக்கியத்துவம் கொண்ட அவற்றின் கட்டட அமைப்புகளின் தோற்றங்களின் பாதிப்பினால் எனக்கு நேர்ந்த தனிப்பட்ட அனுபவங்களையும் வெளிப்படுத்தி பல படைப்புகளைச் செய்தேன்.

New Berlin on Process படைப்புகளைப் பற்றி பேச முடியுமா.

13 வயதிலே ‘பெர்லினின் வீழ்ச்சி’ (Fall of Berlin) என்ற ஆங்கில துணைத் தலைப்புகள் (Subtitles) கொண்ட ரஷ்யத் திரைப்படத்தைப் பார்த்தேன். அதையடுத்து, உலகப்போர்கள் சம்பந்தமான நிறைய படங்களைப் பார்த்தேன். இவையெல்லாம் என் படைப்புகளில் நிலப்படங்களாகவும் (Map), எழுத்துகளாகவும், பலவிதமான ஆவணப் படங்களாகவும் உருவெடுத்தன. இந்தப் படைப்புகளைக் கண்ட Max Mueller Bhavan நிர்வாகிகள் (Directors) எனக்கு ஜெர்மனி செல்வதற்கும் பல ஊர்களையும் பார்ப்பதற்கும் வாய்ப்பு அளித்தனர்.

அங்கு நான் சென்று பல அருங்காட்சியகங்களைப் பார்த்தேன். அந்த நிகழ்வு, எனக்கு ஜெர்மனியின் 12 முக்கியமான நகரங்களைப் பார்ப்பதற்கும், 35 மேற்பட்ட அருங்காட்சியகங்களைப் பார்ப்பதற்கும், அதன் நிர்வாகிகளையும், பொறுப்பாளர்களையும் சந்திப்பதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. மிக உயர்ந்த அனுபவம்.

நான் பெர்லினில் இருக்கும் கடைசி நாள் அன்று, டாடா (DAAD)வின் முன்னேற்பாடு சந்திப்பை முடித்துவிட்டு மற்றோர் அருங்காட்சியகத்துக்குச் செல்லும்போது ஜெர்மனியில் உள்ள முக்கியமான Brandenburg Gate வழியாகச் சென்றேன். அது அப்போது முக்கியமான ஒரு சுற்றுலா இடம். எனது பல வருட படைப்புகளின் அடிதளத்துக்கும் முக்கியமான இடம் அது. எப்படியாவது அதை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். எப்படியோ அருங்காட்சியகத்தைப் பார்த்துவிட்டு, மறுபடியும் அங்கு வந்து நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எடுத்தேன். என்னை ஈர்த்த அந்த நுழைவாயில் அருகிலேயே வரலாற்றில் முக்கியமான Reichstag (German Old Parliament) இருந்தது. அப்போது அங்கு அதைப் புதுப்பிக்க கட்டட வேலை நடந்துகொண்டிருந்தன. அந்த நேரத்தில் பெர்லின் நகரம் முழுவதும் பல இடங்களில் முக்கியமான Reichstag பகுதியில் பெரிய இயந்திரங்களும், குப்பைப் பொருட்களும் அங்கும் இங்கும் இருந்தன. அவற்றைப் பார்த்தால் போர்க்களம் போன்று காட்சியளித்தது. அவற்றை வேகமாக புகைப்படங்கள் எடுத்தேன். அதை 2000இல் அச்சுப் படைப்புகளாகவும், நீர்வண்ண ஓவியங்களாகவும், புகைப்பட ஓவியங்களாகவும் படைத்துள்ளேன்.

உங்கள் படைப்புகளில் அடிப்படை கருத்து என்று ஏதாவது உள்ளதா?

1982இல், நான் என் படைப்புகளைப் பற்றி ஓர் எண்ணத்தைப் பதிவு செய்தேன். அது இப்போது வரை சரி என்று சொல்லலாம். நான் இந்தப் பிரபஞ்ச வெளியில் ஒரு வரைபடத்தை உருவாக்க விரும்புகிறேன். “I want to create a drawing in the universal space”. அது மனிதனின் சுதந்திரத்தைக் குறிக்கிறது. மனிதனின் சாத்தியத்தைக் குறிக்கும் கருவிகளான விமானங்களையும், ஏவுகணைகளையும் என் படைப்புகளில் சாதனங்களாக உபயோகிக்க விரும்புகிறேன்.

இன்றைய கால சூழ்நிலையில், அமைதி என்பது நம்மிடையே உள்ள போர் கருவிகளையும், அதன் அறிவியல் சிந்தனையையும், அதைப் பயன்படுத்தும் விதத்தையும் பொறுத்திருக்கிறது. இந்தக் கால கட்டங்களில் பலவிதமான நுட்பமான ஆராய்ச்சிக்கிடையில் விஞ்ஞானம் என்பது ஏவுகணைகளையும், விண்கலங்களையும் விண்ணுக்கு அனுப்பும் ஆராய்ச்சி பற்றிதான் சென்று கொண்டிருக்கிறது. நான் அதே ஏவுகணைகளைக் கொண்டு இந்தப் பிரபஞ்ச வெளியில் ஒரு உலகளாவிய வரைபடத்தை (Drawing on the Universal Space) வரையவே விரும்புகிறேன்.

தத்துவம் சார்ந்த புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் உண்டா?

பொதுவாக தத்துவங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் பிரிக்க முடியாத காலம், இடம், வெளி, இயக்கம் மற்றும் அதன் பரிமாணங்கள், பரிணாமம் சார்ந்த தத்துவம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

பயணம் என்பது கலைஞர்களுக்கு அவசியமா?

ஆம். கட்டாயம் தேவைதானே. பயணங்கள் பலவிதமாக இருக்கும். பயணம் செய்யாமல் பல அனுபவங்களைப் பெற முடியாது, நல்ல படைப்புகளையும் செய்யவும் முடியாது. பல இடங்களைப் பார்க்க வேண்டும். நிறைய மக்களைச் சந்திக்க வேண்டும். பலர், சில நேரங்களில் எனது படைப்புகளில் அதிக வண்ணங்களையும், மனித உருவங்களையும் தேடுவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை, என் படைப்பில் எல்லாம் உள்ளன. என் படத்தின் தலைப்புகளை உள்வாங்கி பார்க்கும்போது, அது வேறுவிதமான மொழியைப் பேசும்.

நீங்கள் ஊடகத்தைத் தேர்ந்தெடுத்த பின் அதன் அடிப்படையில் படைப்பீர்களா அல்லது படைப்பின் அடிப்படையில் ஊடகத்தைத் தேர்ந்தெடுப்பீர்களா?

ஒரு காலத்தில் ஊடகம்தான் முக்கியமாக இருந்தது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக பல ஊடகத்தைக் கையாண்ட பிறகு ஒன்றை புரிந்துகொண்டேன். கருத்துணர்வுகளின் வெளிப்பாட்டுக்கு ஊடகம் முக்கியமானது என்பதையும், கலை என்பது அறிவின் வெளிபாடாகவும், காலத்தின் அடையாளமாகவும் புதுவிதமான அழகுணர்வுகளை உணர்த்துவதாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன்.

நீங்கள் பலவிதமான கலையைத் தவிர டிசைனிங் சார்ந்த வேலைகளையும் செய்கிறீர்கள்... இவை இரண்டுக்குமான தொடர்பு...

பதிப்போவியத் துறையில் வேலை செய்யும்போது தொழில் சார்ந்த பல விஷயங்களை அனுபவ மூலமாக காணவும், அனுபவிக்கும் சந்தர்ப்பமும் ஏற்பட்டால் சில ஓவியர்களின் புத்தகங்களை வடிவமைத்ததற்கான வாய்ப்பு ஏற்பட்டது. சில நேரங்களில் பல ஓவியர்கள் விரும்பி வர அது எனக்கு, என்னுடைய தனிப்பட்ட படைப்புகளைச் செய்வதற்குத் தடையாக அமைந்திருந்தாலும், நேர்த்தியாகவும் செய்ய வேண்டியிருந்தால், பல நேரங்களில் ஆலோசனை மட்டும் கொடுத்து விட்டு விலகி உள்ளேன். நான் கல்லூரியில் படிக்கும் காலங்களில் (1979, 1980களில்) Anjelo என்ற புனைப்பெயரில் கல்கி போன்ற பத்திரிகைகளில் பத்திரிகை ஓவியங்கள், எனது பொருளாதார மேம்பாட்டுக்காகச் செய்துள்ளேன். அப்படி செய்யும் காலங்களில்கூட 1980களில், பல பத்திரிகை படங்களில் எனது தனித்தன்மையை வெளிப்படுத்திளேன்.

