வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 75 லட்சமாக உயர்வு!

public

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த 75.31 லட்சம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வரம்புக்குள் வராத அனைத்து அரசுத் துறை பணியிடங்களும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பின் அடிப்படையில்தான் நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது அவசியமாகும். அதன்படி ஆண்டுதோறும் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடிப்பவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, மூன்று வருடத்திற்கு ஒருமுறை புதுப்பித்து வருகின்றனர்.

ஒருகாலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தால் எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்று அனைவரும் நம்பி இருந்தனர். தற்போது அந்த நிலை மாறி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தால் நிச்சயம் வேலை கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் சிலர் வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிப்பதை விட்டுவிட்டனர். இருப்பினும் ஏதோ ஒரு நம்பிக்கையில் இன்னும் பலர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்து கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வரை, மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது.

அதில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 75 லட்சத்து 31 ஆயிரத்து 122 பேர் காத்திருகின்றனர். அவர்களில் 35 லட்சத்து 35 ஆயிரத்து 992 பேர் ஆண்கள், 39 லட்சத்து 94 ஆயிரத்து 898 பேர் பெண்கள், 232 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

பதிவு செய்துள்ளவர்களில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 25 ஆயிரத்து 668 பேர், 19-23 வயது வரையுள்ள பல்வேறு தரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 15 லட்சத்து 50 ஆயிரத்து 245 பேர்,

24-35 வயது வரையுள்ளவர்கள் 28 லட்சத்து 30 ஆயிரத்து 275 பேர், 36-57 வயது வரை உள்ளவர்கள் 13 லட்சத்து 13 ஆயிரத்து 652 பேர், 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11 ஆயிரத்து 282 பேர் உள்ளனர்.

இதில் மாற்றுத்திறனாளிகளின் 1 லட்சத்து 39 ஆயிரத்து 414 பேர் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *