மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜன 2022

சிறப்பு நேர்காணல்: அனுபவங்களும் எண்ணங்களும் - பகுதி 3

சிறப்பு நேர்காணல்: அனுபவங்களும் எண்ணங்களும் - பகுதி 3

ஆர்எம்.பழனியப்பன்

1957ஆம் ஆண்டு தேவகோட்டையில் பிறந்தவர் ஆர்எம்.பழனியப்பன். சென்னை அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவர். 1991ஆம் வருடம் அமெரிக்காவின் டாமரின்ட் பல்கலைக்கழகத்தில் Advanced Lithography பயின்றவர். 1996ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் Artist in Residency ஆக இருந்தவர்.

சிறப்புமிக்க கலை படைப்பாளி - ஓவியர் ஆர்எம்.பழனியப்பன் அவர்களுடன் எடுக்கப்பட்ட சிறப்பு நேர்காணலின் தொடர்ச்சியை இனி காணலாம்.

உங்கள் படைப்புகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்... இதற்கான விளக்கம்?

1980இல் எங்கள் வகுப்பின் ஓவியக் கண்காட்சி சென்னை லலித்கலா அகாடமியின் ரீஜினல் சென்டரில் நடைபெற்றது. அப்போது என் நண்பர் பாலசுப்பிரமணிக்குத் தெரிந்த ஒரு பொறியாளர் வந்திருந்தார். அவர் என்னிடம் பேசும்போது, “எனக்கு எல்லாருடைய படங்களும் ஓரளவு புரிகிறது. ஆனால், உங்கள் ஓவியம் மட்டும் எனக்குப் புரியவில்லை” என்றார். நான் அவரிடம் முதலில் கேட்ட கேள்வி, என் ஓவியத்தின் ஒரு பகுதியைக் காண்பித்து, “இதில் இருப்பது என்ன நிறம், இந்த உருவம் எதைப்போல் இருக்கிறது, நான் எழுதியிருக்கும் எழுத்துகள் என்ன என்று தெரிகிறதா...” - இப்படியெல்லாம் கேட்டவுடன் ஒவ்வொன்றுக்கும் “புரிகிறது, ஓரளவு புரிகிறது, தெரிகிறது” என்று பதில் அளித்துக்கொண்டே வந்தார். நான், “உங்களுக்கு எல்லாம் புரிகிறது மாதிரி இருக்கும்போது ஏன் புரியவில்லை என்று சொல்கிறீர்கள். கலை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எண்ணங்களை வைத்துக்கொள்ளாமல் அதைப் பாருங்கள். ஒரு படைப்பைப் புரிந்துகொள்வதற்கு, அதனுடைய அனுபவங்கள் நிறைய தேவை. இது எல்லாம் துறைக்குமே பொருந்தும். ஓவியருடைய ஒரே ஒரு படைப்பை மட்டும் பார்த்தால் உடனே புரிந்துவிடாது” என்றேன். இது எப்போதும் எல்லோருக்கும் பொருந்தும்.

தத்ரூப வரைபடம் வரைவதில் கைதேர்ந்தவர் நீங்கள். இந்தத் திறமை ஓவியருக்கு அவசியமா?

இதைப் பற்றி நான் நிறைய சிந்தித்திருக்கிறேன். இதற்கான பதில் காலத்துக்கேற்ப மாறிக் கொண்டிருக்கும். பொதுவாகப் பேசும்பொழுது, கலையை முறையாகப் படித்திருந்தால் நம் மனத்தில் உள்ளதை செயல்முறை அறிவின் மூலம் எளிதில் வெளிப்படுத்த முடியும். ஆனால், எல்லோரும் ஒருவிதத்தில் கலைஞர்கள்தான். எப்படியென்றால்... ஒரு விஷயத்தை மற்றவர்களுக்குப் புரியும்விதத்தில் பேசும்போது நாம் பார்வை ரீதிகளான படைப்புகளை அவருடைய மனத்தில் பதிவு செய்கிறோம். எண்ணங்களையும் வார்த்தைகளையும் ஒருவிதத்தில் அமைத்து நாம் சொல்ல நினைப்பதை மற்றவர்கள் புரியும் விதத்தில் சொல்கிறோம். அப்போது நாம் ஏற்படுத்தும் அந்த வரைபடம் இல்லாமல் எதையும் பகிர முடியாது.

நீங்கள் அச்சுக்கலைக்கு வந்தது எப்படி?

அச்சுக்கலை என் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருந்தது. ஆனால், எனக்கு ஒரே ஊடகத்தில் வேலை செய்துகொண்டிருப்பதும் பிடிக்காமலும் இருந்தது. எனக்கு பெரிய அளவில் சிற்பங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஆனால், லலித்கலா அகாடமியில் முதல்நிலை வேலையில் இருக்கும்போது பல வேலை நிமிர்த்தத்தின் காரணத்தினால் எனக்கு அதைச் செய்வதற்கான வாய்ப்பு இயலாமல் போய்விட்டது.

லலித்கலா அகாடமி போன்ற இடத்தில் வேலை செய்வதையும் ஒரு கலைஞனாக இருப்பதையும் எப்படி சமாளித்தீர்கள்?

கற்பனை சார்ந்த வேலையும், நிறுவனம் சார்ந்த ஒரு பொறுப்பும் வெவ்வேறு. ஆனால், இரண்டிலும் நம் அறிவை வேறு வேறுவிதமாகத்தான் உபயோகிக்க வேண்டும். நிர்வாகப் பொறுப்பில் இருக்கும்போது அதிலும் சில நேரங்களில் கலை சிந்தனையுடன் செயல்பட நான் முற்பட்டேன். சிலமுறை அது வெற்றியில் முடிந்தது. ஆனால், பலமுறை அது நான் நினைத்தபடி நிறைவேறவில்லை. இவை ஒன்றுசேர்த்து நிதானமாகச் செயல்படுவது என்பது மிக கடினமானது என்பதை உணர்ந்தேன். ஆனால், நிர்வாகப் பொறுப்பின் மூலம் நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். மேலும், என் ஓவியத்தில் உள்ள சில சிக்கல்களுக்கான பதில், நிர்வாக வேலை செய்யும்போதுதான் கிடைத்தது.

அது எப்படி?

நான் லலித்கலா அகாடமியில் வேலை செய்துகொண்டிருந்த தருணத்தில் என்னுடைய தனிப்பட்ட ஓவியம் சார்ந்த வளர்ச்சியினால் சில சந்தர்ப்பச் சூழ்நிலைகளின் காரணத்தினால், சென்னையை விட்டு லக்னோவுக்கு இட மாற்றாகச் செல்ல வேண்டியிருந்தது. இந்த முடிவு நிர்வாகத்தினால் மாற்ற முடியாததாக இருந்ததால், அந்தச் சூழ்நிலையில் பல காரணங்களினால் என்னால் மனதளவில் அந்த நிகழ்வை ஒப்புக்கொள்ள முடியவில்லை. அந்த நேரம் என் தாயார் அமெரிக்கா செல்வதாக இருந்தார்கள். தன் பயணத்தைப் பற்றிய சில விவரங்களைப் பற்றியும் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்கள். நான் ஏற்கனவே பலவிதமான பதற்றத்திலும், வெறுப்பு உணர்விலும் இருந்ததினால் கோபத்தில் என்னுள்ள விரத்தியில் அவர்களிடம் கடுமையாக பேசி விட்டேன். இதனால் என் வீட்டில், ஒரு பெரிய சர்ச்சை ஏற்பட்டது. இதைக் கேட்ட என் மகளையும் திட்டிவிட்டேன். அதன் விளைவாக எனக்கு நெஞ்சுவலி வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டேன். அந்த நேரத்தில், நான் வீட்டில் இருக்கும்போது என் மனைவியின் சக ஆசிரியை ஒருவர் போன் செய்து உடனே CNN தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கச் சொன்னார். அப்போது தொலைக்காட்சியில் இரண்டு விமானங்கள் நியூயார்க் நகரத்தில் உள்ள ட்வின் டவர்களை ஒன்றின் பின் ஒன்றாக வந்து மோதும் காட்சியைப் பார்த்தேன். அது எனக்குப் பரிச்சயப்பட்ட இடம்.

நான் நியூயார்க் நகரத்தில், 1993இல் இருந்தபோது அந்த இடத்துக்குச் சென்றிருக்கிறேன். விமானம் மோதுகின்ற நிகழ்ச்சி ஒருவித திரைப்பட நாடக மாதிரியாக இருந்தது. விடுமுறையில் இருந்து நான் குணமடையும் அந்த நாட்களில், எப்போதும் தொலைக்காட்சியில் இதையொட்டி உள்ள செய்திகளைப் பார்ப்பதும், செய்தித்தாள்களில் வரும் செய்திகளைப் படிப்பதுமாக இருந்தேன். இப்படியாக, ஒரு மாதம் கழிந்தது. இதனுடைய பாதிப்பு என்னை அறியாமலே நான் செய்தித்தாளில் உள்ள வெறும் வெள்ளை நிற பகுதிகளில் கிறுக்கிய பல கோடுகள் ஒரு மாதத்துக்குப் பிறகு பார்க்கும்போது ஓவியமாக எனக்குத் தென்பட்டது. அப்போது September-11 தீவிரவாதத் தாக்குதலுக்கும் என் வாழ்க்கையில் நடந்துகொண்டிருந்த சம்பவங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருந்தது போன்று எனக்குப் புலப்பட்டது.

நான் கிறுக்கிய உணர்வுபூர்வமான கோடுகள் எல்லாம் வரைபடங்களாக ஆகும்போது உலக தலைவர்களின் மற்றும் சிந்தனையாளர்களின் அந்த தீவிரவாதிகளின் தாக்குதல் பற்றிய அறிக்கைகளும், பார்வைகளும் எனது ஓவியத்துக்குத் தலைப்புகளாக ஆகியது. அதுவரை, நான் எப்போதும் Graphic ஊடகம் மூலமாகவே தான் எனது படைப்புகளை செய்துகொண்டிருந்தேன். September-11 நிகழ்ச்சிப் பிறகு எனது படைப்புகளில் சுதந்திரமான உணர்வுபூர்வமான கோடுகள், அதன் நிலைப்பாட்டை தனி தன்மையுடன் வெளிப்படுத்த எனது படைப்புகள் வரத் தொடங்கின. இது எந்தவித கட்டுப்பாட்டுக்கும் இடையிலும் உருவாகவில்லை. இப்படியே எனது படைப்புகளில் சுதந்திரமான கோடுகள் இயற்கையாகவும், யதார்த்தமாகவும் அமைந்தன.

நீங்கள் டிஜிட்டல் ஊடகத்தைப் பயன்படுத்தியதுண்டா?

நான் 1996இல், ஆக்ஸ்ஃபோர்டில் இருந்த நேரத்தில் பல படங்களைத் தொடர் கோப்புகளாக (Series) செய்தேன். நான் அப்போது செய்த படைப்புகளைப் போல் நிறைய கலைஞர்கள் இன்றைய காலத்தில் அதன் அடிப்படையில் செய்கிறார்கள். ஆனால், ஏதோ ஒரு விதத்தில் அந்த ஊடகம் என் மனத்தை அப்போது மிகவும் கவரவில்லை, எனக்கும் அதை உபயோகப்படுத்தும் அறிவு ஓரளவுதான் இருந்தது. பொதுவாக கலை என்பது படைப்பாளியின் சுய வரலாற்றை (Personal History) சார்ந்ததாகவோ அல்லது அதன் முழு வெளிப்பாடாகவோ இருக்க வேண்டும். அந்த வரலாற்று தன்மையின் போக்கு, செய்கிற படைப்புகளில் இல்லாமல் இருந்தால், பிற்காலத்தில் படைப்பின் நிலைமை கேள்விக்குறியாக்கப்படும்.

இது இப்படி இருந்தாலும், சில கலைஞர்கள் தங்கள் சுயசரிதையை மட்டும் மையமாகக் கொள்ளும்போது மற்றவர்கள் அந்தப் படைப்பைச் சரியாக உள்வாங்க முடியுமா?

அது இல்லை. நான் சொல்லும் சுயம் என்பது (Personal History) நம்மைச் சுற்றி நடக்கும் பல விஷயங்கள். இதைப் படைப்புகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. சுயமும், அதைச்சுற்றி நடக்கும் சம்பவங்களும், உலக நடப்புகளும் ஒன்றுசேர்ந்து படைப்புகளில் வெளிவரும்போதுதான், அது கலையாகும். அத்தகைய கலைப் படைப்புகள் காலத்தை வெல்லும். நான் வரையும்போது உடனே அறியப்படுகின்ற உருவங்களின் தன்மைகள், தெரிந்த உருவங்கள் தென்படுமேயானால், அதை நீக்கி விடுவேன். படைப்புகளில் கலை தன்மைகளைப் பயன்படுத்தும்போது எல்லாவற்றையும் தாண்டி எனது கோடுகள் முழு அரூபத் தன்மைக் கொண்டதாக (Pure Abstraction) இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்னுடைய கோடுகள் அதற்கென்றே உள்ள வெளியையும் (The Space), அதன் இயக்கத்தையும், அசைவையும் (Movement), அதிர்வையும் (Vibration) காட்ட வேண்டும் என்றும் தீர்க்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வெளி என்பது பிரபஞ்சம் மற்றும் புறவெளியை மட்டும் சார்ந்து இல்லாமல் கோடுகளுக்கு உள்ளே உள்ள வெளியையும் (Internal Space) வெளிப்படுத்துவதாகவும், பிரதிபலிப்பதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த கோடுகளும், அதன் இயக்கங்களும், இந்த பிரபஞ்சத்தை உணர்ந்ததாக இருக்கும்.

நம் நாட்டில் அச்சு ஊடகத்தை மற்ற ஊடகங்களுக்குக் கொடுக்கும் அதே மதிப்பு தருகிறோமா?

அச்சு ஊடகத்தின் மூலம், ஒரே நேரத்தில் பல படைப்புகளைச் செய்யலாம். ஆனால், நான் அச்சு ஊடகத்தைத் தேர்ந்தெடுக்க காரணம் அதுவல்ல. அந்த ஊடகத்தின் மற்ற சாத்தியங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. எப்படி கோட்டின் சுயத்தன்மை முக்கியமோ, அதேபோல் கலை செய்யும் முறையும் (Process) எனக்கு மிக முக்கியம். படைப்பின் செய்முறையில் தான் நான் இருப்பேன். 1980களில், எனது வரைவுருவ பதிப்பு ஓவியங்களில், எனது பதிப்பு ஓவியத்துக்கான தகட்டை உருவாக்கும்போது, நான் ஏற்படுத்தும் நிறம் (Colour Combination), பதிப்பு (Print-making), அந்தக் கலையில் உருவாக்கும் முறையிலிருந்து பிரித்துவிட்டால் அது வெறும் படமாக மட்டுமாகவே இருக்கும். கலை என்பது Pictorial மட்டும் அல்ல. அதில் பல கூறுகளும், தன்மைகளும் உண்டு. நம் அனுபவங்கள், எண்ணங்கள், சுற்றி நடக்கும் விஷயங்கள், அதன் சாரா அம்சங்கள் மற்றும் அதைச் செய்கின்ற முறை மற்றும் அமைப்புகள் எல்லாம் கலையில் ஒருங்கிணைந்து அடங்கும். ஆனால், சமீப காலங்களில், சில ஓவியர்கள் தங்களுடைய பெரும்பான்மையான படைப்புகளை வெட்டி ஒட்டும் உணர்வுகளுடன் மற்றும் அனுபவங்கள் அற்ற முறையிலேயே பலவிதமான ஆரவாரங்களுடன் வெளிப்படுத்துகிறார்கள். இத்தகைய ஒரு ‘readymade’ சிந்தனை படைப்புகளில் இருக்கும்போது அதைச் செய்யும் கலைஞனின் இடம் அதற்குள் எங்கே? கலை, கடையில் உள்ள விற்பனைப் பொருள் போல் மாறிவிடுகிறது.

அது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறதா?

ஆம். சில நேரங்களில் கோபத்தையும் ஏற்படுத்தும். நான் பல நாடுகளில் அருங்காட்சியகங்களுக்குச் சென்றுள்ளேன். கடந்த 20 வருடங்களாக இணையதளங்களின் போக்குகளையும் நன்கு அறிவேன் மற்றும் வேறு பல காரணங்களிலிருந்தும் பல கலைப் பொருட்களைப் பற்றி அறியப்பட்டுள்ளேன். அதனால் பல கலைஞர்களின் உத்வேகத்தை பற்றியும், அவர்கள் படைப்புகளில் உள்ள அடித்தள கூறுபாடுகளையும் அவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பதையும் என்னால் எளிதில் பார்க்க முடிகிறது.

ஒன்றுக்குப் பிறகு இரண்டு வரும் அதன் பிறகு மூன்று. கலை என்பதில் இப்படி ஒரு பரிணாம வளர்ச்சிப் பாதை இருக்கிறது. என் படைப்புகளிலும் அது இருக்க வேண்டும் என்றுதான் என் நிலைப்பாட்டை வைத்துள்ளேன். மைக்கேல் ஏஞ்சலோ, ரெம்பிரான்ட், பிக்காஸோ, ஜோசப் பாயிஸ் மற்றும் எனது நிலத்தைச் சேர்ந்த ஓவியர்களும், சிற்பிகளும் இல்லாமல் அவர்களது வளர்ச்சி பாதை தெரியாமல் நான் இல்லை. இப்படி ஒரு கலைக்கான பாதை இருக்கிறது. காலம், இடம், நேரம் மற்றும் அதன் இயக்கம் தழுவிய பாதையைப் பெரும்பாலான சந்தையில் உள்ள கலைஞர்கள் உணர்வதில்லை.

உங்கள் படைப்புகளில் வண்ணத்துக்கான இடம் என்ன?

முன்பு நான் பதிப்போவியங்கள் (Print-making) செய்யும் காலங்களில் பதிப்போவியத் தகட்டை உருவாக்கும்போது, எதிர்பாராதவிதமாக தகட்டில் வரும் விளைவுகளுக்கு (Accidental Effects) புரிந்துகொண்டு அதன் வழியில் சென்று என் விருப்பத்துக்காக மாற்றியதும் உண்டு. அதனால் எனது பதிப்போவியத்தில் வண்ணச் சேர்க்கையில் தன்மை தனித்துவமாக இருந்தது. 1980களில் நடுவில் மற்றும் அதன் பின்பகுதிகளில் பதிப்போவியங்களின் ஆதாரமான தகட்டின் உருவாக்கும் காலங்களில் எனது பதிப்போவியத்திலிருந்து வெளிவரும் வண்ணச் சேர்க்கைகளின் தன்மை எனக்கு புரிந்திருந்ததால், எனது முழு கவனமும் பதிப்போவியத் தகடை உருவாக்குவதிலே முக்கியத்துவம் அளித்தேன். இதனால், இறுதியில் வரும் படைப்பு மிகவும் நேர்த்தியாகவும், பல வண்ணச் சேர்க்கைகள் கொண்டதாக இருந்தது. இயக்கத்தின் வெளிபாடாக பல நிற வரை கோடுகளையும் இணைப்பதுண்டு.

உங்கள் படைப்புகளில் சில காலங்களில் வடிவங்களுக்கு (Shapes) அதிக முக்கியத்துவம் உண்டே...

முன் சொன்னது போல, சில காலகட்டங்களில் என் படைப்பில் பௌதீகம் மற்றும் இயற்பியல் சார்ந்த வெளிப்பாடுகள் சார்ந்த தன்மைகள் அதிகமாக இருக்கும். நான் விமானத்தில் போகும்போது கவனித்தது என்னவென்றால், நிலத்துக்கான பலவிதமான உருவ அமைப்புகள் (Land Pattern) உள்ளன. அது விமானத்தின் அசைவுக்கும், இயக்கத்துக்கும் ஏற்ப மாறுபட்டுக் கொண்டே இருக்கும். அதில் நிறைய இயற்கையின் நெசவுகளின் தன்மை (Textures) கூட இருக்கும். அதன் அனுபவங்கள் மற்றும் அதன் பாதிப்புகளினால், 1992இல் இருந்து 1996 வரை பல வடிவ அமைப்புகளையும் மற்றும் அதன் பின்னணி இயக்கங்களில் தன்மையை மையமாகக் கொண்டு நிறைய படைப்புகளை ‘ஆற்றல் மற்றும் நில கட்டமைப்புகள்’ (Energy- Land- Architecture) என்ற தலைப்புகளில் செய்தேன். அதில் ஆற்றல் (Energy) என்பது உயிர் அசைவைக் குறிக்கும். Land- Architecture என்பது மக்களின் கலாச்சார அடிப்படையில், மக்கள் குழுவின் மனப்போக்கின் மாற்றங்களினால் விளையும் தன்மையைப் பற்றியும், கால மாறுபாடுகளினால் ஏற்படும் இயற்கையின் நிலம் சார்ந்த வெளிகளைப் பற்றியும் வெளிப்படுத்தும். எனது படைப்புகளில் சில காலங்களில் பொருட்களின் தன்மை, அதன் விளக்கத்தின் வெளிப்பாடுகளில் உளவியலின் சாரா அம்சம் மிகுதியாகவும், சில காலங்களில் எனது படைப்புகளில் பெளதீகம் மற்றும் இயற்பியல் சார்ந்த தாக்கம் (Pictorial Aspect) அதிகமாகவும் இருக்கிறது.

மதராஸ் கலை இயக்கத்தைச் (Madras Art Movement) சார்ந்ததாக உங்கள் படைப்புகளைப் பார்ப்பது சரியா?

மூத்த ஓவியர்கள் வாசுதேவ், நந்தகோபால் போன்ற கலைஞர்கள் என் படைப்புகளை மதராஸ் கலை இயக்கத்தைச் சார்ந்ததாகவே கருதினார்கள். ஏனென்றால், என் படைப்புகளில் கோட்டோவியத்தின் தன்மை மேல் ஓங்கியதாக இருந்தது. ஆதிகாலத்திலிருந்து இப்போது வரை கோடு என்பது இல்லாமல் படைப்போவியங்கள் கிடையாது. ஆனால், மதராஸ் கலை இயக்கத்தின் பல தனித்துவங்களில் ஒரு முக்கியமான தனித்துவம் என்னவென்றால் உருவங்களின் தோற்றங்கள் வரையும்போது சில இடங்களை காலியாக விடுவார்கள். முழுமை பெறாத ஒரு தன்மை இருக்கும். அதனால் கோட்டை, சில இடங்களில் நாம் கற்பனையாக பாவிக்க இடம் கொடுக்கப்பட்டிருக்கும். புறவெளியும், உள்வெளியும் ஒன்றர கலந்திருக்கும். அது எனக்கு உத்வேகம் தருவதாக இருந்தது. இந்தத் தன்மையை, என் ஓவியத்திலும் ஒரு சில இடங்களில் கையாண்டுள்ளேன். அதனால் என்னை இந்த இயக்கத்துடன் இணைத்துப் பார்க்க முடியும். உங்கள் கேள்விக்கு இதுதான் என் பொதுவான பதில்.

ஆனால் எந்த ஓர் இயக்கத்தின் வரையறைக்குள்ளும், நான் சிக்கிக்கொள்ள விருப்பப் படவில்லை. ஏனென்றால், என் படைப்புகள் என் மனதையே பரப்பளவாகக் கொண்டு இயங்குகின்றன (Mind as Space). எந்த ஓர் இயக்கத்தின் எல்லைக்குள் இல்லையென்றாலும் எனக்கு முன்வந்த கலைஞர்கள் இல்லாமல் நான் இல்லை. அவர்கள் செய்த படைப்புகளும் இன்று என் எண்ணங்களுடன் பின்னிப் பிணைந்தவைதாம். இத்தகைய கலை வளர்ச்சிப் பாதையில் தான் நான் வருகிறேன்.