கலை செய்யாமல் இருக்கும் மற்ற நேரத்தில் என்ன செய்வீர்கள்?

உலகச் செய்திகளைப் பார்க்கவும், படிக்கவும் பிடிக்கும். தத்துவம் சார்ந்த புத்தகங்களையும் படிக்கப் பிடிக்கும். மேலும், எனக்கு எல்லாவிதமான இசைகளிலும் அதிகமான ஈர்ப்பு சக்தி உண்டு. ஒரு சில இசைக் கருவிகளும், ஓரளவு கையாளத் தெரியும்.

கலையால் இவ்வுலகத்தில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமா?

சமீப காலத்தில் இத்தகைய issue-based கலை அதிகமாகி விட்டது. ஆனால், ஒருவனுக்குப் பசி எடுத்தால் நிஜ உணவைத்தான் தர வேண்டும். உணவைப் படமாக வரைந்து கொடுத்தால் என்ன பயன்? கலையால் உலகப் பிரச்சினைகளுக்கு மொத்தமான தீர்வு காண முடியாது.

எழுத்து அல்லது சொல்லின் மூலமாகக் கலையைப் பற்றி துல்லியமாகப் பேச முடியுமா?

சில விஷயங்களைச் சொல்லால் மட்டும் வெளிப்படுத்த முடியும். சில உணர்வுகளை இசையின் மூலமாகவே வெளிப்படுத்த முடியும். சில உணர்வுகளையும், அனுபவங்களையும் ஓவியத்தின் மூலமாக வெளிப்படுத்த முடியும்.

கலையும் கணிதத்தைப் போலவே விடை தேடும் ஒரு முயற்சி என்று சொல்ல முடியுமா?

ஆம். கலை என்பது ஒரு விதமான புதிர். வாழ்க்கையும் அப்படிதான். எங்கோ ஆரம்பித்து எங்கோ முடியும். அதில் நமக்கான ஓர் இடத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம். தற்போது maze போன்ற அமைப்புகளில் எனது படைப்புகளை ஆராய்ச்சி பூர்வமாக செய்து கொண்டிருக்கிறேன்.

வருங்காலத்துக்கான எண்ணங்கள் என்ன?

நான் இல்லை என்றாலும் இவ்வுலகில் என் படைப்புகளுக்கு நிச்சயமாக ஓர் இடம் உண்டு. அதேபோல் என்னுடைய படைப்புகளினால் வரும் கிளைகளினால் இந்தத் துறையும், பல விதமான பரிணாம வளர்ச்சியும் அடையும்.

பகுதி 1 - வளர்ப்பும் வண்ணங்களும்...

பகுதி 2 - பரிணாமங்களும் பரிமாணங்களும்...

பகுதி 3 - அனுபவங்களும் எண்ணங்களும்...

நிறைவடைந்தது

கட்டுரையாளர் குறிப்பு:

வைஷ்ணவி ராமநாதன்

Curator மற்றும் கலை எழுத்தாளர். சென்னையிலும் பெங்களூரில் உள்ள சித்ர கலா பரிஷத்தில் நுண்கலை படித்தவர். இப்பொழுது சென்னை அரசு நுண்கலைக் கல்லூரியில் பகுதி நேர Art History ஆசிரியராக இருக்கிறார். மின்னம்பலத்தின் வெளியீடான 'உருவங்கள் உரையாடல்கள்' நூலின் ஆசிரியர்.

.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

சனி 15 ஜன 2022