மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்யுங்கள்: மத்திய அரசு!

ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்யுங்கள்: மத்திய அரசு!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது.

நாட்டில் நேற்று முன்தினம் 1.68 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு தினந்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

கடந்த அலை உச்சத்தில் இருந்தபோது, நாட்டில் மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று(ஜனவரி 12) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,” கொரோனா அதிகரித்து வருவதால், அனைத்து சுகாதார நிலையங்களிலும் போதிய அளவு மருத்துவ ஆக்சிஜன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். சுகாதார நிலையங்களுக்கு தேவையான திரவ மருத்துவ ஆக்சிஜன் சரியான அளவில் தொடர்ந்து கிடைக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களும் தங்களுக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் முழுமையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

நாடு முழுவதும் உள்ள சுகாதார நிலையங்களில் உள்ள PSA பிளாண்ட்கள் முழுமையான அளவில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவற்றை முறையாக பராமரிக்க வேண்டும்.

திடீரென ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் அதற்கான பேக்கப் வசதி மற்றும் விரைவாக நிரப்பும் வசதிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தேவையின் உச்சக்கட்டத்தில் தனியார் துறையைப் பயன்படுத்துவதற்கான சாத்தியமான உத்திகள் குறித்தும் ஆராய்ந்து வைத்திருக்க வேண்டும்.

ஆக்சிஜன் டெலிவரி உபகரணங்களை பயன்படுத்த போதிய பயிற்சி பெற்ற மனித வள மேம்பாட்டு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

புதன் 12 ஜன 2022