நான் ஒரு படைப்பை உருவாக்கும்போது, அதேபோல் வேறு யாராவது ஒருவர் செய்திருக்கிறார் என்பதை அறிந்தால் அந்தப் பாதையில் நான் செல்ல மாட்டேன். அது உலகத்தின் எந்தப் பகுதிகளில் இருந்தாலும் சரி. முன்னமே அலசி ஆராயப்பட்ட ஒரு விஷயத்தை மீண்டும் செய்வதில் என்ன பயன்? முன்காலத்திலிருந்தே இது, என் கலை சார்ந்த அடிப்படை கருத்து. கலை என்பது என் பார்வையில் அழகுணர்வு கொண்ட விஞ்ஞானம் போன்றது. ஒரு புதிய வளர்ச்சிப் பாதையை ஏற்படுத்த வேண்டும். அது மனித வர்க்கத்துக்குப் புதிய அழகுணர்வு சேர்ப்பதாக இருக்க வேண்டும்.

இது இப்படி இருந்தாலும் அதே ஒரு விஷயத்தை இரண்டு நபர்கள் அணுகும்போது ஒவ்வொருவருடைய பார்வையும் வேறுவிதமாகத்தான் இருக்கும். அதைத்தான் பார்வையின் உத்வேகம் (visual inspiration) என்று சொல்லலாம். எனக்குக் கூட சில அமெரிக்க ஓவியர்களின் படைப்புகள் மிகவும் பிடிக்கும். அதேபோல் எனக்கு மேக்ஸ் எர்ன்ஸ்ட் (Max Ernst), மார்செல் டுச்சாம்ப் (Marcel Duchamp), அன்செல்ம் கீஃபர் (Anselm Kiefer), சிக்மர் போல்கே (Sigmar Polke), ஜோசப் பியூஸ் (Joseph Beuys) போன்றவர்களின் படைப்புகளும் பிடிக்கும் ஏனென்றால் ஒரு கருத்தை கலை அனுபவமாக மாற்றியிருப்பார்கள்.

மிகவும் தத்துவம், கருத்துகள் சார்ந்ததாக (Conceptual) வேலை செய்யும் ஒரு கலைஞனின் படைப்பை அணுகும்போது அந்தக் கலைஞன் உண்மையான தன்மையுடன் படைத்திருக்கிறாரா அல்லது இது ஒரு டிரெண்ட் அடிப்படையில் படைத்திருக்கிறாரா என்பதை எப்படி எடை போட முடியும்.

இதற்கு சுலபமான பதில் உள்ளது. எல்லாவற்றுக்கும் அதற்கான ஒரு வளர்ச்சிப் பாதை உள்ளது. ஒரு கலைஞனின் படைப்பில் உள்ள உண்மைத் தன்மையை அறிய அந்தக் கலைஞனின் பாதையை ஆராய வேண்டும். மார்செல் டுச்சாம்ப் (Marcel Duchamp), அன்செல்ம் கீஃபர் (Anselm Kiefer), சிக்மர் போல்கே (Sigmar Polke), ஜோசப் பியூஸ் (Joseph Beuys) போன்றவர்களின் படைப்பைப் பார்த்தால் அது அவ்வளவாக உடனே புரிந்து விடாது. அவர்களுடைய படைப்புகளின் பரிணாம வளர்ச்சி ஓர் அளவாவது புரிய முயற்சி செய்தவர்களுக்கு மட்டுமே அவர்களின் படைப்புகளின் உள்ள உண்மையான உயர் தன்மை புரியும்.

உன் படைப்பில் கையொப்பம் இல்லாமலேயே அது உன்னுடையது என்று எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும். இப்படி சில ஓவியர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்... இது சரியா?

பகுதி 1 - வளர்ப்பும் வண்ணங்களும்...

பகுதி 2 - பரிணாமங்களும் பரிமாணங்களும்...

தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில்...

கட்டுரையாளர் குறிப்பு:

வைஷ்ணவி ராமநாதன்

Curator மற்றும் கலை எழுத்தாளர். சென்னையிலும் பெங்களூரில் உள்ள சித்ர கலா பரிஷத்தில் நுண்கலை படித்தவர். இப்பொழுது சென்னை அரசு நுண்கலைக் கல்லூரியில் பகுதி நேர Art History ஆசிரியராக இருக்கிறார். மின்னம்பலத்தின் வெளியீடான 'உருவங்கள் உரையாடல்கள்' நூலின் ஆசிரியர்.

.

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

வெள்ளி 14 ஜன 2022