மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

சம்பளம் வழங்கக்கோரி பயிற்சி டாக்டர்கள் போராட்டம்!

சம்பளம் வழங்கக்கோரி பயிற்சி டாக்டர்கள் போராட்டம்!

வேலூர், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மூன்று மாத சம்பளம் வழங்கக்கோரி பயிற்சி டாக்டர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நான்கு ஆண்டுகளுக்குமேல் எம்பிபிஎஸ் படித்து முடித்த மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது மருத்துவமனையில் சுமார் 100 பயிற்சி மருத்துவர்கள் பணியில் உள்ளனர். அவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக பயிற்சி ஊதியம் வழங்கப்படவில்லை.

மேலும் கொரோனா ஊக்கத்தொகை மற்றும் ஜூலை மாத சம்பள நிலுவை ஆகியவை 50 சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் மூன்று மாதங்களாகப் பயிற்சி டாக்டர்கள் சம்பளம் கேட்டு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களுக்கான சம்பளத்தை இன்னும் வழங்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பயிற்சி டாக்டர்கள் அனைவரும் நேற்று காலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு திரண்டு சம்பளம் வழங்க கோரி கோஷமிட்டனர்.

தகவல் அறிந்ததும் கல்லூரி டீன் செல்வி மற்றும் மருத்துவ அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமாதானம் அடையாத பயிற்சி டாக்டர்கள் கல்லூரியின் கலையரங்க அறையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பேசியுள்ள பயிற்சி டாக்டர்கள், “எங்களுக்கு மாதம்தோறும் ரூ.25,000 பயிற்சி ஊதியமாக வழங்கப்படுகிறது. மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. கொரோனா ஊக்கத்தொகை 15,000 ரூபாய்க்கு பதில் ரூ.7,000 மட்டுமே வழங்குகின்றனர். அதேபோல் ஜூலை மாத சம்பளம், அரியர் பணமும் குறைந்த அளவே வழங்கி உள்ளனர்.

மற்ற மருத்துவக் கல்லூரிகளில் முறையாக சம்பளம் வழங்கும்போது இங்கு மட்டும் ஏன் வழங்கப்படவில்லை என்பது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. முறையான சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளனர்.

பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தால் நேற்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. கொரோனா தொற்று பரவல் காலத்தில் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். அங்கு அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மருத்துவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். அப்போது ஆட்சியர் அவர்களிடம், “உங்களது கோரிக்கை குறித்து ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உங்களுக்கான ஊதியம் வழங்கப்படும்” என்றார்.

அப்போது மருத்துவர்கள், “எங்களுக்கு உத்தரவாதம் தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். அப்போது ஆட்சியர், “உத்தரவாதம் வழங்கப்படாது. ஆனால் கோரிக்கை குறித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து பேசியுள்ள பயிற்சி மருத்துவர்கள், "மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தரவாதம் தரப்படவில்லை. ஓரிரு நாட்களில் ஊதியம் தருவதாகத் தெரிவித்துள்ளனர். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்" என்றனர்.

-ராஜ்

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

புதன் 12 ஜன 2022