பாலினத்தை நிரூபிக்க திருநங்கைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

public

திரிபுராவில் காவல் நிலையம் ஒன்றில், திருநங்கைகள் தங்கள் பாலினத்தை நிரூபிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி ஆடைகளைக் களையச் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலம் அகர்தலா பகுதியில், கடந்த சனிக்கிழமை இரவு, நான்கு திருநங்கைகள் ஹோட்டல் ஒன்றில் விருந்து முடித்து இல்லம் திரும்பியுள்ளனர். அப்போது பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பதாக அந்த திருநங்கைகள் மீது வந்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும் மேற்கு அகர்தலா மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற காவலர்கள் அங்கு திருநங்கைகளின் பாலினத்தை அறிய வேண்டும் என அவர்களின் ஆடைகளையும், அவர்களின் செயற்கை முடியையும் கட்டாயப்படுத்திக் களைந்து சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட திருநங்கைகளில் ஒருவர், “எங்களின் ஆடைகளைக் களையச் செய்தது மட்டுமல்லாமல், இனி கிராஸ் டிரஸ் அணிந்து நகரங்களில் சுற்ற மாட்டோம், அப்படிச் சுற்றினால் கைது செய்யப்படுவோம் எனக் கட்டாயப்படுத்தி எழுதி வாங்கிக்கொண்டார்கள், மேலும், எங்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்தது மட்டுமல்லாமல், அங்கு நாங்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளோம். எங்களுக்கு நீதி வேண்டும்” என்று கைது செய்யப்பட்ட திருநங்கைகள் நால்வரில் ஒருவர் அந்த காவலர்கள் மீது புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக LGBT சமூக ஆர்வலர்கள், “உச்ச நீதிமன்றத்தின் தேசிய சட்டச் சேவைகள் ஆணையத் தீர்ப்பின், 377வது பிரிவின் மூலம் வழங்கப்பட்ட தனியுரிமைக்கான உரிமை மீறப்பட்டுள்ளது” எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், LGBT சமூக உரிமை போராளி சினேகா குப்தா ராய், செய்தியாளர்களிடம் இது தொடர்பாக வழங்கிய பேட்டியில், “இந்த சம்பவத்தின் காணொலிக் காட்சிகள் பல்வேறு ஊடக தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி நான்கு பேரின் குடும்பங்களுக்கும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு சமூக வலைதளங்களில் அம்மாநில போலீஸாருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *